பிள்ளைகளைப் பிரியாத பிதா
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். (ஆதி 39:1,2)
துன்பங்களைச் சந்திக்கும்போது, கர்த்தர் தூரத்தில் நிற்கிறாரோ? என்ற கேள்வி ஆவிக்குரிய வாழ்க்கையின் அஸ்திபாரத்தையும்கூட சில நேரங்களில் துளையிடத் தொடங்கிவிடுகின்றது. சத்துருக்கள் சூழ நின்றுகொண்டிருக்கும்போது, சத்துருக்களின் ஓசையே எங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும்போது, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் இயேசு கிறிஸ்துவும், கல்லெறியப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஸ்தேவானும் பிதாவை நோக்கிப் பார்ப்பதையும் பேசுவதையுமே முன்மாதிரியாக்கிக் கொண்டவர்களாக, அதனையே தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அனுபவமாக்கிக்கொண்டு வாழும் மனிதர்கள் சிலரே. இத்தகையோரின் சிந்தயில், தங்களை உபத்திரப்படுத்தும் மனிதர்கள் அல்ல; உடனிருக்கும் பிதாவே உறைந்திருப்பார் என்பது நிச்சயம்.
சத்துருவாகிவிட்ட சகோதரர்களால், மீதியானியரிடத்தில் யோசேப்பு விற்கப்பட்டபோது (ஆதி. 37:28), சகோதரனாகிய யோசேப்போடுகூட கர்த்தரும் எகிப்துக்குச் செல்லுகின்றார் என்பதை சகோதரர்கள் அறியாதிருந்தார்கள். அவ்வாறே, போத்திபார் யோசேப்பை விலைக்கு வாங்கியபோது, 'இலவசமாக கர்த்தரும் யோசேப்போடுகூட போத்திபாரின் வீட்டிற்குக் கிடைத்தார்.' கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டான் (ஆதி 39:3) என்றே வேதத்தில் வாசிக்கின்றோம். 'அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்' (சங் 1:3) என்ற சங்கீதக்காரனின் வார்த்தை யோசேப்பின் வாழ்க்கையில் துல்லியமாக நிறைவேறுகின்றதே. போத்திபாருக்கும், கர்த்தருக்கும் இடையில் எவ்வித உறவும் இல்லாதிருந்தும், யோசேப்பின் மூலமாக ஆசீர்வாதம் என்னும் போர்வை போத்திப்பாரின் வீட்டை மூடியிருந்ததே! யோசேப்பின் தகப்பனான யாக்கோபின் வாழ்க்கையிலும் நடந்தது இதுதானே. தனது மாமனாகிய லாபானுடைய வீட்டில் யாக்கோபு தங்கியிருந்தபோது, லாபான் கர்த்தரை அறியாதவனாயிருந்தபோதிலும், லாபானின் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தாரே. லாபான் யாக்கோபை நோக்கி, 'உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்' என்று குறிப்பினால் அறிந்தேன் (ஆதி 30:27) என்றல்லவா சொல்லுகின்றான். தேவ பிள்ளைகள் எங்கே இருந்தாலும், அங்கே தேவனும் கூடவே இருக்கிறார் என்பது எத்தனை உண்மை.
அந்த மீதியானியர்களோ 'யோசேப்பை தங்களுள் ஒருவனாகவும், தங்களோடுகூட வைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை; அதற்காக அவர்கள் அவனை வாங்கவுமில்லை;' மாறாக, தாங்கள் வாங்கின விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு அவனை விற்று தங்களுக்கு இலாபம் சம்பாதிக்கவே விரும்பினர். அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள் (ஆதி 37:36). உயர்ந்த விலை கிடைக்கும் என்ற எண்ணத்தில், அவனை எகிப்தின் உயர்ந்த ஸ்தானத்திலிருந்த போத்திப்பாரினிடத்தில் விற்றார்களோ? எது எப்படியாயினும், கர்த்தரோ, உயர்வான இடத்திற்கு உயர்த்தும் படியாகவே போத்திப்பாரின் வீட்டு வாசலுக்குள் யோசேப்பை பிரவேசிக்கச் செய்தார். தங்களுடைய இலாபத்திற்காக, மனிதர்களை மந்தையில் வைத்திருக்கும் மீதியானியரைப் போன்ற மனிதர்கள் இன்றும் உண்டு. இத்தகைய மனிதர்களைப் பற்றியே பேதுருவும், கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் என்றும், அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும் என்றும், பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது (2பேது 2:1-3) என்றும் எழுதுகின்றார். அப்படியே இயேசு கிறிஸ்துவும், மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள் (மத் 23:14) என்று எச்சரிக்கின்றார்.
ஆனால், பிதாவோ, தன்னோடுகூட நம்மை வைத்துக்கொள்ள, தன்னுடைய ஒரே பேரான குமாரனையே விலையாகக் கொடுத்தாரே. இதனையே பவுல், 'கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே' (1கொரி 6:19,20) என்று எழுதுகின்றார். பிள்ளையைக் கொடுத்து, நம்மை பிள்ளைகளாக்கிக்கொண்டதோடு மாத்திரமல்லாமல்,
நம்மை விட்டுப் பிரியாமல் அவருக்கு ஆலயமாக்கியும் அழகுபார்க்கின்றாரே. நாம் அடிமைகளாக அல்ல, பிள்ளைகளாகவே வாங்கப்பட்டிருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக