உயிரற்ற உதடுகள்
இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். (ஆதி 31:44,45)
இந்த உலகத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் தேவன் சாட்சியாக இருக்கிறார். மனிதர்களோடு பேசினாலும், மனதோடு பேசினாலும்,, கர்த்தருடைய செவிகளுக்கு அவைகளை நாம் மறைத்துவிட முடியாது. எனவே, கர்த்தருடைய ஞானத்தைப் பெற்ற சாலமோன், 'ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப்பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்' (பிர 10:20) என்று நம்முடைய எண்ணத்திற்கும் எட்டுவதற்குக் கடினமான காட்சியினை எழுதி உணர்த்துகின்றான். தீர்க்கதரிசியாகிய ஆபகூக் இதனைக் குறித்து, 'தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ! அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தாய். கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும் (ஆப 2:9-11) என்று உரைக்கின்றாரே.
அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீPழ் நாட்டி, எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி, யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்திரத்திற்கு அனுப்பிவிட்டான் (யோசு 24:25-28)
மேலும், பரிசேயரில் சிலர் இயேசுவை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். அப்பொழுது, 'அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றாரே (லூக் 19:40). நம்முடைய அறிவுக்கு எட்டுவது கடினமானதே; என்றபோதிலும், உலகத்தில் நாம் பேசக்கூடாதவைகளோடெல்லாம் அவரால் பேசக்கூடும்; அவைகளின் சத்தத்தையும் அவரால் கேட்கக் கூடும். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் (மத் 12:36) என்று இயேசு போதித்தாரே. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது (சங் 19:1-4) என்பதே சுற்றியிருப்பவைகளைக் குறித்து நமக்குச் சொல்லப்படும் செய்தி.
மற்றவர்கள் மீது நாம் வீசும் கற்களும் நம்மைக் காட்டிக்கொடுக்கப் போதுமானவைகளே. ஸ்தேவானை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள் (அப் 7:58,59). ஒருவேளை, எல்லாரும் எறிகிறார்கள் என்று நாமும் சில மனிதர்கள் மீது கற்களை எறிந்துவிட்டு ஓடிவிட நினைக்கலாம்; என்றாலும், எறியப்பட்ட கற்களிடமே, அவைளை எறிந்தது யார்? என்பதைக் கேட்டறியும் ஆண்டவரின் வல்லமையினை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். பேசமாட்டாதவைகள் என்று நாம் நினைப்பவைகளெல்லாம், அவருடைய பார்வையில் பேசக்கூடியவைகளே. உயிரற்றவைகளுக்கு முன் நாம் உதடுகளை அசைத்தாலும், அதன் எதிரொலி, உன்னத்தின் செவிகளிலேயே போய்ச் சேரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக