புதன், 13 அக்டோபர், 2021

செயலிழந்த சந்ததி (ஆதி. 35:2)

 செயலிழந்த சந்ததி



தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு (ஆதி 35:1) என்று சொன்னபோது, யாக்கோபோடுகூட இருந்த ஜனங்கள், மூன்று காரியங்களைச் செய்தார்கள். முதலாவது, தங்களிடத்திலிருந்த அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டார்கள், இரண்டாவதாக தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள், மூன்றாவதாக வஸ்திரங்களை மாற்றினார்கள். (ஆதி. 35:2) 


அந்நிய தெய்வங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; அந்த அருவருப்பு அதனை வைத்திருந்தவர்களையும் அசுத்தமாக்கியிருந்தது. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும்கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும்தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள் (சங் 115:4-8; சங். 135:15-18). விக்கிரகங்களால் ஒன்றும் செய்ய இயலாது; எனினும், அவைகளை வணங்குகின்ற மனிதர்களையோ  அது தன்னைப்போலவே மாற்றிவிடுகின்றது.  விக்கிரகங்களை வணங்குகிறவர்களை மாத்திரமல்ல, விக்கிரக வணக்கத்திற்குட்பட்டவர்களோடு உண்டாகும் தொடர்பும் நம்முடைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துவிடக்கூடும். விக்கிரகம் போன்ற செயலற்ற நிலையில் வாழும் மனிதர்கள், உங்களையும் செயலற்ற நிலைக்குத் தள்ளிவிடக்கூடும். (1இராஜா. 11:3) 

உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது: அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன் (எரே. 2:34) என்று சொல்லுமளவிற்கு, அசுத்தம் அநேகருடைய வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட மனிதர்களையே, மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார் (எசே 12:2) என்று எசேக்கியேலுக்குச் சுட்டிக்காட்டுகின்றார் ஆண்டவர். கர்த்தரை அறியாதவர்களின் கண்களை காரிருளே மூடியிருக்கும்.

இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள் என்றும், கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி (ரோம 11:7,8) இருதயத்தைக் கடினப்படுவதினால் கண்கள் இருளடைந்துவிடுகின்றது.  ராஜ்யத்தின் சுவிசேஷம் சொல்லப்படும்போது விசுவாசியாதவர்களின் கண்களும் இருளடைந்துவிடுகின்றது (யோவான் 12:39,40), சுவிசேஷத்தை விசுவாசியாதபடி தங்கள் காதுகளை அடைத்துக்கொள்ளுவார்களென்றால், ரகசியத்தைக் கேட்காதபடி, அத்தகையோரின் கண்களையும், காதுகளையும் கர்த்தர் அடைத்துப்போடுவார். (மாற். 4:12) 

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தபோது, அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டபோது, இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? (மாற் 8:15-18) என்று சொன்னாரே. ஆவிக்குரியவர்களாயிருந்தும், 'இருதயத்தில் கடினமிருந்தால்' சத்தியத்தின் சத்தம் சரியாகக் கேட்காதபடி நமது செவிகள் மந்தமாகிவிடும், பார்வையும் பறிபோய்விடும் உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். (மத் 13:16)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக