உறவுக்காக ஓர் உதறல்
அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். (ஆதி 29:8)
வீட்டை விட்டு வெளியே, தாய் காட்டின வழியே, பதற்றத்துடன் யாக்கோபு தன் பிரயாணத்தத் தொடர்ந்தபோது, இடையில் சொப்பனத்தில் அவனது ஆன்மீக விழிகளைத் திறந்து 'நான் உன்னோடிருக்கிறேன்' என்று உணர்ந்தினார் ஆண்டவர். என்றாலும், ஆண்டவர் இருக்கும் இடத்தில் பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், நினைத்துக்கொண்டிருக்கும் இடத்தை நோக்கியே நீண்டது அவனது பயணம். ஊருக்குள் நுழைந்ததும், ஓர் உறவையே தேடினான் யாக்கோபு. யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் சேத்தில் போய்ச் சேர்ந்தான். அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது (ஆதி 29:1,2). அந்த கிணற்றின் வாயில் வைக்கப்பட்டிருந்த கல், ஒரு மனிதனால் புரட்டித் தள்ளப்படக்கூடியதாகவே இருந்தது. எப்படியெனில், யாக்கோபு (ஒருவனாகப்) போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் (ஆதி. 29:10) என்று வாசிக்கின்றோமே. எனினும், மூன்று ஆட்டுமந்தைகள் அந்த கிணற்றண்டையில் மடக்கப்பட்டிருந்தபோதிலும், அந்த கிணற்றின் வாயிலிலிருந்த கல்லை மேய்ப்பர்கள் புரட்டவில்லை; அவர்கள் தங்கள் மந்தைகளின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டவுமில்லை. தங்களோடு இணைந்த பிற மந்தைகள் வருமட்டும் பொறுமையாகக் கிணற்றண்டையிலே காத்திருந்தார்கள்.
அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள் (ஆதி 29:3). மேய்ந்து வந்திருந்த ஆடுகளுக்கு மாத்திரமல்ல, அவைகளை மேய்த்துவந்திருந்த மேய்ப்பர்களுக்கும் தாகம் எடுத்திருக்கக்கூடும்; என்றபோதிலும், பிறருக்காகக் காத்திருப்பதே அவர்களுக்கு பிரதானமானதாயிருந்தது.
லாபானின் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று அவர்கள் சொன்னபோது, அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள் (ஆதி 29:6-8). என்றபோதிலும், அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டுவந்தபோது, யாக்கோபு தன் தாயின் சகோதரரான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான் (ஆதி 29:9,10).
அவ்விடத்திலிருந்த மேய்ப்பர்கள் சொல்ல, காரியங்கள் அனைத்தையும் அப்பட்டமாக யாக்கோபு அறிந்திருந்தபோதிலும், யாரோ ஒருவருடைய உறவு வேண்டும் என்பதற்காக, உறவின் முறையான ராகேல் வந்தவிட்டாள் என்பதற்காக பிறருடைய வார்த்தைகளை உதறிவிட்டான். யாக்கோபின் இந்தச் செயல், 'ராகேலினிடத்தில் பாசத்தை உருவாக்கியிருந்தாலும்', பிறரிடத்தில் பிரிவினையினையே உருவாக்கியிருக்கும். இன்றும், மற்றவர்களுக்காகக் காத்திராமல், உறவிற்கே முன்னுரிமை கொடுத்துவிடும் மனிதர்கள் உலகத்தில் உண்டு. வாசலுக்கு வெளியே தண்ணீருக்காக மற்றவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தபோதிலும், 'குடும்பம், உறவு' என்பதற்காக, சட்டத்தை உடைத்து, பழக்க வழக்கங்களை மீறி, வாசலைத் திறந்துவிட்டுவிடுகின்ற மனிதர்கள் உண்டு. உறவிற்காகக் கல்லைப் புரட்டும் மனிதர்கள், மற்றவர்களை உதறித்தள்ளும் யாக்கோபைப் போன்றவர்களே. இத்தகையோர். கிணற்றின் வாசலண்டை மேய்ப்பர்கள் பலர் காத்திருந்தாலும், உறவுகள்தான் உள்ளே பிரNசிக்க அனுமதிப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக