ஞாயிறு, 10 அக்டோபர், 2021

என்னைச் சந்தித்தது எதற்காக? (ஆதி 18:1)

 என்னைச் சந்தித்தது எதற்காக?


பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலிலே உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, (ஆதி 18:1)


சோதோமை அழிக்கும்படியாக ஆண்டவரும் (ஆதி. 18:2,3), இரண்டு தூதர்களும் (ஆதி. 19:1) புறப்பட்டு வந்தபோது, நேரடியாக சோதோமுக்குள் அவர்கள் புகுந்துவிடவில்லை. அழிக்கப்படவேண்டிய சோதோமை நோக்கிச் செல்லும் முன்பதாக, அழைக்கப்பட்டவனாகிய ஆபிரகாம் வசிக்கும் வழியாகவே அவர்கள் வருகின்றனர். துன்மார்க்கர்களை நேரடியாகச் சென்று ஆண்டவர் அழித்துவிடுவதில்லை; ஒருமுறையாவது தன்னை அவர்களுக்கு அறிவிக்க அழைக்கப்பட்டவர்களைத் தேடுகின்றார். நமது இதயக் கதவை என்றோ அவருக்குத் திறந்துகொடுத்திருக்கலாம்; ஆனால், இன்று அவர் நிற்பதோ, நாம் நமது வீட்டை விட்டு வெளியேறி அழிவிலிருப்பவர்களுக்கு அவரை அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே. 'நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம்' (ஆதி. 18:3) என்று சொன்ன ஆபிரகாம், காரணத்தை முதலில் அறியாதவனாயிருந்ததால், 'நீங்கள் உங்கள் வழியே போகலாம்' (ஆதி. 18:5,16) என்று வழியனுப்பிவைத்தான். நோவாவின் நாட்களில், மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார் (ஆதி 6:5-7); என்றபோதிலும், அந்த சந்ததியைச் சந்திப்பதற்காக நோவாவைச் சந்தித்தார் ஆண்டவர். நோவா 'நீதியைப் பிரசங்கித்தான்' (2 பேதுரு 2:5). நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது (ஆதி 6:8); என்றாலும், இந்தக் கிருபையினால்  தான் மட்டும் காப்பாற்றப்பட்டால் போதும் என எண்ணாமல், மற்றவர்களும் காப்பாற்றப்படவேண்டும் என்று பிரசங்கித்தான் நோவா.   

நினிவேயின் அக்கிரமத்தைக் கண்டு யோனாவைச் சந்தித்தார். நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார் கர்த்தர் (யோனா 1:2). சந்திப்பின் காரணத்தை அறிந்துகொள்ளாமல், சமுகத்தினின்று விலகி ஓடிய யோனாவை காற்றின் வலையைக் கொண்டு வீசி, மீனைத் தூண்டிலாக்கி கரைக்குக் கொண்டுவந்தார் ஆண்டவர். மனிதன்தானே மீனைப் பிடித்து கரைக்குக் கொண்டுவரவேண்டும்; ஆனல், இங்கோ, மனிதனைப் பிடித்து மீன் கரைசேர்க்கிறது. கப்பலில் நினிவேக்குப் போயிருக்கவேண்டிய அவனை 'மீனிலே கொண்டுபோனார்' ஆண்டவர்; சிலருக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதுண்டு. நினிவேயின் கரையிலே கக்கப்பட்ட பின்பு, மீண்டும் கர்த்தர் யோனாவை நோக்கி:   நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார் (யோனா 3:2); மனமாற்றம் உண்டாயிற்று. கர்த்தர் நம்மைச் சந்திக்கும் நோக்கத்தை நாம் அறிந்துகொள்ளாவிட்டால், சந்ததியாரின் அழிவுக்குக் காரணமாகிவிடுவோம்.  

கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் (யாத் 32:9,10) என்று சொன்னபோது, உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும் என்று கெஞ்சிப் பிராத்தித்தான். அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். (யாத். 32:11-14). சந்திப்பைப் புரிந்துகொண்டால், சந்ததியைக் காத்துக்கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக