புதன், 13 அக்டோபர், 2021

பெனியேல் (ஆதி 32:25)

பெனியேல்



அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. (ஆதி 32:25)


அழைப்பு பெற்ற பின்னும், பாதையில் உண்டாகும் பயத்தினால் பயணத்தை ஆங்காங்கே நிறுத்திக்கொள்பவர்கள் அநேகர். தேவதூதர்களைச் சந்தித்தபின், தேவனையே சந்திக்கும் பாக்கியம் யாக்கோபுக்குக் கிடைத்தது; என்றபோதிலும், வாழ்க்கையே அழிந்துபோய்விடுமோ என்று பயப்படும் அளவிற்கு, ஏசாவுடனான சந்திப்பும் வழியில் நடைபெறவிருந்தது. லாபானிடமிருந்து தேவன் யாக்கோபுக்குப் பறித்துக்கொடுத்தவைகள் (ஆதி. 31:9), பயணத்தின்போது, ஏசாவினிடத்தில் பறிபோய்விடுமோ என்று பயந்துகொண்டிருந்த யாக்கோபு, யாப்போக்கு ஆற்றின் அருகே பிந்தித் தனித்திருந்தான் (ஆதி. 32:24). ஆண்டவர் உடனிருக்கிறார் என்பதை மறந்து, நாமும் அநேக நேரங்களில் யாக்கோபைப்போல பயத்தினால் நிறைந்து பயணத்தில் பினதங்கிவிடுகின்றோம். 'புறப்பட்டுப் போ' (ஆதி. 31:3) என்று தேவன் சொன்ன பின்னரும், 'பயத்திற்கடுத்த' காரியங்ளையே தேவனிடத்தில் சொல்லிச் சொல்லி, தொடர்ச்சியாக தேவனோடு போராடி போராடி நம்மை பெலவீனர்களாக மாற்றிவிடுகின்றோம் (ஆதி. 32:25). 'இஸ்ரவேல்' என்பது 'புறப்பட்டதற்கு அல்ல போராடினதற்குக் கிடைத்த பெயரே' (ஆதி. 32:28); என்றும் அவர் யாக்கோபின் தேவனே (யாத். 3:15, சங். 16:7, 46:11, 81:4, 94:7). இன்றும், அழைப்பை நோக்கி புறப்படுவதற்கு அல்ல, ஆசீர்வாதத்திற்காகப் போராட கற்றுக்கொடுக்கும் மனிதர்கள் அநேகர். 

லாபானுடைய வீட்டிலிருந்து யாக்கோபை புறப்படச் செய்யும் முன், ஏசாவின் மனதை கர்த்தர் சமாதானத்திற்கேதுவாக பக்குவப்படுத்தியிருந்தாரே. யாக்கோபு அனுப்பின ஆட்களிடத்தில், எவ்வித பகையுணர்வையும் ஏசா காண்பிக்கவில்லையே! மேலும், 'நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்' (ஆதி. 32:6) என்று யாக்கோபின் ஆட்கள் சொல்வது, ஏசாவின் சமாதானமான உணர்வையே சுட்டிக்காட்டுகின்றதல்லவா. அத்துடன், யாக்கோபைக் குறித்து கேள்விப்பட்டதும், 'நானூறு பேரோடு ஏசா எதிர்கொள்ள வந்தது'   (ஆதி. 32:6), யாக்கோபைக் காணவேண்டும் என்று ஏசாவுக்கு இருந்த வாஞ்சையினையல்லவோ வெளிக்காட்டுகின்றது. என்றபோதிலும், இதனைப் புரிந்துகொள்ள இயலாததினால், பயம் யாக்கோபின் வாழ்க்கையை மூடியிருந்தது.  'வெகுமதியை அனுப்பி ஏசாவை சாந்தப்படுத்தவேண்டும்' என்று நினைத்தான் யாக்கோபு (ஆதி. 32:20). வெகுமதியை அனுப்பினபின்னும் யாக்கோபின் மனதுக்கோ அமைதியில்லையே. லாபானுடைய வீட்டில் தான் சம்பாதித்த, சவதரித்த அனைத்தையும் தனக்கு முன்னே போகும்படி அனுப்பிவிட்டு, 'தனிமைக்குள் தன்னைத் தள்ளிக்கொண்டான்' யாக்கோபு (யாக். 32:24). முன்னே அனுப்பின ஆட்களுக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாதிருந்தபோதிலும், அவனுக்குள் இருந்த பயம் அவனோடு இருந்த ஜனங்களையும், ஆடுமாடுகளையும், ஒட்டகங்களையும் பல பகுதிகளாகப் பிரித்துவிட்டது (ஆதி. 32:7). பயத்தை சுமந்துகொண்டேயிருப்போமென்றால், நம்முடைய வாழ்க்கையும் இப்படி பிரிந்துபோய்விடக்கூடும்.  'என் ஆண்டவன்' என்றும், 'உம்முடைய தாசன்' என்றும் (ஆதி. 32:5), 'உமது அடியானாகிய யாக்கோபு' (ஆதி. 32:20) என்றும் யாக்கோபு ஏசாவை குறிப்பிட்டுக் கூறுவது, பயத்தின் நிறைவிலான மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளே. பயணத்தின்போது ஏசாவை நினைத்து பயந்து, ஏசாவோடு கூட சமாதானமாகும்படியாக சேயீர் தேசத்திற்குப் போக  பாதை மாறி (ஆதி. 32:3), போகவேண்டிய தேசத்தை (ஆதி. 31:3) மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே தேவன் யாக்கோபோடுகூட வழியிலே போராடினார். நம்முடைய வாழ்க்கையிலும் பயம் உண்டாகும்போது, பயணம் நின்றுபோய்விடக்கூடும். பயத்தின் நிமித்தம் பயணத்தை நாம் நிறுத்தும்போது, நம்மோடு கூட போராடி நம்மை புறப்படப்பண்ணுகிறவர் நம் தேவன். (ஆதி. 32:24) 

  ஆஸ்திகள் எல்லாவற்றையும் ஏசாவினிடத்தில் இழந்துவிடுவேனோ? என்று பயத்தில் தேவனோடு போராடின யாக்கோபு;  ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் (ஆதி. 32:29).  ஆசீர்வாதத்திற்குப் பின் அவனது ஆஸ்தியும் காக்கப்பட்டதே. இன்றோ ஆஸ்திகளையே ஆசீர்வாதங்கள்; என்று நினைத்துக்கொண்டு, தேவனோடும் தொடர்பின்றி ஆஸ்திகளிலேயே தொங்கிக்கொண்டு வாழும் மனிதர்கள் உண்டே. தொடைச்சந்து சுளுக்கினதோடு மாத்திரமல்ல, 'நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்' என்று தொடர்ந்து முன்னேறிய இடமே பெனியேல். (ஆதி 32:30)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக