தலைகீழ் பயணம்
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். (ஆதி 21:14-16)
பிரச்சனைகளினால் பயணம் பின்நோக்கிச் சென்றுவிடக்கூடாது. 'அவனையும் ஒரு பெரிய ஜாதியாக்குவேன்' (ஆதி. 21:13) என்று ஆபிரகாமினிடத்தில் தேவன் சொல்லியிருந்தபோதிலும், இந்த செய்தியை அடிமைப்பெண்ணாகிய ஆகாருக்கோ உடனே தேவன் அறிவித்துவிடவில்லை. மேலும், இஸ்மவேலின் எதிர்காலத்தைக் குறித்து தன்னிடத்தில் ஆண்டவர் சொன்னதை, ஆபிரகாமும் ஆகாரினிடத்தில் சொல்லிவிடவில்லை. தேவன் தன்னோடு பேசினவைகளை மனதிற்குளேயே வைத்துக்கொண்டவனாக, ஆகாரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டான் ஆபிரகாம். 'ஆபிரகாம் தன்னைக் காப்பாற்றுவான்' என்ற நம்பிக்கையை இழந்தவளாக, பிள்ளைக்குக் கொடுப்பதா? அல்லது தான் உண்டு பிழைப்பதா? என்ற நிர்ப்பந்தமான நிலையிலே சொப்பமான அப்பத்தோடும் தண்ணீரோடும் அனுப்பிவைக்கப்பட்டாள் ஆகார். வனாந்தரத்திலேயே அவள் அலைந்து திரிந்துகொண்டிருந்தாள். வருங்கால வாழ்க்கையினைக் குறித்த நம்பிக்கையின்றி, நிகழ்காலத்திலிருக்கும் வனாந்தரத்திலேயே வாழ்க்கை முடிந்துவிடப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தாள் ஆகார். எனினும், தனக்குள் இருக்கும் வித்திற்கும் ஆண்டவருக்கும் இருக்கும் தொடர்பினை அத்தனையாய் அவள் அறிந்திருக்கவில்லை.
தாவீதின் குமாரத்தியான தாமார அவனது சகோதரனாகிய அம்னோன் அனுப்பிவிட்டதைப் போலவே ஆகாரும் அனுப்பிவிடப்பட்டாள். தாமாரின் நிமித்தம் அம்னோன் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; சகோதரியாகிய தாமாரின் மேல் ஆசை வைத்து அவளிடத்தில் தகாதவிதமாய் நடந்துகொண்டான். எனினும், பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான் (2சாமு 13:15). அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள். ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல், தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான் (2சாமு 13:16,17). அம்னோனால் தாமாருக்கு உண்டான நிலையே, சாராளால் ஆகாருடைய வாழ்க்கையிலும் உண்டானது.
எனினும், ஆபிரகாமை விட்டுப் புறப்பட்டுச் சென்ற ஆகார், எங்கே போவது என்பதை அறியாதவளாக, எகிப்தை நோக்கியே பயணப்பட்டாள். எனினும், ஆபிரகாமினிடத்தில் பெற்றுக்கொண்ட அப்பமும் தண்ணீரும் எகிப்து வரை சென்றடைவதற்கு ஆகாருக்குப் போதுமானதாயிருக்கவில்லை; வழியிலே வனாந்தரத்திலேயே அது செலவழிந்துபோனது. நாமும், ஆண்டவரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, ஆண்டவரை விட்டு தூரமாகப் பிரயாணித்துக்கொண்டிருப்போமென்றால், அவரால் பெற்றுக்கொண்டதாயிருந்தாலும், ஆசீவாதங்கள் வனாந்தரத்திலேயே செலவழிந்துபோய்விடும். இளைய குமாரன் தகப்பனிடத்திலிருந்துதான் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தான்; என்றாலும், தகப்பனுக்குப் பிரியமில்லாத துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்ந்ததால் கொண்டுசென்ற செல்வங்கள் அனைத்தும் செலவழிந்து, அப்பத்துக்கு இரந்து திரியவேண்டிய நிலை உண்டானது. மேலும், ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள் (லூக் 10:30) என்று இயேசு கிறிஸ்துவும் போதித்தாரே. தலைகீழ் பயணமே வாழ்க்கையில் துன்பத்தை வருவிக்கின்றது. லோத்துவும் ஆபிரகாமை விட்டுப் பிரிந்து சென்றதினால், சோதோம் பட்டணத்தின் துன்மார்க்கர்கள் மத்தியில் சிக்கிக்கிடந்தானே. ஆகாரும், எகிப்து தேசத்து பெண்ணையே இஸ்மவேலுக்கு மணமுடித்தாள். தலைகீழான பயணத்தினால், நிலைகுலையும் மனிதர்கள் ஏராளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக