புதன், 13 அக்டோபர், 2021

முகமும், அகமும் (ஆதி 31:2)

 

முகமும், அகமும்



லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.(ஆதி 31:2)


மனிதனை மனிதன் முழுமையாக அளக்கும் அளவுகோல் மனிதனுக்குத் தரப்படவில்லை; என்றாலும், மனிதனின் முகத்திலே உண்டாகும் மாற்றங்கள், அவனது அகத்தின் முட்களைப் பிரதிபலிக்கப் போதுமானவைகள். இதனையே, 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று உலகமும் வழக்காக்கி வைத்துள்ளது. லாபானுடைய முகத்தில் உண்டான வேறுபாடு, அவனது உள்ளத்தினையே பிரதிபலிக்கின்றது என்பதை யாக்கோபு புரிந்துகொண்டதும், 'உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன்' என்றார் கர்த்தர் (ஆதி 31:3). எனினும், மனிதர்களின் முகத்தில் உண்டாகும் வேறுபாட்டினைப் புரிந்துகொள்ள இயலாத மனிதர்கள், மீண்டும் மாட்டிக்கொள்வதுடன், வெளிவர இயலாதபடி சத்துருவினால் பூட்டப்பட்டுவிடுவார்கள்.

இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் (1சாமு 16:1) என்று கர்த்தர் சொன்னபோது, 'பெத்லகேம்' என்றும், 'ஈசாய்' என்றும் குறிப்பிட்டுச் சொல்லியும், தாவீது' என்பதையோ குறிப்பிட்டுச் சொல்லாமல், 'குமாரரில் ஒருவனை' என்றே கூறுகின்றார். ஈசாயின் மகனான எலியாபைப் பார்த்தவுடனே, 'கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறவன் இவன்தானாக்கும்' (1 சாமு. 16:6) என்று சாமுவேல் உள்ளத்தில் நினைத்தபோது, தீர்க்கதரிசியாயிருந்தபோதிலும், உள்ளத்தை அல்ல உடலையே  பார்க்கிறவன் சாமுவேல் என்பதை கர்த்தர் புரிந்துகொண்டார். எனவே, கர்த்தர் சாமுவேலோடு இடைபட்டு, 'நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' (1சாமு 16:7) என்றார். நாமும் சில நேரங்களில் இத்தகைய தவற்றையே செய்துவிடுகின்றோம். வெளிப்புறத்தை மட்டுமே விழிகளால் பார்த்து, கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டவர்களை பதவியில் அமர்த்திவிடுகின்றோம். தன்னை ஆராதிக்க வரும் ஜனங்களைக் குறித்து, இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது (ஏசா 29:13) என்று முகத்திரையைக் கிழித்து அகக்கறையினை ஆண்டவர் சுட்டிக்காட்டுகின்றாரே.

காயீனுடைய காணிக்கை அங்கீகரிக்கப்படாதபோது, காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது (ஆதி 4:4,5). அவன் முகநாடி Nறுபட்டதற்குக் காரணம், அவனது உள்ளத்தில் உண்டான எரிச்சலே. எனவே கர்த்தர் காயீனை நோக்கி: 'உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?' (ஆதி 4:6) என்று கேட்கின்றார். உள்ளத்தில் உண்டான எரிச்சலினால் உண்மையாகவே வேறுபட்ட முகநாடியுடன் காணப்பட்டான் காயீன். அப்படியே, நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டபோது, அவனுடைய முகம் வேறுபட்டது (தானி. 3:19). இப்படி உள்ளத்தில் உள்ள நிலையை, அப்படியே முகத்தில் காட்டிவிடும் மனிதர்கள் ஒருபுறம் இருக்க, 

உள்ளொன்றும், புறம்பொன்றுமாக துல்லியமாக நடிக்கும் மனிதர்களும் இன்றைய நாட்களில் உலகத்தில் உண்டு. சவுலுக்குத் தப்பும்படியாக காத்தின் ராஜாவாகிய ஆகீசினிடத்தில் தாவீது ஓடிச்சென்றபோது, காத்தின் ராஜாவாகிய ஆகீவுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக் கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான் தாவீது (1சாமு 21:13). ஆகீஸ் தாவீதைக் கண்டபோது, 'பித்தங்கொண்டவன்' என்றும் 'பயித்திக்காரன்' என்றும் (1 சாமு. 21:14,15) உண்மையாகவே நம்பிவிட்டானே. அது சவுலுக்கும், ஆசீசுக்கும் தப்பும்படியான நடிப்புதானே.  

ஆகீசுக்குத் தப்பினதுபோல, ஆண்டவரிடத்தில் நாம் தப்பிக்கொள்வது இயலாதது. வெளிப்புறத்தை அழகாகவும், உட்புறத்தையோ அருவருப்பாகவும் நாம் வைத்திருந்தால், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்று வெளியிலேயே தள்ளப்படுவோம். (மத். 23:27) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக