திங்கள், 11 அக்டோபர், 2021

காத்திருக்கும் கர்த்தர் (ஆதி 19:17)

 காத்திருக்கும் கர்த்தர்


அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். (ஆதி 19:17)

 

'இரண்டு தூதர்களும் சோதோமுக்கு வந்தபோது, மரியாதையின் நிமித்தமாக 'ஆண்டவன்மார்களே' (ஆதி. 19:2) என்று லோத்து அழைத்தபோதிலும், அவனுடைய அறிவுக்கோ அவர்கள் 'புருஷர்களைப்போலவே' (மனிதர்களைப்போலவே) (ஆதி. 19:8) காணப்பட்டனர். சோதோமின் மனிதர்களின் பார்வைக்கும் தூதர்கள் 'மனுஷர்களைப்போலவே' காணப்பட்டனர் (ஆதி. 19:5); எனினும், ஆவியானவராhல் எழுதப்பட்ட தூதர்களைப் பற்றிய வசனமோ, 'அந்தப் புருஷர்' (ஆதி. 19:12) என்றும் 'தூதர்' என்றும் (ஆதி. 19:15) இருமுகமாக அவர்களை அடையாளப்படுத்துகின்றது. 'இதை அழிக்க கர்த்தர் எங்களை அனுப்பினார்' (ஆதி. 19:13) என்று சொன்னபோதிலும், 'தாங்கள் தூதர்கள்' என்பதையோ அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. மேலும், 'புருஷர்கள் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்கள்' என்று சொல்லாமல், 'கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்' (ஆதி. 19:14) என்று மருமக்கள்மாரோடே தெளிவாக லோத்து சொன்னபோதிலும், அவர்களையோ 'தூதர்களாகப்' பார்க்கவில்லை. 'பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி 'தூதர்கள்' லோத்துவைத் துரிதப்படுத்தினபோதிலும்' (ஆதி 19:15), லோத்து தாமதித்துக்கொண்டுதானிருந்தான். நம்முடைய வாழ்க்கையிலும், 'முன்னே நிற்பவர்கள் யாரென்று அறியாவிட்டால், ஆண்டவரால் கொடுக்கப்டும் எச்சரிப்பினைக் கேட்டும் இன்னும் நாமும்  தாமதித்துக்கொண்டேதானிருப்போம்.'  மனிதனாக இப்புவிக்கு வந்த இயேசு கிறிஸ்து மனந்திரும்புங்கள் என்று விடுக்கும் அழைப்பிற்கே இன்னும் செவிகொடுக்காமல் தாமதித்துக்கொண்டிருப்போர் அநேகர் அல்லவோ; பூமி எரியும்போது அவர்களுக்கு புகலிடம் இருக்காது. 

கர்த்தருடைய இரக்கமோ நீதிமான்களுடைய வழ்க்கையில் தூதர்களை செயல்படச் செய்யும். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத் 23:20) என்பதல்லவோ ஆண்டவரின் அன்பு. லோத்துவின் வாழ்க்கையில் நடந்தது இதுவே, அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். (ஆதி 19:16) 

வாழ்க்கையில் நாம் தப்பித்துக்கொள்ளும்படியாக பல ஊழியர்களை ஆண்டவர்  அனுப்புகிறார். நாம் ஒருவேளை அவர்களை மனிதர்களாகக் கண்டாலும் அவர்கள் லோத்துவைச் சந்திக்கவந்த பரலோகத்தின் தூதர்களாகக்கூட இருக்கக்கூடுமே! அல்லது, இப்பூமியிலிருக்கும் மனிதர்களாகிய தேவஊழியர்களாக இருப்பினும், அவர்களையும் 'தூதர்கள்' என்றுதானே வேதம் வர்ணித்துக்காண்பிக்கிறது. 'சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்' (வெளி. 2:1) என்று ஏழு சபைகளுக்கும் எழுதுவது, சுவிசேஷப் பணியில், சபை ஊழியர்கள் 'தூதர்களைப்போலச்' செய்யும் வேலையினை அல்லவோ வேதம் சுட்டிக்காட்டுகின்றது. 'நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்' (லூக் 5:32) என்று மனிதர்களுடைய மனந்திரும்புதலை எதிர்பார்த்து இயேசு கிறிஸ்து சொல்லுகின்றபோதிலும், இரண்டாம் வருகையின்போதோ, 'பாவிகளையல்ல நீதிமான்களையே அழைக்கவந்தேன்' என்பதுதானே அவரது தீர்ப்பாக இருக்கும். 'வெளியே கொண்டுபோய் விட்டார்கள்' (ஆதி. 19:16) என்ற வசனத்தைத் தொடர்ந்து, 'அவர்' 'என்றார்' (ஆதி. 19:17,22) 'ஆண்டவரே' (ஆதி. 19:18), 'உமது' 'தேவரீர்' (ஆதி. 19:19) என்று வரும் வார்த்தைகள், சோதோமுக்கு வெளியிலே ஆண்டவர் நின்றுகொண்டிருந்தார் என்பதைத்தானே சுட்டிக்காட்டுகின்றன. ஆபிரகாமைவிட்டுப் புறப்பட்ட ஆண்டவர், அங்கே வந்து நின்றாரோ! 'நான் ஒன்றும் செய்யக்கூடாது' (ஆதி. 19:22) என்ற வசனமும், 'அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷpக்கப்பண்ணி' (ஆதி 19:24) என்ற வசனமும் இணைந்து, அதனை உறுதிப்படுத்துகின்றதே. பாவத்தின் எல்லையை விட்டு வெளியேறினால், பிதா நிச்சயம் நமக்குக் காத்திருப்பார். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக