ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நீ சொன்னபடி செய் (ஆதி 18:5)

நீ சொன்னபடி செய்


நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். (ஆதி 18:5)

 

ஆண்டவரைச் சந்தித்தபோது, 'கொஞ்சம் தண்ணீர்கொண்டுவருகிறேன்' 'கொங்சம் அப்பம் கொண்டுவருகிறேன்' என்று ஆபிரகாம் சொன்ன (ஆதி. 18:3,4) வார்த்தைகளைக் கேட்டு ஆண்டவரும் இரண்டு தூதர்களும் மரத்தடியில் சாய்ந்துகொண்டிருந்தார்கள்; ஆபிரகாம் சொன்னதைச் செய்யும்வரை காத்துக்கொண்டிருந்தார்கள். 'நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் மாம்சம்புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?' (சங் 50:11-13) என்று சொல்லுகின்றபோதிலும், எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை (அப் 17:25) என்று சொல்லப்பட்டிருந்தபோதிலும், நம்முடைய உபசரிப்பை ஒருபோதும் அவர் உதறிவிடுகிறவரல்ல. 'செய்கிறேன்' என்று நாம் அவரது சமுகத்தில் சொன்னவைகளுக்காக, ஆண்டவர் காத்துக்கொண்டேயிருக்கின்றார். ஆனால் நாமோ, சில வேளைகளில் 'செய்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 'சிலுவை மரத்தில் சாய்ந்துகொண்டிருப்பவராகவே' அவரை விட்டுவிட்டுச் சித்தத்தை நிறைவேற்றாமல் சென்றுவிடுகிறோம்; அவருடைய வருகைக்காகக் காத்திருக்கும் நாம், சிலுவையில் சாய்ந்துகொண்டிருந்த அவரை அறிவிக்க, நம்முடைய வருகைக்காகக் காத்திருக்கிறார் என்பதை மறந்துவிடுகிறோம். 

ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக (2கொரி 8:11) என்று நிறைவேற்றப்படவேண்டியவைகள் வாழ்க்கையில் குறைவாக விட்டுவிடப்படக்கூடாது என பவுல் ஆலோசனை கூறுகின்றாரே. விருப்பங்களை மட்டும் ஆண்டவரிடத்தில் சொல்லிவிட்டு, அவைகளை நிறைவேற்றாமல் விட்டுவிடுவோமென்றால், ஆண்டவரின் வெறுப்புக்குள்ளானவர்களாக மாறிவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடக்கூடும். மூத்தவன், 'மாட்டேன்' என்று சொல்லியும், பின்பு மனஸ்தாபப்பட்டுப் போனான்; இளையவனோ, 'போகிறேன்' என்று சொல்லியும் போகவில்லை என்ற நிகழ்வினை, 'ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்' (மத் 21:29-31) என்று ஒப்பிட்டுச் சொல்வது, வார்த்தையை நிறைவேற்றாவிட்டால், வாசலில்  நாம் தடுக்கப்படக்கூடும் என்பதைத்தானே வெளிப்படுத்துகின்றது. 'தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம் (பிர. 5:2,4,5) என்பதுதானே சாலமொனின் வரிகள். 

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி 28:15) என்று யாக்கோபுக்கு வாக்குக்கொடுத்தார் ஆண்டவர். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண்; 23:19) என்பதே அவரைக் குறித்த அறிமுகம். ஆனால், உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் (1சாமு. 1:11) என்று ஜெபித்துவிட்டு, பின்பு தங்களுடனேயே வைத்துக்கொள்ளும் பெற்றோர்களைப்போல நாம் காணப்படக்கூடாது. உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக (உபா 23:23) என்பது நம்மில் நிறைவேறட்டும். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக