வாக்குத்தத்தமும் வாழ்வும்
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். (ஆதி 22:17,18)
'வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல, அது எப்போது நிறைவேறும் என்ற காத்திருத்தல் அநேகருக்கக் கடினமானது.' தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளாமலேயே ஆண்டவர் தருகிறதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தோடு வாழ்ந்துகொண்டிருப்போர் அநேகர். கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, 'நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்' என்றார் (ஆதி. 12:2,3). இத்தனை பெரிய ஆசீர்வாதத்திற்குச் சொந்தக்காரனாக ஆபிரகாம் தன் பயணத்தைத் தொடங்கினபோதிலும், ஆண்டவர் உரைத்த வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமின் வாழ்க்கையில் உடனே நிறைவேறிவிடவில்லை. ஆசீர்வாதத்திற்கான விடைகளுக்குப் பதிலாக, அவ்வப்போது பல தடைகளைத்தான் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருந்தான். பஞ்சத்தைக் கண்டபோது ஆபத்து இருந்தபோதிலும் ஆகாரத்திற்காக எகிப்துக்குப் போனான் (அதி. 12:10), எகிப்திலே, மனைவியை இழந்துவிடுவேனோ என்று மனதில் பயம் உண்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது சாராளை சகோதரி என்று சொன்னான் (ஆதி. 12:13), குழந்தையில்லாமல் குடும்பம் நடத்திக்கொண்டிருந்ததினால் 'அடியேனுக்கு என்ன தருவீர்?' (ஆதி. 15:2) என்று கேட்டான், அழைத்தவர் ஈசாக்கிற்கு எதிர்பார்த்துக் காத்திருக்க, சாராளின் அவசரத்திற்கு இணங்கி ஆகாரினிடத்தில் இஸ்மவேலைப் பெற்றெடுத்தான் (ஆதி. 16:15), எகிப்தில் பார்வோனிடத்தில் உண்டான சோதனையைப் போன்ற மற்றுமொரு சோதனை கேராரில் அபிமெலேக்கினிடத்தில் உண்டானபோது, அப்போதும் 'சகோதரி' என்றே சாராளை சொல்லுகின்றான் (ஆதி. 20:2).அழைக்கப்பட்டவன்தான், அழைப்பை ஏற்றுக்கொண்டவனாக தன்னுடைய குடும்பத்தையும், சொந்த ஜனத்தையும், ஊரையும் விட்டு கர்த்தர் காண்பித்த தேசத்திற்கு நேராக பயணத்தைத் தொடங்கினவன்தான், வாழ்க்கைக்கான வாக்குத்தத்தத்தை ஆண்டவரிடத்திலிருந்து பெற்றுக்கொண்டவன்தான் என்றாலும், மேற்கண்ட அத்தனை சோதனைகளிலும் ஆண்டவருடைய இடைபடுதலினாலேயே அவன் வாழ்க்கையில் வெற்றிபெற்றுக்கொண்டுவந்தான்.
அழைப்பின் பயணத்தில் வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியாக, வெற்றிபெற்றவன் என்று ஆபிரகாம் அறிவிக்கப்படும்வரை ஆண்டவர் பல்வேறு சூழ்நிலைகளிலனின் மூலமாக அவனோடு இடைபட்டுக்கொண்டேவந்தார். தன்னுடைய சொந்த குமாரனை பலிபீடத்தில் வைத்துவிட ஆபிரகாம் ஆயத்தமானபோது, 'கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு' (ஆதி 22:15) அதே ஆசீர்வாதத்தை மீண்டும் உரைக்கின்றார் (ஆதி. 22:17,18). எனினும், 'ஈசாக்கை தகனபலியாகப் பலியிடு' (ஆதி 22:2) என்று ஆண்டவர் சொன்னபோது, அச்சோதனை அவனை பொன்னாக மாற்றியது. சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1:12) என்பதுதானே வாக்குத்தத்தத்திற்கடுத்த சட்டம்.
நம்முடைய வாழ்க்கையிலும், கர்த்தர் வாக்குத்தத்தங்களை கொடுக்கலாம்; எனினும், நம்மை தகுதிப்படுத்தாமல் உடனே அதனை நிறைவேற்றிவிடுவதில்லை. வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ளும்படியாக நம்முடைய வாழ்க்கை தகுதியாக்கப்படுவதற்கு நாம் கடந்து செல்லுகின்ற அழைப்பின் பாதையில் நாம் கவனமாயிருக்கவேண்டியது அவசியம். சோதனைகளின் வழியாக நாம் கடந்துசெல்லவேண்டியது ஏற்படலாம்; வாக்குத்தத்தங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பவர்களாக அல்ல, வாழ்க்கை தகுதியானால் வாக்குத்தத்தம் தானாகவே நிறைவேறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக