ஞாயிறு, 10 அக்டோபர், 2021

நம்பிக்கையா? நகைப்பா? (ஆதி 17:2,3)

 நம்பிக்கையா? நகைப்பா?


நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். (ஆதி 17:2,3)

அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, (ஆதி 17:17)


ஆபிராமுக்கு ஆண்டவர் வாக்குக் கொடுத்தபோது, அந்த வாக்கு மனைவியாகிய சராயோடு மாத்திரமே தொடர்புடையது என்பதில் உறுதியாக நிற்காமல், இடையில் ஆகாரை அனுமதித்ததினால் இடறலை உண்டாக்கினான். வீட்டை விட்டு ஆகார் கர்ப்பினியாக ஓடிப்போனபோது, ஆகாருக்காக நிச்சயம் ஆபிராம் ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் செய்திருப்பான்; ஒருவேளை, ஆண்டவர் ஆகாரைச் சந்தித்ததற்கு, ஆபிராமின் விண்ணப்பமும் ஓர் காரணமாக இருந்திருக்கக்கூடும். வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஆகார் திரும்பி வந்தபோது, ஆகாருக்கு ஆபிராம் வீட்டிலே இடங்கொடுத்தான்; ஆனால், இஸ்மவேலுக்கோ, இதயத்திலேயே 'தனது சந்ததி' என்ற இடத்தை ஆபிராம் கொடுத்துவிட்டான். 

எனவே, ஆகார் திரும்பி வந்தபின்பு, ஆண்டவர் ஆபிராமை நோக்கி, 'நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்' (ஆதி 17:2) என்று ஆண்டவர் சொன்னதை, 'இஸ்மவேல் உடனேயே' சம்மந்தப்படுத்திப் பார்த்தான் ஆபிராம். இஸ்மவேலின் மூலமாகவே தனது சந்ததி மிகவும் திராளாய்ப் பெருகப்போகிறது என்று நினைத்தான்; அப்படியென்றால், இஸ்மவேலை ஆபிராம் எப்படி வளர்த்திருப்பான், எப்படி ஆபிராம் கவனித்திருப்பான், எத்தனையாய் அவன் மீது ஆபிராம் அன்புகூர்ந்திருப்பான் என்பதை நம்மால் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். 

ஆனால், உடன்படிக்கையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென, 'உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.  நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன்' (ஆதி. 17:15,16) என்று ஆண்டவர் சொன்னபோது,  ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான் (ஆதி 17:15-18). 'இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்' (ஆதி. 17:20) என்று ஆண்டவர் கூறுவதிலிருந்து, ஆபிராம் எத்தனையாய் இஸ்மவேலுக்காக விண்ணப்பம் செய்திருப்பான் என்பது தெளிவாகின்றதல்லவா. ஆனால், சாராயினிடத்தில்தான் தனக்கு குழந்தை வேண்டும் என்று ஆபிராம் அத்தனை உறுதியாக விண்ணப்பம் செய்யவில்லையே.  

தூதன் சகரியாவை நோக்கி: 'சகரியாவே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக' (லூக். 1:13) என்று சொன்னானே. 'மலடி' என்ற நிலையில் மனைவி இருந்தபோதிலும், சகரியாவின் விண்ணப்பம் 'மதிலை' உடைத்து பதிலைக் கொடுத்ததே.  மாற்று வழியை சகரியா தேடவில்லை. ஆனால், ஆபிராமோ, 'பிள்ளை இல்லை' (ஆதி. 15:2) என்று சொன்னபோதிலும், 'எலியேசர்' 'இஸ்மவேல்' என்று விழிகளால் மாற்று வழிகளையும் பார்த்துக்கொண்டேயிருந்தான். 'வழி இதுவே'  (ஏசா. 30:21) என்பதின் உறுதியே இலக்கின் இறுதியை நிர்ணயிக்கும். 

நாமும் சில நேரங்களில் கர்த்தர் பேசும் காரியங்களை சாத்தியமானவைகளோடு பொருத்திப் பார்க்கும்போது சந்தோஷமடைகிறோம்; ஆனால், அசாத்தியமானதோடு ஆண்டவர் இணைத்துச் சொல்லும்போது நகைத்துவிடுகிறோம்; விசுவாசத்தை விட்டுக்கொடுத்து, அவிசுவாசத்தினால் அஸ்திபாரங்களும் அசைவதற்கு இடங்கொடுத்துவிடுகின்றோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக