திங்கள், 11 அக்டோபர், 2021

மெய்யா? மேன்மையா? (ஆதி 20:12,13)

மெய்யா? மேன்மையா?



அவள் என் சகோதரி என்பது மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள். என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தாரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான். (ஆதி 20:12,13)


இந்த வசனங்களைச் சற்று புரிந்துகொள்ள முற்படுவோமென்றால், யாசேரின் புத்தகத்தையும் அறிந்துகொள்வது அவசியம். கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுவதும் நடுவானத்தில் நின்றது (யோசு 10:12,13) என்று யாசேரின் புத்தகத்தில் எழுதியிருப்பதையே வேதம் மேற்கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும், தாவீது வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது (2சாமு 1:18) என்ற செய்தியையும் யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதிலிருந்தே வேதம் சுட்டிக்காட்டுகின்றது. 

யோவான் தனது நிருபத்தில், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது (யோவா 20:30,31) என்று எழுதுகிறார். ஆண்டவர் செய்த அநேக காரியங்களிலிருந்து, 'நித்திய ஜீவனை அடையும்படியாக' நமக்கு வழிகாட்டும் வார்த்தைகளை கோர்த்துத் தருவதே வேதம். என்றாலும், வேதத்தின் சத்தியத்திற்குத் துணையாக நிற்கும் சரித்திரப் புத்தகங்களை நாம் புரிந்துகொள்வதற்காகப் புரட்டிப்பார்ப்பது தவறு அல்லவே. 

தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான் (ஆதி. 11:26) என்று நாம் வாசிக்கின்றபோதிலும், இவர்கள் பிறந்த வரிசைகளின் விளக்கத்தை யாசேரின் புத்தகத்தில் நாம் வாசிக்கமுடியும். தேராகு முப்பத்தெட்டு வயதாயிருந்தபோது ஆரான் மற்றும் நாகோரைப் பெற்றான் என்றும் (யாசேர் 7:22). அத்துடன், தேராகு கார்னிபோவின் குமாரத்தியாகிய அம்திலோவையும் மனைவியாகச் சேர்த்துக்கொண்டான், அவள் அவனுக்கு ஆபிரகாமைப் பெற்றாள். தேராகு ஆபிராமைப் பெற்றபோது அவன் எழுபது வயதாயிருந்தான் என்றும் யாசேரின் புத்தகம் எடுத்துக்கூறுகின்றது (யாசேர். 7:50,51). நாகோரின் குமாரனாகிய தேராகு, நிம்ரோத்தின் படைத்தலைவனாயிருந்தான்; ராஜா தன்னை உயர்த்திவைத்திருப்பதை குறிக்கும் வண்ணமாக, தனக்குப் பிறந்த குமாரனுக்கு 'ஆபிராம்' என்று பெயரிட்டான். 'மனைவி' என்பதை ஆபிரகாம் வார்த்தையில் மறைத்ததுபோலவே, தேராகும் 'மகள்' என்பதை வார்த்தையில் மறைத்தே கூறுகின்றான். ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் (ஆதி. 11:31) என்று தேராகு கூறுவது அரை பதிலே. ஒருவேளை திருமணம் முடிந்தபின்னர்; அவளை 'மருமகள்' என்று அழைக்க தேராகு பிரியப்பட்டிருக்கலாம். ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிரகாமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன் (ஆதி 11:29) என கூறும் வேதம், சாராளின் சரித்திரத்தினைச் சுட்டிக்காட்டவில்லை. 

அபிமெலேக்கு தேவனால் இத்தனையாக எச்சரிக்கப்பட்டு, சாராளை ஆபிரகாமினிடத்திற்கு அனுப்பிவிட்டபோதிலும், ஆபிரகாம் மீண்டும் 'அவள் என் சகோதரி என்பது மெய்தான்' என்றே கூறுகின்றான். இந்த பதில் அபிமெலேக்கை குழப்பியிருக்காதோ? ஆபிராமின் மேல் அபிமெலேக்கிற்கு இருந்த நல்ல எண்ணத்தைக் குலைத்திருக்காதோ? மெய்யாகவே இருந்தாலும் மேன்மையைப் பேசுவதான் மதிப்பு. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக