வெற்றிடம்
ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான். அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான். (ஆதி 24:66,67)
பெண் தேடும்படியாக ஆபிரகாம் தனது ஊழியக்காரனை அனுப்பியபோது, குமாரனாகிய ஈசாக்கு உடன் கலந்து ஆலோசிக்கவில்லை; அப்படியே ஆபிரகாமின் ஊழிpயக்காரன் எந்த பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தானோ, அந்தப் பெண்ணை மணவாட்டியாக ஈசாக்கு மனதார ஏற்றுக்கொண்டான். ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுவந்தபோது, ஈசாக்கு தியானம்பண்ணும்படியாக வெளியே வந்துகொண்டிருந்தான்;. 'அந்த மனிதன் யார்?' என்று ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரனிடத்தில் கேட்டபோது, 'அவர்தான் என் எஜமான்' என்று ஊழியக்காரன் சொன்னதும், அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள் (ஆதி 24:65). அப்படியென்றால், ரெபெக்காளின் முகத்தைக் கூட ஈசாக்கு பார்த்திருக்க முடியாதே.
இன்றைய நாட்களில், பெண் தேடும்படியாக அநேகர் ஊழியக்காரர்களிடத்தில் சொல்வது உண்டு; எனினும், ஊழிக்காரர்கள் மணவாட்டிகளைத் தேடி தெரிந்தெடுத்து அழைத்துக்கொண்டு வரும்போதோ, மாப்பிள்ளையினிடத்தில் ஒருவார்த்தை கேட்கவேண்டும் என்று மெல்ல மறுப்பு தெரிவிப்பதும், மாப்பி;ள்ளை இன்னும் ஒரு பதிலும் சொல்லவில்லையே என்று இழுத்தடிப்பதும், மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று முற்றிலுமாக மறுப்பு தெரிவிப்பதும் வழக்கமாகிவருகின்றது. பெற்றோரும், உறவினர்களும், ஊழியக்காரர்களும் பெண்தேடினாலும், இறுதி முடிவு மாப்பிள்ளையின் கையிலேயே விடப்படுவதினாயே, இன்னும் அநேக திருமணங்கள் முடிவுக்கு வரவில்லை.
ஈசாக்கு ரெபெக்காளை தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோனான் என்றே வேதத்தில் வாசிக்கின்றோம். இதன் ரகசியம் என்ன? நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று ஆபிரகாம் தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டதாக (ஆதி 17:17) வேதம் குறிப்பிடுவதனால், ஆபிரகாமைக் காட்டிலும் சாராள் 10 வயது குறைவானவள் என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். சாராள் தனது 127 வது வயதில் மரணமடைந்தாள் (ஆதி. 23:1). அப்படியென்றால், சாராள் மரணமடையும்போது ஆபிரகாமின் வயது 137. ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான் (ஆதி. 21:1); அப்படியென்றால், ஈசாக்கு பிறந்தபோது சாராளின் வயது 90. எனவே, சாராள் மரணமடையும்போது ஈசாக்கின் வயது 37. ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான் (ஆதி. 25:20). அப்படியென்றால், தாயாகிய சாராள் மரணமடைந்தபின், மூன்று வருடங்கள் தாயை நினைத்து ஈசாக்கு துக்கமாக இருந்திருக்கக்கூடும். தாயின் கூடாரம் அவனுடைய பார்வையில் காலியிடமாகவே காணப்பட்டது, ஒருவேளை தகப்பனாகிய ஆபிரகாமினால் அந்த வெற்றிடத்தை நிரப்ப இயலாது போயிருக்கக்கூடும். தாயையே நினைத்து நினைத்து துக்கத்தினால் மூழ்கிக்கொண்டிருக்கும் தனது மகனை, துக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர தகப்பனாகிய ஆபிரகாம் செய்த ஏற்பாடாகக்கூட ஈசாக்கின் திருமணம் இருந்திருக்கக்கூடும். தாயைக் குறித்த துக்கம் ஒருபுறம் காரணமாயிருக்க, ஆபிரகாம் கேத்தூராளை விவாகம் செய்திருந்ததும் ஓர் காரணமாயிருந்திருக்கக்கூடும். (ஆதி. 25:1)
அனுப்பப்பட்ட ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுவந்தபோது, ஆபிரகாம் அந்த இடத்தில் இருந்ததாக வேதம் குறிப்பிடவில்லை. ஈசாக்கு ரெபெக்காளை தன் தாயாகிய சாராளின் கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோன நேரத்திலும் ஆபிரகாம் உடனிருந்தாக வேதம் குறிப்பிடவில்லை. ஈசாக்கு ரெபெக்காளை தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான் (ஆதி 24:67) என்ற வசனம், அந்த வெற்றிடத்தை ரெபெக்காள் நிரப்பினதையே சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், இன்றைய நாட்களில் உயிரோடு இருக்கும் பெற்றோரைப் செய்வதால், சிலருடைய வாழ்க்கையில், மணவாட்டிகள் வெற்றிடத்தை உருவாக்குபவர்களாக மாறிவிடுகின்றார்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக