வெறுமையா? வெற்றியா?
இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். (ஆதி 31:9)
அழைப்பு பெற்ற மனிதர்களுக்கு விரோதமாகப் போராடும் மனிதர்கள் ஒருபோதும் வெற்றிபெறுவதில்லை. தன் வீட்டிற்கு வந்த யாக்கோபின் மூலமாக அநேக ஆசீர்வாதங்களை லாபான் தனது வாழ்க்கையில் பெற்றனுபவித்துக்கொண்டுவந்தாலும், கொடுக்கவேண்டியவைகளை யாக்கோபுக்கு கொடுத்துவிடவோ மனதற்றவனாகவே காணப்பட்டான் லாபான். என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் (ஆதி 31:42) என்றே லாபானைப் பார்த்துச் சொல்லுகின்றான் யாக்கோபு. வெறுங்கையாய் யாக்கோபை அனுப்பிவிட லாபான் முயற்சித்தபோதிலும், வெற்றி கிடைக்காததற்குக் காரணம், கர்த்தருடைய கரம் யாக்கோபோடு கூட இருந்ததே.
எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் (ஆதி 31:1) லாபானுடைய குமாரர் சொல்லும் வார்த்தைகளை யாக்கோபு கேட்டபோதிலும், என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத்தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும் (ஆதி 31:37) என்று யாக்கோபு சொன்னபோதிலும், தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார் (ஆதி 31:9) என்பதை தைரியமாகச் சுட்டிக்காட்ட யாக்கோபு தவறவில்லை. மேலும், தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது (ஆதி. 31:16) என்றே லேயாளும், ராகேலும் கூறுகின்றனர். அத்துடன், லாபானின் குமாரர்களும், 'தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான்' (ஆதி 31:1) என்றே சொல்லுகின்றனர். யாக்கோபு எடுத்திருந்தால் அது 'திருடு'; ஆனால், தேவன் எடுத்துக்கொடுத்திருந்ததால் அது யாக்கோபின் வாழ்க்கையில் ஆசீர்வாதமாகவே அளக்கப்பட்டது. பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோம 12:19) என்று வாசிக்கின்றோமே. நாம் பழிவாங்க முயற்சித்தால், அது பாவமாகவே கணக்கிடப்படும்; ஆனால், பழிவாங்காமல் தேவகரத்தில் விட்டுவிட்டால், 'நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்' (ஆதி 50:20) என்ற வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும்.
இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர் (ஆதி 31:38-41) என்று யாக்கோபு லாபானிடத்தில் சொன்னதைப்போல, தங்கள் தலைவர்களைப் பார்த்து சொல்லும் ஊழியர்கள் இன்றும் உண்டு.
மனிதர்களால் பாதிக்கப்பட்டு, பகைக்கப்பட்டு, தேவ அழைப்பினைப் பெற்று பிரிந்துசெல்லும் மனிதர்களுக்கு, தேவனே ஆத்துமாக்களை அள்ளித் தருகிறார். எனினும், மனிதர்களுடைய பார்வைக்கோ ஒருவேளை அவை 'திருடப்பட்டவைகளைப் போல' காட்சியளிக்கக்கூடும். எனினும், அழைக்கப்பட்ட இடத்திலிருந்து நாம் அகன்று சென்றுவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். அழைக்கப்பட்ட இடத்திலிருந்து நாம் அகன்று சென்றால், ஆத்துமாக்களின்றி வெறுமையாகவே வாழ நேரிடும். (யோவான் 21:3)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக