திங்கள், 11 அக்டோபர், 2021

திறக்கப்படும் வாசல்கள் (ஆதி 20:17,18)

திறக்கப்படும் வாசல்கள்



ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார். (ஆதி 20:17,18)


தவறான வழிகளில் நாம் பிரவேசித்தால், திறந்திருப்பவைகளும் அடைக்கப்பட்டுவிடக்கூடும்; அப்படியே, சரியான வழியில் நாம் பயணித்தால் அடைக்கப்பட்டிருப்பவைகளும் நமக்காகத் திறந்துவிடப்படக்கூடும்; செங்கடலும், யோர்தானும் வழிவிட்டனவே. கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு சாராளை அழைத்தபோதிலும், ஆண்டவர் அவனோடு இடைபட்டு, 'அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள்' என்று எச்சரித்தார். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: 'நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?' (ஆதி. 20:9) என்றான். சாராளை அனுப்பிவிட்டபோது, பாவத்திலிருந்தும், பாவத்தினிமித்தம் வரவிருந்த சாவிலிருந்தும் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தப்புவித்துவிட்டோம் என்று ஒருவேளை அபிமெலேக்கு நினைத்திருக்கக்கூடும்; ஆனால், தான் செய்த காரியத்தினிமித்தம் தொடரவிருக்கும் சாபத்தையோ அவன் அறியாதிருந்தான். 'மரணதண்டனைதான் குறைக்கப்பட்டது; ஆனால், சந்ததிக்கான வாசல்களோ சாத்தப்பட்டுவிட்டது.' 'சாராளினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தார்' (ஆதி. 20:17).  நம்முடைய வாழ்க்கையிலும், பாவத்தை விட்டுவிட்டால் மட்டும் போதாது, அதனால் உண்டான சாபத்திலிருந்தும்  நாம் தப்பவேண்டுமென்றால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, பிதாவின் பிள்ளைகளாகவேண்டும். 

இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்தில் குடியிரு என்று (ஆதி 20:15) அபிமெலேக்கு ஆபிரகாமை அனுப்பினபோதிலும், அபிமெலேக்கின் வீட்டை தொடர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தான் ஆபிரகாம், அபிமெலேக்கின் மனைவி மற்றும் வேலைக்காரிகள் பிள்ளைபெறாததைக் கண்ட ஆபிரகாம், அவன் மேல் இன்னமும் இருக்கின்ற கர்த்தரின் தண்டனையை அறிந்துகொண்டான். 'சாராளை அழைத்ததினால் வந்த சாபமே இது' என்பதை உணர்ந்த ஆபிரகானம், அபிமெலேக்கை அப்படியே விட்டுவிடவில்லை, அபிமெலேக்கிற்காகவும் மற்றும் அவனது வீட்டாருக்காகவும் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார் (ஆதி 20:18). நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான் (ஆதி. 20:7) என்று ஆபிரகாமைக் குறித்துச் சொன்னார் ஆண்டவர்; எனினும், பிள்ளைபெறும்படியாகவும் ஆபிரகாமே அபிமெலேக்கிற்காக வேண்டுதல் செய்யும் சூழ்நிலை உண்டானது. நமக்கு விரோதமாக எழும்புகிறவர்களுக்காக நாம் வேண்டுதல் செய்யாவிட்டால் அவர்களது வாசல்கள் அடைக்கப்படக்கூடும். 

மேலும், 'தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும் மற்றும் அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி' என்றே வேதத்தில் வாசிக்கின்றோம். பெண்களுடைய மாத்திரமல்ல, ஆண்களும் அடைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதைத்தானே இது சுட்டிக்காட்டுகின்றது. குணமாக்கப்படவேண்டியவர்களின் பட்டியலில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உண்டு. எனினும், இன்றைய உலகமோ, ஒருபுறத்தை மாத்திரமே குணமாக்க விரும்புகிறது. கதவு உள்ளே தாளிடப்பட்டிருக்கும்போது, வெளியிலிருந்து பூட்டை மட்டும் திறப்பதால் வாசல் திறந்துவிடாதே. இரண்டு தாள்களும் தகர்க்கப்படவேண்டுமே. குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவராலும் தாளிடப்பட்டது; ஒரு தாளை மாத்திரம் திறப்பதால் பயனில்லை, இரண்டுபேரும் தேவசமூகத்திற்குச் சென்றால் மாத்திரமே அது சாத்தியம் என்பதுதானே சத்தியம். ஆபிரகாம், ஏறக்குறைய  நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான் (ரோம 4:19); அழைப்பை நோக்கிச் சென்ற ஆபிரகாம் சாராள் ஆகிய இருவரின் வாசல்களையும் அவரே திறந்தார். ஈசாக்கு கானான் தேசத்திலேயே பிறந்தான். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக