காண்பவரைக் காணும் கண்கள்
அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள். (ஆதி 16:13)
'காண்பவரைக் காணும்' அனுபவம் வாழ்க்கையில் வித்தியாசமானது. ஆண்டவருடைய பார்வையின் எல்லைக்குள்ளேயே எல்லா மனிதர்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டியது. என்றபோதிலும், காண்பவரைக் காணும் சந்தர்ப்பமும், காண்பவரைச் சந்திக்கும் வாய்ப்பும், வேதத்தின் வாயிலாகவோ, பிரசங்கங்களின் மூலமாகவோ வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் கிடைக்கும்போது, தருணங்களைத் தவறவிட்டுவிட்டு மீண்டும் தவற்றை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர் உண்டு.
'கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது' (2 நாளா 16:9) என்றும், 'அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது' (சங் 11:4) என்றும், 'கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள்வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது (1 பேது 3:12) என்றும் வாசிக்கின்றோமே. எங்கிருந்தாலும் அவர் நம்மைக் காண்கிறவரே.
கர்த்தருடைய தூதனானவர் ஆகாரைச் சந்தித்தபோது, 'கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக' (ஆதி. 16:11) என்று ஆகாருக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு பேரிட்டார். ஆகாரின் பிள்ளைக்கு பேரிடப்பட்டதைப் போல, ஆகாரும், 'என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன்' என்று பேரிட்டாள் (ஆதி. 16:13). அதுமாத்திரமல்ல, கர்த்தருடைய தூதனுக்கும் ஆகாருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்ற இடத்திற்கும் 'லகாய்ரோயீ' என்று பேரிடப்பட்டது (ஆதி. 16:14). ஆபிராமின் கண்களுக்கு ஆகார் தூரமானபோதிலும்கூட, ஆண்டவரின் கண்கள் ஆகாரைக் கண்டது. ஆபிரகாமின் கண்களுக்கு மறைந்துபோனாலும், ஆண்டவரின் கண்களுக்கு அவளது வாழ்க்கை மறைவாகிவிடவில்லை.
அதைப்போலவே, யாக்கோபு வீட்டை விட்டுச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள் (ஆதி 28:12). யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அதுமாத்திரமல்ல, 'இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்' என்றான். அத்துடன், அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது (ஆதி 28:16-19).
மகனைப் பலியிடச் சென்றபோது, கர்த்தர் அபிராமை சந்தித்தார் ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; (ஆதி 22:14). ஆண்டவர் சந்தித்த இடத்தில், ஆகார் மற்றும் ஆபிராம் ஆகிய இருவரின் கர்ப்பத்தின் கனியும் காப்பாற்றப்பட்டன.
ஒவ்வொரு நாளும் 'என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்' என்று நம்மால் சொல்லக்கூடுமோ? ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து தொடரும் பயணமே நமது ஆவிக்குரிய வாழ்க்கையை உறுதியாக்கும். ஆண்டவர் நம்மீதான பார்வையைத் தவறவிடுவதில்லை; ஆனால், சில நேரங்களில் நாம் ஆண்டவரைப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்; அப்படிப்பட்ட இடங்களிலேயே நம்முடைய வாழ்க்கையில் தவறுகள் நடைபெற்றுவிடுகின்றது. ஆண்டவருடனான சந்திப்பு நடைபெற்ற இடம் என்ற பெயருக்குப் பதிலாக, சத்துரு நம்மைச் சறுக்கிவிட்ட இடம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றோம். காண்பவரைக் காணும் கண்கள் உடையோருக்கு, தாங்கள் இருக்கும் இடத்திலெல்லாம் அவரைக் காணமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக