ஆசீர்வாதத்தின் பாத்திரம்
ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத் தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான். (ஆதி 27:3,4)
ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை, அவருக்கு விரோதமாக வாழுவோர் மீது நாம் திருப்பிவிட முடியாது. பெற்றோரை மனம் நோகச்செய்யக்கூடிய பெண்களை மணமுடித்திருந்தபோதிலும் (ஆதி. 26:34,35; 27:46), சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டவனாயிருந்தபோதிலும் (எபி. 12:16), தகப்பனாகிய ஈசாக்கோ ஏசாவின் மேலேயே பிரியம் வைத்திருந்தான்; அவனையே ஆசீர்வதிக்கவும் ஆசைகொண்டிருந்தான். 'ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன், ஏசாவையோ நான் வெறுத்தேன்' (மல். 1:2,3) என்ற கர்த்தரின் உள்ளத்தை ஈசாக்கு உணராதிருந்தான்.
இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும்; அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் (ஆதி 25:23) என்று ரெபெக்காளிடத்தில் சொல்லியிருந்தார் ஆண்டவர். ஆனால், ஈசாக்கோ இந்த ஆசீர்வாதத்தினால் ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தானே. ஏசா என்று நினைத்து யாக்கோபை ஈசாக்கு ஆசீர்வதித்தபோது, 'ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள்' என்று சொல்லியே அவனை ஆசீர்வதித்தான் (ஆதி 27:29). இந்த ஆசீர்வாதத்தை ஒருவேளை ஈசாக்கு ஏசாவுக்குக் கொடுத்திருந்தால், அது ஆண்டவருடைய சித்தத்திற்கும், திட்டத்திற்கும், முன்னறிவிப்பிற்கும்
விரோதமானதாகக் காணப்பட்டிருக்குமே. பின்னர், தனக்கு முன்பாக ஏசா வந்து நின்றபோது, உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; என்று கர்த்தர் சொன்னதற்கு இசைவாகச் சொன்னபோதிலும், நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் (ஆதி 27:40) என்று கர்த்தர் சொன்னதற்கு எதிராகவும் கூறிவிட்டானே. 'அவன் (யாக்கோபு) ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான்' (ஆதி. 27:33) என்று சொன்னபோதிலும், முழுமனதில்லாது தானே அதனை முறித்துப்போட்டானே. தேவனால் முன்னுரைக்கப்பட்டதற்கு விரோதமாக ஆசீர்வாதம் கூறப்பட்டுவிடாதபடி, யாக்கோபுக்கே அது கிடைக்கும்படி தேவனாலேயே அது அனுமதிக்கப்பட்டது; என்றபோதிலும், கர்த்தர் தடுக்கும் முன் துடுக்காக ரெபேக்காளும், யாக்கோபும் தாங்களாகவே செயல்பட்டதினாலேயே 'மோசம்போக்கினவன்' (ஆதி. 27:36) என்ற பெயரும் யாக்கோபின் வாழ்க்கையோடு கூடிக்கொண்டது.
ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் என்று சீஷர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து சொன்னபோதிலும், அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது (மத் 10:13) என்று கூறினாரே. ஊழியக்காரர்கள் ஆசீர்வதித்துவிட்டால் உள்ளத்திற்குள் சமாதானம் வந்துவிடாது; உள்ளத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதாலேயே சமாதானம் உள்ளே பிரவேசிக்கும். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவா 14:27) என்று சீஷர்களிடத்தில் இயேசு கிறிஸ்து கூறியிருந்தபோதிலும், பாவஞ்செய்ததினால் சமாதானத்தை இழந்த யூதாஸ்காரியோத்து, நான்றுகொண்டு செத்தானே (மத். 27:4,5). இயேசு கிறிஸ்து வைத்துப்போன சமாதானத்தை வாழ்க்கையில் அனுபவிக்காமலேயே, இன்றும் பலர் செத்துக்கொண்டிருக்கின்றார்களே. சமாதானத்தை வாங்கிக்கொள்ளும் பாத்திரமாகிய கிறிஸ்து (கொலோ. 1:2, 1தீமோ. 1:2, 2தீமோ. 1:2, 1பேதுரு 5:4) அவர்களிடத்தில் இல்லாததே அதற்குக் காரணம். கையிலே பாத்திரம் இல்லாமல், சமாதானத்திற்காக பிதாவை நோக்கிக் காத்துக்கொண்டேயிருப்பவர்கள், ஏமாற்றத்துடனேயே திரும்புவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக