திங்கள், 11 அக்டோபர், 2021

தடைகளால் மாறும் திசைகள் (ஆதி 24:49)

 தடைகளால் மாறும் திசைகள்



இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான். (ஆதி 24:49)


நாம் வேண்டிக்கொள்வதையும் தாண்டியே ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார்; என்றாலும், தடைகளை அறிந்து அவருடைய வழிகளைப் புரிந்துகொள்வோர் சிலரே. சுவராய் நிற்கும் தடைகள் அவரால் தகர்க்கப்படாமல், சுயமாய் தகர்க்க முயற்சித்தால் அழைத்துக்கொண்டுபோவதற்குப் பதில் நாம் அடைபட்டுவிடக்கூடும். ஆண்டவரே அடைத்த வழிகளுக்கெல்லாம் மீகா 2:13 விடையாகாது. 'என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையில் நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும்' (ஆதி 24:14) என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் ஆபிரகாமின் ஊழிக்காரன். அப்போது அங்கு வந்த ரெபேக்காள், அவன் வேண்டிக்கொண்டதற்கும் அதிகமாக அவனுக்குச் செய்தாள். ஆபிரகாமின் ஊழியக்காரன் ஒருவேளை தாகமாயிருந்திருந்தாலும், 'சொல்லும் பெண் எவளோ' என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பாயிருந்தது; ஆனால், ரெபேக்காளோ சொன்னதோடு மாத்திரமல்ல, சொன்னதை செய்தும் காண்பித்தாள். பத்து ஒட்டகங்களுக்கும், மேலும் ஊழியக்காரனோடு உடன் வந்திருந்திருந்த மனிதர்களுக்கும் ரெபேக்காள் ஒருவேளை தண்ணீர் வார்த்திருக்கக்கூடும். 

இத்தனை உறுதியான அடையாளங்கள் நடந்தபின்னும், 'இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன்' என்று ஆபிரகாமின் ஊழியக்காரன் சொல்லுகின்றானே. பெண் தேடி வந்தேன்; நான் வேண்டிக்கொண்டபடியே ஆண்டவர் ரெபேக்காளை எனக்குக் காட்டினார், நான் கர்த்தரிடத்தில் கேட்டதெல்லாம் அவளிடத்தில் நிறைவேறுவதைக் கண்டேன், எனவே கட்டாயம் நீங்கள் என் எஜமானுடைய மகனுக்குக் அவளை கொடுக்கத்தான்வேண்டும் என்று ரெபேக்காளின் வீட்டாரை அவன் வற்புறுத்தவில்லை; அல்லது, துரவண்டையிலே தான் வேண்டிக்கொண்டபடி அப்படியே நடந்ததும், ரெபேக்காளைக் கூட்டிக்கொண்டு அப்படியே ஓடிப்போய்விடவில்லை; மாறாக, ரெபேக்காளின் குடும்பத்தினரின் அங்கீகாரத்திற்காக ஆபிரகாமின் ஊழியக்காரன் காத்திருந்தான். ஆண்டவரே காட்டிவிட்டாலும், பெற்றோர் தடையாக நிற்பார்களென்றால், தசை மாறிச் சென்றுவிட ஆபிரகாமின் ஊழிக்காரன் ஆயத்தமாயிருந்தான்.  

இன்றோ, கர்த்தர் காட்டிவிட்டார் என்ற பெயரில், பெற்றோர் வேண்டாம் என்று சொன்னாலும்கூட பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபர்களும், வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போகத்தெரியாமல், ஓரிடத்திலேயே தங்கள் வாழ்க்கையினைப் புண்ணாக்கிக்கொண்டவர்களும், பெற்றோருக்குத் தெரிந்துவிடாமல், திருடிக்கொண்டு (கூட்டிக்கொண்டு) ஓடிவிடத் துணிந்துவிடுவோரும், தடைசெய்யும் பெற்றோரை எதிர்த்துநிற்கும் வாலிபர்களும், காதல் என்ற பெயரில் யாக்கோபைப் போல காலத்தையே வீணடித்துக்கொண்டிருப்போரும் உண்டே. இவை அனைத்தும் வேதத்திற்குப் புறம்பானவைகளே. 

  இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது (ஆதி 24:50) என்ற வார்த்தை ரெபேக்காளின் வீட்டாரினிடத்திலிருந்து வந்ததோடு, இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள் (ஆதி 24:51). ஒருபுறத்தை மாத்திரமல்ல, இருபுறத்தையும் ஆயத்தப்படுத்துகிறவர் என்பது இந்த நிகழ்விலும் உறுதியாகின்றதே. மறுபுறம் ஆயத்தமாகாவிட்டால், மாற்றுவழியில் பயணிப்பதே சரியானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக