ஞாயிறு, 10 அக்டோபர், 2021

எங்கே? எதற்காக? (ஆதி 18:9)

 எங்கே? எதற்காக?


அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். (ஆதி 18:9)

 

ஆண்டவருடனான உபசரிப்பும் உறவும் நம்மோடுகூட மாத்திரமே நின்றுவிடுவதல்ல; மாறாக, நான்கு திசைகளையும் வென்றுவிடக்கூடியது அது. அப்படியே, நமது சந்திப்பு மட்டுமே ஆண்டவரைத் திருப்தியாக்கிவிடாது; மாறாக, 'உன் மனைவி சாராள் எங்கே?' என்று ஆபிரகாமினிடத்தில் அவர் கேட்டதுபோல, 'உறவினர்கள் எங்கே? நண்பர்கள் எங்கே? தேசத்தினர் எங்கே? என்று நம்மிடத்திலும் கேட்பவர் அவர். நம்முடைய கூடாரத்திற்குள் ஜனங்களை வைத்திருந்தால், ஆசீர்வாதத்தின் சுதந்திரவாளிகளாக அவர்களையும் மாற்றிவிடமுடியும். நம்முடைய வருகையை மாத்திரமல்ல, நம்முடையவர்களின் வருகையையும் எதிர்பார்த்தவராகவே மீண்டும் வரவிருக்கிறார் அவர். 

பிறரைக் குற்றஞ்சாட்ட அல்ல, கூடச் சேர்த்துக்கொள்ளும் இடத்திலேயே நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். கீழ்ப்படியாமல், கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஆதாமும் ஏவாளும் ஒளிந்திருந்தபோது, தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: 'நீ எங்கே இருக்கிறாய்' என்றார் (ஆதி 3:8,9). ஆதாம் இருக்கிற இடத்திலேதான் துணையான ஏவாளும் இருப்பாள் என்பதை ஆண்டவர் அறிந்திருந்ததினாலேயே, 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று ஆதாமையே தேடினார். கீழ்ப்படியாமலிருந்தபோதிலும், சத்தத்திற்குச் செவிகொடுத்ததால், ஆடையினால் ஆதாமை மூடும் அளவிற்கு ஆண்டவரால் அருகே வர முடிந்தது; ஆதாமின் செவிகொடுத்தல், ஏவாளின் நிர்வாணத்தையும் மறைத்தது. பாவத்தினிமித்தம் ஒன்றாக ஒளிந்திருந்தபோதிலும், ஆண்டவர் வந்தபோதோ, ஏவாளை மட்டுமே காட்டிக்கொடுக்கிறான் ஆதாம். 'நீ எங்கே இருக்கிறாய்?' என்ற கேள்வி தன்னைக் காத்து ஏவாளைக் காட்டிக்கொடுப்பதற்கு அல்ல (ஆதி. 3:12); மாறாக, 'தானும் மனந்திரும்பி, ஏவாளையும் ஆதாயப்படுத்திக்கொள்ளும் இடத்திலேயே இருக்கிறேன்' என்பதை ஆதாம் உணர்ந்துகொள்ளவே. 

அநேக நேரங்களில், ஆண்டவர் தேடிவரும்போது, நாம் காப்பாற்றப்படுவதற்காக, உடன் இருப்பவர்களை குற்றவாளிகளாகக் காட்டிக்கொடுத்துவிட முயற்சிக்கிறோம். அவர்கள் இருக்கும் இடத்திலேயே நாமும் இருப்பதற்கு காரணம், அவர்களைக் காட்டிக்கொடுப்பதற்கு அல்ல, நம்முடைய தவற்றையும், அவர்களுடைய தவற்றையும் உணர்ந்து மனந்திரும்பவே; அல்லது, நம்முடைய சாட்சியின் வாழ்க்கையினால் அவர்களையும் சந்திக்கவே. யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்கலாம்; ஆனால், இயேசுவோ 'காட்டிக்கொடுக்கிறவனாக யூதாஸ் தன்னை சீஷர்களுக்கு முன்பாக வெளிப்படுத்தும்வரை' சீஷர்களுக்கு முன் யூதாசைக் காட்டிக்கொடுக்கவில்லையே. நமக்குத் துரோகம் செய்ய இருப்பவர்களைக் கூட நாம் காட்டிக்கொடுத்துவிடமுடியாது, 'சிநேகிதனே' என்று அழைக்கும் சுபாவம் நமக்கு வேண்டும்.  

கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான் (ஆதி 4:9). நாம் இஸ்ரவேல் வசம்சத்தாருக்கு காவலாளனாக வைக்கப்பட்டவர்கள் (எசே. 3:17). 'காவலாளியாயிருக்கவேண்டிய' மனிதர்களை 'கொலையாளிகளாக்கிவிட சத்துரு பல விதங்களில் முயற்சிக்கிறான். சகோதரர்களுக்கு விரோதமாய் எழும்பி நின்று அவர்களை வீழ்த்திவிட நம்மையே வீரர்களாக சத்துரு பயன்படுத்தத் துடிக்கிறான். நம்மோடு கூட இருப்பவர்களின் வீழ்ச்சிக்கு நாம் காரணமாக இருப்போமென்றால், 'உன் சகோதரன் எங்கே?' என்ற கேள்வி நம்மிடத்தில் கேட்கப்படும்போது, விடையை எங்கேயோ புதைத்து வந்திருப்போம். காவலாளியாக வைக்கப்ட்ட நம்மை 'காவலாளியோ' என்று சொல்லவைத்துவிடுவான் சத்துரு.  

இயேசு சமாரிய ஸ்திரீயை சந்தித்தபோது, 'நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா' என்றார் (யோவா 4:16). அவளால் அது கூடாததாயிருந்தது. தன்னுடைய பாவமான வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவினிடத்தில் அறிக்கையிட்டபோது, அவருக்கே மணவாட்டியாகும் மறுவாழ்வு அவளுக்குக் கிடைத்தது. நம்முடைய அருவருப்பான காரியங்களை அவரருகே அழைத்துவர முடியாது; என்றாலும், பாவமான நம்முடைய நிலையினை அவரிடத்தில் அறிக்கை செய்வோமென்றால், பாவமன்னிப்பின் நிச்சயத்தை மாத்திரமல்ல, பரலோக மணவாளனாகவும் அவரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக