திங்கள், 11 அக்டோபர், 2021

துணையும் தூணும் (ஆதி 20:8-10)

துணையும் தூணும்



அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான். பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான். (ஆதி 20:8-10)


தவற்றிலிருந்து தேவன் தப்புவிக்கும்போது, மனிதர்களிடத்தில் காணப்படும் தன்மை அவர்களது வாழ்க்கையின் தரத்தை வெளிக்காட்டப் போதுமானது. எனினும், அறிந்தும் திரும்பாமல், அதிலேயே முன்னேறுவோரின் தன்மையோ வேதனையானது. அபிமெலேக்கின் சரீர ஆசை அவனது வாழ்க்கைத் தரத்தைச் சரித்துவிடவிருந்தது. சந்தோஷத்திற்கான துணை தனக்கு இருந்தபோதிலும், சாராள் என்னும் ஆபிரகாமின் வாழ்க்கைத் தூணை அறியாமையினால் அசைத்துவிடவிருந்தான். எனினும், தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: 'நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே' (ஆதி 20:3) என்று சொன்னபோது, அந்த சொப்பனத்தை உதாசீனப்படுத்தாமல், அற்பமாக எண்ணாமல், அறிந்துகொண்டதும், தன்னைக் காத்துக்கொண்டான்.  

எனினும், தாவீதோ தவற்றிலேயே முன்னேறி வேதனையை வருவித்துக்கொண்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருந்தபோது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள் (2சாமு 11:2,3). எனினும், மற்றவனுடைய மனைவி என்று அறிந்துகொண்டபோதிலும், தாவீதினால் தனது சரீர ஆசையினை அடக்கமுடியவில்லை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன்; சவுலின் ஸ்தானத்தில் ராஜாவாக தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டவன்; கோலியாத்தை வீழ்த்தினவன்; தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதன்; என்றபோதிலும், பிறனுடைய மனைவி என்று அறிந்தபோதிலும், அவள் பின்னாலேயே தொடருகின்றான்.  

'நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே'  (ஆதி 20:9) என்றான் அபிமெலேக்கு; ஆனால், தாவீதோ, அறிந்தும் தன்மேலே கொடிய பாவத்தைச் சுமத்திக்கொண்டான். தன்னுடைய பிராணனைக் காக்க சாராளை சகோதரி என்றான் ஆபிரகாம். தன்னையும் மற்றும் தன்னுடைய ஜனங்களையும் சாவு தொடர்ந்துவிடக்கூடாது என்று சாராளை அனுப்பிவிட்டான் அபிமெலேக்கு; ஆனால், தாவீதோ தன்னுடைய பாவம் உரியாவுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தொடர்ந்து பத்சேபாளை தன்னுடனேகூட வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் உரியாவைக் கொன்றுவிட்டான். தனக்கு நேரிட்ட இந்த நிலையை தன் ஊழியக்காரர்களிடத்தில் சொல்லி மனந்திரும்பிக்கொள்ள அபிமெலேக்கு கூச்சப்படவில்லை. தனக்கு நேரிட்ட இந்தக் காரியம் மற்றவர்களுக்கும் நேரிட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவன் பேசிய வார்த்தைகளை வெட்கம் கட்டுப்படுத்தவில்லை. அது ஒரு சாட்சியான வாழ்க்கைக்கு ஈடானதல்லவோ. ஆனால், தாவிதோ, உரியாவின் கையிலேயே கடிதம் எழுதிக்கொடுத்து உயிரைப் பறித்துவிட்டான். 

அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே' (ஆதி 20:3) என்று சொன்னார்; ஆனால், தாவீதினிடத்தில் அப்படிச் சொல்லாததற்குக் காரணம் அவன் அறிந்திருந்ததினாலேயே. நாமும், கர்த்தருக்கு விரோதமான காரியம் என்று அறிந்திருந்தபோதிலும், அதனை துணிந்து செய்வோமென்றால், கர்த்தர் நம்மைத் தடுக்காமல் தூரத்திலேயே நின்றுகொள்ளுவார். அறிந்தும் செய்பவனுக்கு அடிகள்தான்தானே மிஞ்சும். சிம்சோன் தூணைச் சரித்துவிட்டு தானும் செத்ததைப் போல மற்றவர்களுடைய துணையைச் சரித்துவிட்டு நாமும் செத்துவிடக்கூடாது. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக