அழைப்பும் ஆசீர்வாதமும்
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, (ஆதி 26:12-14)
அழைக்கப்பட்ட இடத்தில் ஆசீர்வதிக்கப்படுவதே ஆண்டவரது விருப்பம். கர்த்தரின் ஆசீர்வாதம் ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் (நீதி. 10:22); என்பதை அறிந்திருந்தபோதிலும், பல வேளைகளில், அழைக்கப்படாத, ஆண்டவரது சித்தத்திற்குத் தூரமான மற்றும் ஆண்டவருக்கு விருப்பமில்லாத இடத்தில் நம்முடைய வாழ்க்கையைப் பொருத்திக்கொள்வதினால், மற்ற மனிதர்களுடைய வாழ்க்கையிலும், நம்முடைய வாழ்க்கையிலும் வேதனையை வருவித்துவிடுகின்றோம்.
ஈசாக்கு பஞ்சம் வந்தபோது, பெலிஸ்தியரின் தேசத்தில் தஞ்சம் அடைந்தான். ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தபோது, கர்த்தர் நூறுமடங்கு ஆசீர்வதித்தார்; அவன் ஐசுவரியவானானான், விருத்தியடைந்தான், மகா பெரியவனானான்; பலத்தவனானான் (ஆதி. 26:16); என்றாலும், பெலிஸ்தியர்கள் அவன் பேரில் பொறாமைகொண்டு, அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரார் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள் (ஆதி 26:15). ஈசாக்குடைய வேலைக்காரர் நீரூற்றை கண்டபோது, கேராரூர் மேய்ப்பர்களோ இந்தத் தண்ணீர் எங்களுடையது என்று சொல்லி வாக்குவாதம் பண்ணினார்கள் (ஆதி. 26:20). அதுமாத்திரமல்ல, ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே (ஆதி 26:10) என்று சொல்லுமளவிற்கு ஆபத்து ஈசாக்கைச் சூழ்ந்திருந்தது.
ஆபிரகாமின் வாழ்க்கையிலும் நடந்தது இதுவே. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் (ஆதி 12:1,2) என்றே வாக்குக் கொடுத்தார். அழைக்கப்பட்ட தேசத்திலேயே ஆசீர்வதிக்கப்படவேண்டியவன் ஆபிரகாம்; அங்கிருந்தே ஆசீர்வாதத்தை உலகெங்கிலும் பரப்பவேண்டியவன்; என்றாலும், அழைக்கப்பட்ட இடத்தில் உணவு இல்லை என்ற நிலை வந்தபோது, எல்லையைக் கடந்து எகிப்துக்குச் சென்றுவிட்டான். விளைவு, தன்னுடைய வாழ்க்கையிலும், பார்வோனுடைய வாழ்க்கையிலும் வேதனை உண்டாவதற்குக் காரணமாகிவிட்டான். மனைவியை எகிப்திய மன்னனிடத்தில் அனுப்பிவிட்டதால் ஆபிரகாமின் மனதிற்கு வேதனை; அப்படியே, ஆபிரகாமின் மனைவியை அழைத்ததால், மன்னனுக்கும் வாழ்க்கையில் வேதனை. அவள் (சாராள்) நிமித்தம் அவன் (பார்வோன்) ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது. ஆனால், ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார் (ஆதி 12:16,17). சத்தியத்தை விட்டுக்கொடுப்பதினால், ஜனங்களிடமிருந்து அதிகம் கிடைக்கலாம்; என்றாலும், ஊழியர்களுக்கும் ஜனங்களுக்கும் அது வேதனையையே கொண்டுவரும். வேதனையுடன் ஆசீர்வாதத்தை அனுபவிக்க தேவன் நம்மை அழைக்கவில்லையே. ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆபிரகாம் காணப்பட்டபோதிலும், எகிப்திலே வேதனையுடன் தனது உயிருக்குப் பயந்தவனாகவே வாழ்ந்துகொண்டிருந்தான்.
நாமும் ஆசீர்வதிக்கப்படவேண்டும்; நம்மூலம் மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்படவேண்டும்; அதுவே, நாம் அழைக்கப்பட்ட இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளச் செய்யும். யோனாவின் திசைமாறிய பயணம், மற்றவர்களையும் கடலில் திக்குமுக்காடச் செய்துவிட்டதே. அவன் கடலில் வீசப்பட்டதாலும் (யோனா 1:12), பிறரது பொருட்கள் கடலில் வீசப்பட்டதாலும் (யோனா 1:5), அவனுக்கும் அவனோடு பயணித்த மற்றவர்களுக்கும் இழப்பையும் மனவேதனையையும் கொண்டுவந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக