தகப்பனின் துக்கம்
அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். (ஆதி 37:35)
நாம் மட்டும் தகப்பனுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்றால் போதாது, ஆதாயம்பண்ணப்பட்டவர்களையும் நம்முடன் அழைத்துச் செல்லவேண்டும். தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் (லூக் 16:27,28) என்று பாதாளத்தில் ஐசுவரியவான் அங்கலாய்த்ததுபோல, பரலோகத்திற்கு நாம் சென்றுவிட்டாலும், இவ்வுலகத்தில் உடனிருந்தவர்களைத் தேடி அங்கலாய்க்கும் நிலை அங்கு உண்டாகிவிடக்கூடாதே! மரணத்திற்குப் பின்னான அங்கலாய்ப்பு, மறுபடியும் நம்மை இவ்வுலகத்திற்குக் கொண்டுவராதே!
எத்தனை பெரிய சுவிசேஷகராகவோ, ஊழியக்காரராகவோ நாம் இருந்தாலும், சுவிசேஷம் அறிவிக்கும் பணியும், ஆத்துமாக்களைக் காப்பாற்றும் பணியும், ஆண்டவரின் சமுகத்தில் விளைச்சலின் அரிக்கட்டுகளாக அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கும் பணி இவ்வுலகத்தோடேயே முடிந்துவிடும்; எனவே, உயிரிருக்கும் வரை துரிதமாக ஓடுவதே நமது இலக்காயிருக்கட்டும். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்
(பிலி 1:23,24) என்று பவுல் எழுதுகின்றாரே; சரீரத்தில் நாம் தரித்திருக்கும் வரையிலேயே, சத்தியத்தை உலகமெங்கும் நாம் சுமந்து செல்ல முடியும். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத் 25:18) என்று கிறிஸ்து போதித்ததைப் போல, தாலந்தாகத் தரப்பட்டிருக்கும் சரீரம் தரையில் குழிதோண்டி புதைக்கப்படும் முன் சத்தியம் நம்மால் விதைக்கப்படவேண்டும். வாழும் நாட்களில் நமது வாழ்க்கையைக் குறித்த தரிசனத்தை நாம் மறுதலித்துவிடுவோமென்றால், மறந்துவிடுவோமென்றால் தகப்பனின் துக்கம் பெருகுவதற்கு நாம் காரணமாகிவிடுவோம்.
யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்டாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து, பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள் (ஆதி 37:31,32). தகப்பனுடைய துக்கத்திற்குக் காரணமாயிருக்கும் குமாரர்களே தகப்பனுக்கு அருகிலே வந்து நிற்கிறார்கள். இத்தகைய நிலை நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்டுவிடக்கூடாது. தீமை செய்து துக்கத்தை ஏற்படுத்தினார்கள், யோசேப்பின் சகோதரர்கள்; நாமோ நன்மையைச் செய்யாமல் தகப்பனுக்குத் துக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள் (ஆதி 37:23,24). அங்கியைக் கழற்றியபின், அரைநிர்வாணமாக, ஆகாரம் ஏதுமில்லாத வெறுங்குழியில் யோசேப்பு கிடக்கும்போதே, ஆகாரம் உண்ணும்படியாக பந்தியாக சகோதரர்கள் அமர்ந்திருந்த காட்சி பரிதாபத்திற்குரியது. அநேக நேரங்களில், யோசேப்பின் சகோதரர்கள் செய்த தவற்றினை நாமும் செய்துவிடுகின்றோமே! குழியில் கிடக்கும் ஆத்துமாக்களைக் கண்டுகொள்ளாமல், உடன் சகோதரர்களோடு உணவருந்திக்கொண்டிருக்கின்றோமே. மற்றவர்களுடைய ஆத்தும பசியைக் குறித்து கவலை கொள்ளாமல், நம்முடைய சரீரப்பிரகாரமான பசியைப் போக்கிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துகொண்டிருக்கின்றோமே. தகப்பனுடைய துக்கத்திற்குக் காரணமானவர்களே, ஆறுதல் கூறவும் அருகில் வந்து நின்றதைப் போன்ற நிலை, நம்முடைய வாழ்க்கையிலும் உண்டாகிவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக