திங்கள், 11 அக்டோபர், 2021

அழைப்பே பாதுகாப்பு (ஆதி 20:1,2)

அழைப்பே பாதுகாப்பு


ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான். அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். (ஆதி 20:1,2)

 

அழைப்பின் வழியில் நடந்தால், அவரது விழிகள் நம்மேலேயே இருக்கும். கானானியர்களின் எல்லையில் உள்ள பட்டணம் கேரார் (ஆதி. 10:19); பெலிஸ்தியர்கள் அதிலே குடியிருந்தார்கள். எனவே, அபிமெலேக்கும் ஆபிரகாமும் பெயர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள் (ஆதி 21:32) என்று வேதம் கூறுகின்றது. பெலிஸ்தியருடைய தேசத்தின் வழியாக பயணித்துக்கொண்டிருந்தபோதிலும், ஆபிரகாமின் பாதுகாப்போ ஆண்டவரின் கரத்திலிருந்தது. அரசாட்சிக்கு உட்பட்ட மக்களின் வாழ்க்கை அக்கிரமங்களினால் நிறைந்திருந்தபோதிலும், அசரனையோ அழைத்தவனுக்காக அசைத்துக்கொண்டிருந்தார் ஆண்டவர்.  கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும் (யாக் 3:4) என்பதற்கு இணங்க, பெலிஸ்தியர்களின் வாழும் அவ்விடத்தை 'ஆபிரகாமுக்குச் சாதகமாக அபிமெலேக்கைக் கொண்டு திருப்பினார் கர்த்தர்.'

யோசேப்பின் வாழ்க்கையிலும் இது நடந்ததல்லவோ? யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டபோது, எதிர்பாராத சூழல்கள் புயல்களாக வாழ்க்கையில் வீசினாலும், அரசனை அசைத்து யோசேப்பை அரியனையில் உயர்த்தினாரே. தானியேல் மற்றும் எஸ்தரின் சரித்திரமும் இந்தச் சத்தியத்தின் அடிப்படையிலானதுதானே. ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார் (நீதி 21:1). 

ஆபிரகாம் அழைப்பினை மனதில் கொண்டு பயணித்தான்; லோத்துவோ செழிப்பினை மனதில்கொண்டு பயணித்தான். லோத்து, தெய்வபயமில்லாத இடத்தை தானாகவே தெரிந்துகொண்டான்; எனவே, சோதோமில் அவனுக்கு நெருக்கம் உண்டானபோது, யாரும் உதவ முன்வரவில்லை. சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் (ஆதி. 14:1) சோதோமை கொள்ளையிட்டபோது, ஆபிரகாம் சோதோமின் உடமைகளைக் காப்பாற்றிக்கொடுத்தான். லோத்துவின் பெயராலேயே சோதோமின் வாழ்ந்த மற்ற மனிதர்களும் அவர்களின் உடமைகளும் காப்பாற்றப்பட்டன. லோத்து, அங்கே இல்லாதிருந்தால், ஆபிரகாம் அங்கு வந்திருக்க வாய்ப்பு இல்லையே. எனினும், இவைகளில் ஒன்றும் நினைக்கப்படவில்லை. ஒருவேளை லோத்துவின் வீட்டைச் சூழ்ந்துநின்ற  சோதோமின் புருஷர்கள்; கூட ஆபிரகாம் காப்பாற்றியவர்களாக இருந்திருக்கக்கூடும். அழைக்கப்பட்ட ஆபிரகாமோடு பயணிக்காததால், சோதோமின் மக்களோடு லோத்துவும் அவனது செல்வங்களும் சிறையாகவேண்டியதாயிற்று (ஆதி. 14:12) ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் (ஆதி 14:21) என்று சொன்னவன் சோதோமின் ராஜா. எனினும், சோதோமின் மனுஷர் லோத்துவின் வீட்டைச் சூழ்ந்துகொண்டபோது, சோதோமின் ராஜாவாகிய பேரா (ஆதி. 14:2) லோத்துவுக்கு எந்த உதவியும் செய்ததாக வேதம் குறிப்பிடவில்லையே.

அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றானே (ஆதி 21:22,23). அழைப்பு பெற்ற மனிதனிடத்தில் அரசன் தயைவேண்டி நிற்கிறான். அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டபோது, இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை (ஆதி 21:25, 26) ஆபிரகாமுக்குச் சாதகமாக பதிலளித்தான். அழைப்பினை நோக்கிய பயணத்தில் ஆண்டவரே அரணாயிருப்பார். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக