செவ்வாய், 12 அக்டோபர், 2021

மீண்டும் ஓர் மீறுதல் (ஆதி 25:5,6)

  மீண்டும் ஓர் மீறுதல்



ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.  ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கேபோகக் கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். (ஆதி 25:5,6)


ஒருமுறை ஆண்டவர் தடுத்ததை, மறுமுறை நாமே உடைத்தால் பாதுகாப்பின் வேலியையே அது பழுதாக்கிவிடக்கூடும். இஸ்மவேலைக் குறித்து, 'அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன்' என்றார் ஆண்டவர் (ஆதி 21:13); அப்படியென்றால், கேத்தூராளுக்குப் பிறந்த பிள்ளைகளும் ஆபிரகாமின் வித்துக்கள்தானே. ஆகாரையும் ஆபிரகாமுக்கு அவள் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலையும் ஆபிரகாமின் வீட்டைவிட்டு விரட்டினாள் சாராள். ஆபிரகாமோடு சேர்த்துவைத்ததும் சாராளே, அப்படியே ஆபிரகாமைவிட்டுப் பிரித்தெடுத்ததும் சாராளே. அப்படியே, கேத்தூராளுக்குப் பிறந்த பிள்ளைகளையும் ஆபிரகாம் ஆபிரகாம் தன் வீட்டை விட்டு கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.  சாராள் தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாருக்குச் செய்ததைத்தானே, ஆபிரகாமும் கேத்தூராளுக்குச் செய்துவிட்டான்.  நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் (மத் 15:5,6) என்று இயேசு கிறிஸ்து சொன்னதைப் போலத்தான் ஆபிரகாம் கேத்தூராளினிடத்தில் பிறந்த தன்னுடைய பிள்ளைகளை அனுப்பிவிட நேர்ந்தது. 

சாராளுடைய நெருக்குதலினால் ஒருமுறை ஆபிரகாம் தனது வாழ்க்கையில் வலியினை அனுபவித்துவிட்டபோதிலும், அதனை தீர்ப்பதற்கு ஆண்டவர் உதவி செய்தார். இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்று சாராள் சொன்னபோது, தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது (ஆதி 21:10,11) என்றே வேதத்தில் வாசிக்கின்றோம்; ஆபிரகாம் இஸமவேலை தன்னுடைய மகனாகவே பார்த்துக்கொண்டிருந்தான்; எனவே, இஸ்மவேலை அனுப்பிவிட ஆபிரகாமின் மனம் இடங்கொடுக்கவில்லை. என்றபோதிலும், தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள் என்று சொன்னபோது, ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான் (ஆதி 21:12,14). ஆனால், கேத்தூராளின் பிள்ளைகள் தன்னுடைய பிள்ளைகளாயிருந்தபோதிலும், அவர்களை அனுப்பிவிடும்போதோ, ஆபிரகாம் துக்கப்படவில்லை, அவர்கள் போகவேண்டும் என்றுதான் நினைத்தான். வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டபின் வலி தெரியவில்லையோ!

ஆகார் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள் (ஆதி 21:14-16). இதைப்போல, கேத்தூராளின் பிள்ளைகள் கீழ்த்தேசத்திற்குப் புறப்பட்டுப்போய் எங்கெங்கே அலைந்து திரிந்து எத்தகைய கஷ;டங்களை தங்கள் வாழ்க்கையில் அனுபவித்தார்களோ! இஸ்மவேலை அனுப்பிவிடுகிறபோது, ஆண்டவர் ஆபிரகாமோடு இடைபட்டார்ளூ ஆனால், மீறுதலின் போது ஆண்டவர் மீண்டும் வந்து ஆபிரகாமோடு இடைபடவில்லை. பலவருண அங்கியைக் கொடுத்து, யாக்கோபு யோசேப்பை வித்தியாசப்படுத்திக் காண்பித்ததினால், சகோதரர்கள் அவனுக்கு விரோதிகளானது போல, தனக்கு உண்டான யாவற்றையும் ஈசாக்குக்கு ஆபிரகாம் கொடுத்துவிட்டு, ஆகாரின் பிள்ளைக்கு அப்பத்தையும் தண்ணீரையும், அப்படியே கேத்தூராளின் பிள்ளைகளுக்கு நன்கொடைகளையும் கொடுத்து அனுப்பிவைத்தது அவர்களை ஈசாக்குக்கு எதிரிகளாகவே மாற்றியிருக்கும்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக