பாதை மாறும் பதில்
அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். (ஆதி 21:13)
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். (ஆதி 21:18)
நமது விண்ணப்பத்திற்கான பதில் நமது ஆசீர்வாதத்தின் மதிலுக்குள்ளேயே காணப்படவேண்டும் என்பது முக்கியம். கர்த்தர் ஆபிராமை அழைத்தபோது, 'நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்' (ஆதி 12:1,2) என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தார். 'தேசம்' 'இனம்' 'வீடு' இவைகளிலுள்ள ஜனங்களை விட்டுப் புறப்படச்செய்து, இழந்ததற்கு ஈடாகவும், அதற்கு மேலோகவும் அவனை ஆசீர்வதிக்க கர்த்தர் சித்தம் கொண்டிருந்தார். என்றாலும், இழந்த நிலையிலேதான் அநேக நாட்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தான் ஆபிரகாம்.
சாராளின் ஆலோசனையின் பெயரில் ஆகாரிடத்தில் இஸ்மவேலைப் பெற்றபோது, 'இஸ்மவேலின் வழியாகவே பெரிய ஜாதியினைப் பார்த்;துக்கொண்டிருந்தான் ஆபிரகாம்.' உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் (ஆதி 17:19) என்று ஆண்டவர் ஆபிரகாமினிடத்தில் சொல்லியிருந்தபோதிலும், பிறக்கவிருக்கும் ஈசாக்கை எதிர்பார்த்து அல்ல, 'இஸ்மவேலுக்காகவே விண்ணப்பம் செய்துகொண்டிருந்தான் ஆபிரகாம்.' ஆண்டவர் ஆபிரகாமின் விண்ணப்பத்தைக் கேட்டார். எனவே, ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி: இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீhவதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் (ஆதி 17:20) என்றார். 'இஸ்மவேல் உன் உடன்படிக்கையின் புத்திரன் அல்ல; எனவே, இஸ்மவேலுக்காக நீ விண்ணப்பம் செய்யாதே' என்று ஆபிரகாமினிடத்தில் ஆண்டவர் கூறவில்லை; ஆபிரகாமின் ஜெபத்தை தள்ளிவிடவுமில்லை; மாறாக, ஜெபத்திற்கு பதில் கொடுக்கிறார்; ஆனால், அந்த பதிலோ ஆபிரகாமுக்குச் சொந்தமில்லாதது. நாமும் சில நேரங்களில், ஆபிரகாமைப் போன்றவர்களாகவே காணப்படுகின்றோம். 'வழி இதுவே' என்று ஆண்டவர் காட்டும்போது, கண்களுக்கு தற்சமயம் தென்படும் வழிகளை மனதில் கொண்டவர்களாக தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கின்றோம்; அதுவே நம்முடைய வாழ்க்கையில் வலியினையும் உண்டாக்கிவிடுகின்றது.
கர்த்தர் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார் (எண்; 22:12). என்றபோதிலும், பிலேயாம் கர்த்தரின் வார்த்தைக்கு செவிகொடுக்காமல், தொடர்ந்து அவரிடத்திலேயே கேட்டுக்கொண்டிருந்தான். கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்று பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களிடத்தில் சொன்னான். இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார் (எண்; 22:19,20). 'ஆண்டவர் ஒருமுறை மறுத்திருக்க' மறுமுறையும் அவரிடத்தில் விண்ணப்பம் பண்ணிக்கொண்டேயிருந்ததால் தன்னுடைய விருப்பத்தின்படி பெற்றுக்கொண்ட அனுமதியை ஆண்டவருடைய விருப்பம் என்று நினைத்து முன்னேறிச் சென்றபோது, முன்னே அவரே வழிமறித்து நின்றாரே. ஆபிரகாமின் வாழ்க்கையிலும் நடந்தது இதுவே, ஈசாக்கினிடத்தில் என்னுடைய உடன்படிக்கை விளங்கும் என்று ஆண்டவர் சொல்லியிருக்க, தொடர்ந்து இஸ்மவேலுக்காக ஜெபித்துக்கொண்டேயிருந்தால், துஷ்டமனிதனான இஸ்மவேலின் சந்ததி 'பெரிய ஜாதியாகும்படிக்கான' வாசலை ஆபிரகாமின் விண்ணப்பம் திறந்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக