செவ்வாய், 12 அக்டோபர், 2021

வீட்டை உடைக்கும் வேர் (ஆதி 27:46)

 வீட்டை உடைக்கும் வேர்




பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப்பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணை கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள். (ஆதி 27:46)   


பகையை பரவவிடுவோமென்றால், இறுதியில் அது நெருங்கிய உறவிலும் பிரிவை உண்டாக்கிவிடும். அந்நிய மனிதர்களால் நம்முடைய மனதில் உண்டாக்கப்படும் கசப்பை உடனே கசக்கி எரிந்துவிடக் கற்றுக்கொள்ளாவிட்டால், அந்நியோந்நியமானவர்களிடத்திலும் அந்த கசப்பு பரவி விரிசலை உண்டாக்கிவிடும். எனவே பவுல், நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது (எபே 4:26) என்று ஆலோசனையாக எழுதுகின்றார். மேலும், ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் (எபி .12:15,16) என்று கசப்பைக் குறித்து எழுதும் எபிரெய ஆக்கியோன், ஏசாவையும் இணைத்தே எழுதி உணர்த்துகின்றார். 

ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதி 26:34,35); இந்த மனநோவு, ஏசாவை ரெபெக்காள் வெறுப்பதற்கு பிரதானமானதோர் காரணமாக அமைந்துவிட்டது. மருமகள்களை வெறுக்கத்தொடங்கிய ரெபெக்காளுடைய கசப்பு மகன் மீதும் பரவி, மகனையே வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாள். இன்றும் இப்படிப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்கள் உண்டு. மருமகள் மீது உள்ள கோபத்தை, மனக்கசப்பை நாளடையவில் பெற்ற மகன் மீதே காட்டிவிடும் பெற்றோர்கள் உண்டு. மகன் அல்ல மகள் என்ற பாசத்தின் உறவை மருமகள் அல்லது மருமகன் மீதுள்ள கசப்பினால் இழந்துவிட்ட பெற்றோர்கள் அநேகர். 

அதுமாத்திரமல்ல, ஈசாக்கு மூத்த மகனாகிய ஏசா வேட்டையாடிக் கொண்டுவருவதினால் அவன் மேலும், அதனைச் சமைத்துக்கொடுக்கும் ஏசாவின் மனைவிகளாகிய தனது மருமக்கள்மார்களின் மேலும் அதிக பிரியமாயிருந்தான். மனைவியினிடத்திலிருந்தோ அல்லது மருமக்கள்மார்களிடத்திலிருந்தோ, யாரிடத்திலிருந்து வந்தாலும் சரி; எனக்குத் தேவை நல்ல ருசியான போஜனமே என்ற நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருந்தான் ஈசாக்கு. நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா (ஆதி 27:2-4) என்று ஈசாக்கு ஏசாவினிடத்தில் சொன்னபோது, அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான் (ஆதி 27:31); இந்த உணவுகளை ஈசாக்கின் மருமக்கள்மார்களான ஏசாவின் மனைவிமார்கள்தானே சமைத்துக்கொடுத்திருப்பார்கள். மாமியாரா? மருமக்கள்மாரா? என்ற போட்டி ஈசாக்கின் வீட்டில் நடந்துகொண்டிருந்திருக்கக்கூடும். 

ரெபெக்காள் வெள்ளாட்டுக்குட்டிகளை சமைத்து யாக்கோபின் கரங்களில் கொடுத்து ஈசாக்கினிடத்தில் அனுப்பியபோது, ஏசாவின் மனைவிகள் அதனை அறிந்திருக்கவில்லையே; அப்படியென்றால், ஏசா தன் மனைவிகளுடன் தகப்பனுடைய கூடாரத்திற்கு அருகே தனியாகத்தானே குடியிருந்திருக்கவேண்டும். மருமக்கள் மீது உண்டான கசப்பு, பிள்ளைகளைப் பிரிப்பதற்குக் காரணமாக மாறியதோடு மாத்திரமல்லாமல், இணைந்து வாழவேண்டிய குடும்பத்தையே இரண்டாக்கிவிட்டதே; இந்நிலை நம்முடைய குடும்பத்தில் உண்டாகிவிடாதபடி, நாம் எச்சரிக்கையாயிருப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக