திறக்கப்படாத கண்கள்
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். (ஆதி 21:19)
இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் ஆண்டவர் வழிநடத்திவந்தபோது கன்மலைகளைப் பிளந்தார்; ஆனால், ஆகார் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது அவளது கண்களைத் திறந்தார். ஆபிரகாமின் வீட்டை விட்டு ஆகார் துரத்தப்பட்டபோது, அவள் புறப்பட்டு பெயர்செபாவின் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். பெயர்செபாவின் வனாந்தரத்தில் தோண்டப்பட்ட சில தண்ணீர் துரவுகள் எற்கனவே இருந்தபோதிலும், ஆகாரின் கண்கள் அடைக்கப்பட்டிருந்ததால், அவைகளைக் காணக்கூடாதவளாயிருந்தாள். சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கையிலும் கன்மலைகளைப் பிளக்கிறவராக ஆண்டவர் செயல்பட்டபோதிலும், கண்கள் திறக்கவேண்டிய சூழ்நிலைக்குள்ளும் சிலர் காணப்படுகின்றனர். கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள் (ஏசா 43:8) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் உரைக்கின்றாரே. அப்படியே, உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? (மாற் 8:18) என்று இயேசு கிறிஸ்துவும் 'கண்கள் திறக்கப்படாத நிலையிலிருக்கும் ஜனங்களைச்' சுட்டிக்காட்டுகின்றாரே.
எலிசா தோத்தானில் இருக்கிறான் என்று சீரிய ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்
(2 இரா 6:13-15). ஆனால் எலிசாவோ, பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான் (2இரா 6:16). வேலைக்காரன் தன் கண்களால் 'சத்துருவின் சேனையை மட்டும்தான் பார்க்கமுடிந்தது;' ஆனால், எலிசாவோ தன் கண்களால் 'சர்வவல்லவரின் சேனையைப் பார்க்க முடிந்தது.' அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான் (2இரா 6:17). நம்முடைய கண்களும் சில நேரங்களில் சத்துருக்களையே பார்க்கும் திறனுள்ளவைகளாகவும், சர்வவல்லவரைப் பார்க்கவோ திறக்கப்படாதவைகளாகவும் இருப்பதனால், நிர்ப்பந்தமான நேரங்களில் திணறுகிறோம்.
ஆகாரின் கண்கள் திறக்கப்படாதிருந்ததைப் போலவே எலிசாவின் வேலைக்காரனது கண்களும் திறக்கப்படாமலிருந்தது. தனக்கு முன்னே இருக்கும் தேவமனுஷனை அவனால் பார்க்கமுடிந்தது; ஆனால், தேவனுடைய சேனையையோ அவனால் பார்க்கமுடியவில்லை. நாமும், சில வேளைகளில் தேவ மனிதர்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். தேவனுடைய சேனையை காணுமளவிற்கு நமது கண்களும் திறக்கப்படவேண்டும். தேவ மனிதர்கள் காண்பதை நம்மால் காணமுடிகிறதா? ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டிருந்தால் இது சாத்தியமே. 'காண்கிறேன்' 'காண்கிறேன்' என்று சிலர் சொல்லும்போது, கண்கள் திறக்கப்பட்டிருந்தால் மாத்திரமே, நீங்களும் காண்பதும் அத்துடன் அத்தகையோரை அடையாளம் கண்டுகொள்ளுவதும் சாத்தியம். இல்லையேல், தேவனுக்குப் பதிலாக தேவ மனிதர்களையே பார்த்துக்கொண்டிருப்பவர்கள் திசைமாறிப்போய்விடக்கூடும்.
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது (எண்; 24:16) என்று பிலேயாம் சொல்லும் வார்த்தைகள்; கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், சத்துருவின் பக்கமாக நின்றாலும், கர்த்தருக்கு விரோதமாகப் பேசமுடியாது என்பதைத்தானே சுட்டிக்காட்டுகின்றது.கண்கள் திறக்கப்பட்டால் வாழ்க்கையில் முன்னே இருக்கும் காரியங்களை அறிந்துகொள்ளமுடியும், இல்லையேல் வாழ்க்கையை வனாந்தரமாகவே நினைத்து அலைந்து திரிந்துகொண்டிருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக