ஞாயிறு, 10 அக்டோபர், 2021

தனிமையில் தேவனோடு (ஆதி 18:22)

தனிமையில் தேவனோடு


அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். (ஆதி 18:22)


ஆண்டவருடனான தனிப்பட்ட சந்திப்பு, ரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துவதுடன்; கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கான பாதுகாப்பினையும் நம்முடைய வாழ்க்கையில் பெலப்படுத்துகின்றது.   

மம்ரேயின் சமபூமியிலே மூன்று புருஷர்கள் ஆபிரகாமுக்கு எதிரே நின்றார்கள் (ஆதி. 18:1); மூன்று புருஷர்களையும் உபசரித்தான் ஆபிரகாம்; எனினும், இரண்டு புருஷர்களை மட்டுமே சோதோமுக்கு நேராக ஆபிரகாம்  வழியனுப்பிவைக்கிறான் (ஆதி. 19:1).  அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான் (ஆதி. 18:22). அழிக்கும்படியாக இறங்கிவந்த ஆண்டவரை, அழைக்கப்பட்ட ஆபிரகாம் தனது வீட்டருகிலேயே நிறுத்திவிட்டான். தூதர்களோடுகூடத்தானே வந்தேன்; எனவே, தூதர்களோடு கூடச் சென்றுவிடவேண்டும் என்று ஆண்டவரும் அவசரப்படவில்லை; மாறாக, ஆபிரகாம் உடனான உறவின் இறுக்கத்தினால், உரையாடும்படியாக அங்கேயே நின்றுவிட்டாரே. ஒருவேளை, 'என்ன! ஆபிரகாமைப் பார்த்ததும் கூடவந்தவர் நின்றுவிட்டாரே' என்று தூதர்கள் இருவரும் நினைத்திருப்பார்களோ! 

சோதோமைக் குறித்து ஆண்டவர் சொன்னபோது, நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் (ஆதி 18:21) என்றுதான் சொல்லுகிறார்; என்றாலும், அழைக்கப்பட்ட ஆபிரகாமை தாண்டி அவசரமாக அவர் அங்கு சென்றுவிடவில்லை; தூதர்களை அனுப்பிவைத்தபின்பு, 'நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?' (ஆதி 18:18) என்று தான் வந்த நோக்கத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார். அதுவரை தெரிந்திராத அழிவின் ரகசியம், ஆபிரகாமின் அறிவுக்கு வந்தது. 

ஆண்டவருடனான தனிப்பட்ட உறவு, அநேக ரகசியங்களை நம்முடைய அறிவுக்குக் கொண்டுவரும். தூதர்கள் இருக்கும்போது சோதோமின் அழிவைக் குறித்து ஆண்டவர் பேசவில்லை; ஆனால், தனியாக  நின்றபோதோ, உள்ளத்தை ஆபிரகாமுக்கு முன் அவர் அடக்கிவைக்கவில்லை. யாக்கோபின் தனிமையிலான சந்திப்பு, ஆசீர்வாதங்களைத் தக்கவைத்துக்கொள்ள தக்க பாதுகாப்பைக் கொடுத்தது. நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் (ஆதி 32:10) என்று தன்னுடைய ஆசீர்வாதத்தின் அளவை அவன் சொன்னபோதிலும், சத்துருவாக தான் நினைத்துக்கொண்டிருக்கும் உடன்பிறந்த சகோதரனாகிய 'ஏசாவின் கைகளிலிருந்து அவ்விரண்டு பரிவாரங்களும் தப்புமா?' என்ற பயம் அவனைப் பிடித்திருந்தது. எனவே, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தி, யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான் (ஆதி 32:23-26). ஆபிரகாமுக்கும் 'ஒரு புருஷனாக' காட்சியளித்தவர், யாக்கோபுக்கும், 'ஒரு புருஷனாகவே' காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. ஆசீர்வாதத்திற்காக வேண்டிக்கொள்வோர் அநேகர்; ஆனால், ஆசீர்வாதத்தின் பாதுகாப்பிற்காக, பாதத்தைப் பிடித்துக்கொண்டவர்கள் சிலரே. 'இரண்டு பரிவாரங்களையும் இன்று அநேகர் இழந்ததற்குக் காரணம் இதுவே.'

'என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன்' (யாத் 32:10) என்று கர்த்தர் சொன்னபோது, தன்னுடைய ஆசீர்வாதத்தை கணக்கில்கொண்டு, மற்றவர்களின் மரணத்தைக் கண்டுகொள்ளாமல் மோசே விட்டுவிடவில்லை; அழைக்கப்பட்டவனின் மனம், அடுத்தவரின் மரணத்தை விரும்புவதில்லை. எனவே, 'ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும்' (யாத் 32:32) என்று நின்றுகொண்டிருந்தானே. அழிந்துபோகும் மனிதர்களுக்காக தனிமையில் உறவாடும் குணம் நம்மிலும் உருவாகட்டும். 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக