புதன், 13 அக்டோபர், 2021

உடன்படிக்கை யாரோடு? (ஆதி 31:44)

 உடன்படிக்கை யாரோடு?



இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். (ஆதி 31:44)


'உடன்படிக்கை' என்ற பெயரில் தேவனுக்குப் பிரியமில்லாத வழிகளில், அந்நிய தெய்வங்களுக்கடுத்த வழிமுறைகளில் சிக்கிக்கொள்ளும் மனிதர்கள் அநேகர். உடன்படிக்கையின் நோக்கம் என்ன? யாரோடு உடன்படிக்கை செய்யப்போகிறோம்? யாருக்கு முன் உடன்படிக்கை செய்யவிருக்கிறோம்? உடன்படிக்கையின் பின்விளைவு என்னவாயிருக்கும்? உடன்படிக்கையின்போது முக்கியமானவைகளும் மற்றும் முன்நிறுத்தப்படவேண்டியவைகளும் எவையெவை? உடன்படிக்கையின்போது விட்டுக்கொடுக்கக்கூடாதவை என்னென்ன? உடன்படிக்கையின்போது உடனிருக்கவேண்டியது யார்? உடன்படிக்கையினை காத்துக்கொள்வது எப்படி? போன்ற உடன்படிக்கையில் பொதிந்திருக்கும் உட்கருத்துக்களையெல்லாம் பொருட்படுத்தாமல், அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட தங்களை விட்டுக்கொடுத்துவிட்டவர்கள் இந்த உலகத்தில் அநேகர் உண்டு. அந்நிய தெய்வங்களை முன்னிறுத்தி செய்யப்படும் உடன்படிக்கைகளை நாம் ஏற்றுக்கொள்வோமென்றால், உடன்படிக்கையை மாத்திரமல்ல, உடன்படிக்கைக்கு முன் நிற்கும் அந்நிய தெய்வங்களையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கே நம்முடைய வாழ்க்கை தள்ளப்படும் என்பதே உண்மை. 

லாபானுக்கும் யாக்கோபுக்கும் இடையிலான உடன்படிக்கையின்போது நிகழ்ந்த நிகழ்வுகளை நம்முடைய நினைவுகளில் நிறுத்திக்கொண்டால், அந்நியரின் வழக்கத்தில் நம்முடைய வாழ்க்கை அகப்பட்டுவிடாதபடிக்குக் காத்துக்கொள்ளலாம். தன்னை விட்டு ஓடிப்போன யாக்கோபுக்கு பொல்லாப்பு செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அவனை பின்தொடர்ந்து சென்றான் லாபான் (ஆதி. 31:29); எனினும், தேவனால் எச்சரிக்கப்பட்ட பின்பு, யாக்கோபோடுகூட உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும் என்று விரும்பினான். 

உடன்படிக்கை செய்துகொள்வோம் என்ற லாபானின் கோரிக்கையினை யாக்கோபு ஏற்றுக்கொண்டாலும், யாருக்கு முன்னால், எப்படி அந்த உடன்படிக்கையினைச் செய்துகொள்ளவேண்டும் என்பதிலோ யாக்கோபு கவனமாயிருந்தான். உடன்படிக்கைக்கான பணிகளையும் செய்வதில் யாக்கோயு முந்திக்கொண்டான். மெய் தெய்வத்தை அறிந்திருக்கும் நாம் செயல்படத் தாமதிப்போமென்றால், அந்நிய தெய்வங்களை வழிபடுவோரின் வழிமுறைகள் நம்மை வாரிக்கொள்ளக்கூடும். கட்டளைகளையும், கர்த்தரையும் முன்வைத்து நாம் முந்திக்கொண்டால், அந்நிய நுகத்தில் பிணைக்கப்பட்டுவிடாதபடி நம்மை காத்துக்கொள்ளலாம். 


கர்த்தரா? கற்குவியலா?


'உடன்படிக்கை பண்ணிக்கொள்ளுவோம்' என்றதும், யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான் (ஆதி. 31:45). தேவன் தன்னோடு அந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்பதனைக் குறிக்கும் அடையாளமாகவே யாக்கோபு அதனைச் செய்தான். லாபானுடைய வீட்டிற்கு வருகின்ற வேளையிலும், வழியில் கர்த்தர் தன்னை சந்தித்தபோது, மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் (ஆதி 28:16) என்பதை குறிக்கும் வண்ணமாக, அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டானே (ஆதி 28:18,19). தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதனை குறிக்கும்படியாகவே யாக்கோபு கல்லை எடுத்து அதனை தூணாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். கல்லை வணங்கும்படியாக அல்ல, கர்த்தர் தன்னைச் சந்தித்த இடத்தை நினைவுகூறும்படியாகவே அதைச் செய்தான். ஆனால், யாக்கோபின் இந்தச் செயலை லாபானினால் ஒருவேளை புரிந்துகொள்ள இயலாதிருந்திருக்கக்கூடும். யாக்கோபு ஒரு கல்லை எடுத்து அதனை தூணாக நிறுத்தினபோது, யாக்கோபு என்ன செய்கிறான் என்பதை புரிந்துகொள்ளாததினாலேயே லாபான் அதற்கு எந்த பெயரையும் கொடுக்கவில்லை. 

பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள். லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான். இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது (ஆதி 31:46-48). போஜனம்பண்ணும்படியாகக் குவிக்கப்பட்ட கற்களுக்கு பெயரிடுவதில் லாபான் முந்திக்கொண்டான். கல்தேயருடைய பாஷையில் 'ஜெகர்சகதூதா' என்று லாபான் பேரிட்டபோது, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட யாக்கோபு, உடனே எபிரெய பாஷையில் அந்த இடத்திற்கு 'கலயெத்' என்று பேரிட்டான். 

'உடன்படிக்கை' என்றதும், யாக்கோபு 'தூணை' நிறுத்தினான்; ஆனால் லாபானோ, உடன்படிக்கைக்காக நிறுத்தப்பட்ட தூணை கவனத்தில் கொள்ளாமலும், கருத்தில் கொள்ளாமலும், 'போஜனம்பண்ணும்படியாக' குவிக்கப்பட்ட கற்குவியலைப் பார்த்து, அதற்கு 'ஜெகர்சகதூதா' என்று பெயரிட்டு, அதனையே சாட்சியின் அடையாளமாக முன்நிறுத்துகின்றான். யாக்கோபு 'தூணை' நிறுத்தி லாபானுக்கும் தனக்கும் தேவனே சாட்சி என்பதை விளங்கச்செய்தான்; ஆனால், லாபானோ, 'இந்தக் கற்குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி' (ஆதி. 31:48) என்று கூறுவதினால், தனக்கும் யாக்கோபுக்கும் கற்குவியலே சாட்சி என்பதை விளங்கப்பண்ணுகின்றான்.

  அதுமாத்திரமல்ல, பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார். தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் 

தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி (ஆதி 31:51,52) என்றே கூறுகின்றான். லாபானின் இந்த வார்த்தைகள், 'தூண்' யாக்கோபின் பக்கத்திலும், அதற்கடுத்தாக 'கற்குவியலும்' கற்குவியலுக்கு இப்புறத்தில் லாபானும் நிற்பதையே விளங்கப்பண்ணுகின்றது. மேலும், தனக்கு சாட்சி 'கற்குவியல்' மாத்திரமே என்பதையும், யாக்கோபுக்கு சாட்சியோ 'கற்குவியலும், தூணும்' என்பதையும் லாபானின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

இன்றும் லாபானைப் போல தேவனை சாட்சியாக வைக்காமலும்,  சரிவர அவரைப் புரிந்துகொள்ளாமலும் கற்குவியல்களைப் போன்று போஜனம்பண்ணும்படியாக கூடியிருக்கும் மக்களை மாத்திரம் முன்நிறுத்தி செய்யப்படும் உடன்படிக்கைகள் உண்டு. முன் நிற்கும் கர்த்தரை தங்கள் கண்களினால் காணக்கூடாதவர்களாகவும், உடன்படிக்கை உறுதியாயிருப்பதற்கு அவரே காரணகர்த்தர் என்பதை உணர்ந்துகொள்ளக்கூடாதவர்களாகவும், உலகப்பிரகாரமான காரியங்களையே முன்நிறுத்துவதால், அநேக உடன்படிக்கைகள் இன்றைய நாட்களில் சத்துருவினால் முறித்துப்போடப்பட்டுவருகின்றன. உடன்படிக்கை செய்துகொள்ள தேவாலயத்திற்கு தேவனை தேடிச் செல்லும் மக்கள், உடன்படிக்கையினை உடைத்துக்கொள்ள நீதிமன்றங்களையும் நாடிச் செல்வது வேதனையே. உடன்படிக்கைகள் மீறப்படும்போது, மீண்டும் வரவேண்டியது உடன்படிக்கை செய்த இடத்திற்குத்தானே; அப்படியிருக்க, நீதிமன்றத்தைத் தேடிச்சென்ற அநேகர் நீதிக்கு நேராகத் திரும்பாமலேயே தேவனுக்குத் தங்கள் வாழ்க்கையினைத் தூரமாக்கிக்கொண்டனர். கர்த்தரை அறிந்த ஜனமாகிய நம்முடைய கண்களை, கற்குவியலுக்கு நேராகத் திருப்பிவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். 


விருந்தா? பலிவிருந்தா?


மேலும், உடன்படிக்கை செய்துகொள்வதோடுகூட மாத்திரமல்ல, உன்னதத்திலிருக்கும் தேவனையும் லாபானுக்குக் காட்டிக்கொடுத்துவிடவேண்டும் என்று முயற்சித்தான் யாக்கோபு. பின்னும் தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள் (ஆதி 31:46). பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள் (ஆதி 31:54).

'உடன்படிக்கை செய்துகொள்ளுவோம்' என்றதும் தேவன் இந்த ஸ்தலத்தில் தன்னுடனே இருக்கிறார் என்பதனை நிரூபிக்கும் விதமாக முதலில் ஒரு தூணை நிறுத்தினான் யாக்கோபு; தொடர்ந்து, போஜனம் பண்ணும்படியான மேஜையை கற்குவியலினால் உண்டாக்கினான்; அதனைத் தொர்ந்து, மலையின் மேல் பலியிட்டு போஜனம்பண்ணும்படியாக தன் சகோதரரை அழைக்கின்றான் யாக்கோபு. யாக்கோபின் இந்த முறை, ஆசரிப்புக் கூடாரத்திற்கான ஓர் ஆரம்பத்தைப் போலவே காட்சியளிக்கின்றது. யாக்கோபின் இந்த வரிசை நம்முடைய வாழ்க்கையிலும் இன்றைய நாட்களில் கடைபிடிக்கப்படவேண்டியதே. சில நேரங்களில் தேவனை நாம் முன்நிறுத்துகின்றபோதிலும், உடனிருப்பவர்கள் புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாவிட்டாலும் உடன்படிக்கையினை நிறைவேற்றிவிட விரும்புகின்றோம்; அல்லது, ஒன்றாக அமர்ந்து போஜனம்பண்ணிவிட்டால் உடன்படிக்கைக்கு அது போதும் என்று எண்ணிவிடுகின்றோம். ஆனால், யாக்கோபைப் போல, 'மலையின் மீது இடப்பட்ட பலிக்கு' நேராக ஜனங்களை போஜனம் பண்ணும்படியாக அழைக்கவேண்டியது நம்முடைய கடமை. 

சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார் (ஏசா 25:6-8) என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் வாசிக்கின்றோமே. 

ஒருவேளை லாபானைப்போல நமக்கு பொல்லாப்பு செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும், தீமையானவைகளைப் பேசவேண்டும் என்ற மனதுடனும் ஜனங்கள் நமக்கு விரோதமாகப் புறப்பட்டுவரலாம்; என்றாலும், தேவன் அவர்களது கோபத்தைக் குறைக்கப் போதுமானவர். இணைந்து அமர்ந்து போஜனம்பண்ணுவதோடு மாத்திரமல்ல, மலையின் மேல் இயேசு கிறிஸ்துவின் பலியினால் மனுக்குலத்திற்கு உண்டாக்கப்பட்ட இரட்சிப்பின் வழியையும் 'உடன்படிக்கை பெட்டியைச் சுமக்கும்' ஆசாரியர்களாகிய நாம் அந்நிய தெய்வங்களை தேடிக்கொண்டிருப்போருக்குக் காட்டிக்கொடுக்கவேண்டுமே. 'நம்மோடு பந்தியில் அமர்ந்து உணவருந்துவதோடு, பரமப் பிதாவின் பந்தியிலும் அவர்கள் இடம்பெறவேண்டுமே.' இந்த உலகத்தின் பந்தியோடு அவர்களின் உறவினை நாம் முடித்துக்கொள்ளக்கூடாதே. லாபான் யாக்கோபைத் தேடிவந்தபோது, அவர்கள் இருவரும் ஒரே மலையிலேயே எதிரெதிராகக் கூடாரம் போட்டிருந்தார்கள் (ஆதி 31:25); எனினும், யாக்கோபின் உபசரிப்பு, போஜனவிருந்து லாபானை அருகே அழைத்தது மாத்திரமல்ல, மலையிலே இடப்பட்ட பலிக்குப் பக்கத்திலும் அவர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. அந்நிய தெய்வங்களைப் பின்பற்றிச் செல்லும் மக்களை அன்போடு உபசரித்து, ஆண்டவரையும் காட்டிக்கொடுக்கவேண்டியது நமது கடமையல்லவா.  உன் கண்களை என்னைவிட்டுத்திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டுமந்தையைப் போலிருக்கிறது (உன் 6:5) என்று நேசர் மணவாட்டியாகிய நம்மை ரசிக்;கின்ற வேளையில், நமக்காக 'மலையிலே பலியான நேசரை' நாம் நேசிக்க மறந்துவிடக்கூடாதே.

இன்றைய நாட்களில் அநேக உடன்படிக்கைகள் உணவுப் பந்தியோடு மாத்திரமே உறுதியாகின்றன.  அந்த உடன்படிக்கைக்குக் காரமாணவரும், சாட்சியாக இருக்கவேண்டியவரும், உடன்படிக்கையினைக் காத்துக்கொள்ளத்தக்கவருமான தேவன் உடன்படிக்கையின்போது நினைக்கப்படுவதில்லை. அந்த உடன்படிக்கை நிறைவேறவும், நிறைவாகவும் அவரிடத்திலிருக்கும் பங்கு நினைவுகூறப்படுவதில்லை. பிரசங்கத்தைக் கேட்க மனதில்லாமல், பந்தியில் அமர விரும்பும் மக்களே அநேகர். எனவே, தேவனற்ற திருமணங்களை, தேவனற்ற கொண்டாட்டங்களை சிதைத்துப்போடவும், மீறச்செய்யவும் சத்துரு கிரியை செய்கிறான். 


பயபக்திக்குரியரா? பிதாக்களா?


உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும் என்று விரும்பிய லாபான், யாக்கோபை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான் (ஆதி 31:53). 'ஆபிரகாமின் தேவனும், நாகோரின் தேவனும், பிதாக்களின் தேவனுமானவர்' என்று லாபான் சொன்னபோதிலும், ஈசாக்கை விட்டுவிட்டான் லாபான். ஒருவேளை, சகோதரியின் கணவன் என்பதினால், பிதாக்கள் என்ற பட்டியலில் லாபான் ஈசாக்கை சேர்க்காதிருந்திருக்கலாம்;  ஆனால் யாக்கோபோ, 'தன் தகப்பனாகிய பயபக்திக்குரியவர்' என்று உண்மையான தேவனையே முன்நிறுத்தி ஆணையிடுகிறான். பிரயாணத்தின்போது வழியில் தேவனை சந்தித்தபோதும் யாக்கோபின் வார்த்தைகள் இத்தகையதாகவே காணப்பட்டன. என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் (ஆதி 32:9,10) என்றே கூறுகின்றான். யெகோவாவாகிய தேவனை வணங்காக பிதாக்களின் பெயர்களை யாக்கோபின் உதடுகள் உச்சரிக்கவில்லையே. 

லாபான் தன்னைத் தொடர்ந்துவந்த வேளையிலும், யாக்கோபு லாபானை நோக்கி: என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் (ஆதி 31:42) என்று சொன்னானே. லாபானுடைய வாழ்க்கை அந்நிய  தெய்வங்களோடு ஒட்டிக்கொண்டிருந்தது; ஆனால், யாக்கோபின் வாழ்க்கையோ தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவராகிய தேவனோடு மாத்திரமே ஒட்டிக்கொண்டிருந்தது. 

எனினும் லாபானின் வார்த்தைகளோ, தெரிந்துகொள்ளப்பட்ட ஆபிரகாமை, தவறிப்போன தலைமுறையினரோடு தந்திரமாக நுழைப்பதாகவே காணப்பட்டன. ஆபிரகாம் உண்மையான தேவனை அறிந்துகொண்டவன்; என்றாலும், ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகு வேறே தேவர்களைத் சேவித்தவன். அப்பொழுது யோசுவா சகலஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள் (யோசு 24:2) என்று வாசிக்கின்றோமே. என்றபோதிலும், உடன்படிக்கையின் நேரத்தில், 'ஆபிரகாமின் தேவனும், நாகோரின் தேவனும், பிதாக்களின் தேவனுமானவர்' என்று பிதாக்கள் அணைவரையும் ஒரே வரிசையில் நிறுத்துவதினால், அவர்கள் வணங்கிய விக்கிரகங்களோடு, தேவர்களோடு உண்மையான தேவனாகிய கர்த்தரையும் ஒரே வரிசையில் லாபான் நிறுத்துகின்றானே. இன்றும் லாபானைப் போன்ற மக்கள் உண்டு; விக்கிரகங்களையும், யெகோவாவாகிய கர்த்தரையும் ஒரே வரிசையில் நிறுத்திக்கொண்டு, 'எம்மதமும் சம்மதமே' 'எல்லா தெய்வங்களும் ஒன்றே' என்று நினைப்பவர்கள் இவர்கள். 

கர்த்தர் மோசேயை அழைத்தபோது, நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் (யாத் 3:6) என்றே தன்னை அறிமுகப்படுத்துகின்றார். மேலும், இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்து வேதனையைக் சகித்தபோது, தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார் (யாத் 2:24) என்றும், இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டுவரும்படியாக மோசேயை அனுப்பின நேரத்தில், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம் (யாத் 3:15) என்றே தன்னை அறிமுகப்படுத்துகின்றார். யோசேப்பின் வழிகாட்டலும் இதுவே. (ஆதி 50:24)

உலகப்பிரகாரமான பிதாக்களின் வரிசையில் அல்ல, உன்னதத்திலிருக்கும் பிதாவின் பிள்ளைகள் என்ற வரிசையில் நம்முடைய பெயர்கள் எழுதப்படட்டும். பிள்ளைகள் என்ற ஸ்தானத்தை நாம் பெற்றுக்கொள்ளாவிட்டால், பரலோகம் எழுதும் வரிசையில் நம்முடைய பெயர் இடம்பெறாது. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோம 8:29). குமாரனுடைய வரிசையில், பிதாவின் வாரிசுகளாக நம்முடைய பெயரும் பொறிக்கப்படட்டும். யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்; கற்குவியலையும் அவனே சேர்த்தான் (ஆதி 31:45,46)) ஆனால் லாபானோ, இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார் (ஆதி 31:51) என்று அந்த உடன்படிக்கைக்கு தான்தான் காரணம் என்பதனை மறைமுறைகமாகவும், யாக்கோபின் கண்களை கற்களுக்கு நேராகவும் திருப்பினபோதிலும், யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேலேயே ஆணையிட்டான் (ஆதி 31:53); அதுவே மிஸ்பா (ஆதி. 31:50) உடன்படிக்கையின் சாட்சி அவரே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக