மண்ணுக்கான மனமாற்றம்
கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான். (ஆதி 28:8-9)
கண்களுக்குப் பிரியமானவைகள் என விரும்பி கண்ணிகளில் சிக்கிக்கொண்டவர்களும், மாற்றிக்கொள்ள இயலாத நிலையில் மாட்டிக்கொண்டவர்களும், தடைகளை உடன் வைத்துக்கொண்டே தேவனிடத்தில் விடைதனைத் தேடுபவர்களும் அநேகர். தேவனால் வெறுக்கப்படுபவைகள், வாழ்க்கையின் தேவைகளோடு இணைந்துகொண்டால் ஆசீர்வாதத்திற்கு இடையூறாகவே அவைகள் மாறிவிடும். ஆத்துமாவுக்கு விரோதமானவைகளை அடையாளங்காணாமல், ஆசீர்வாதத்திற்கான தடைகள் என்று அறிந்துகொண்டபின்னரே, அவைகளிலிருந்து விலகி வாழ விரும்பும் மனிதர்கள் அநேகர். ஆசீர்வாத்திற்குப் பாத்திரமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், ஆசீர்வாதங்கள் அவராலேயே நம்முடைய வாழ்க்கையில் வந்து சேரும். பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல (மத். 15:26) என்றும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் (மத். 6:8) என்றும் இயேசு கிறிஸ்து சொன்னாரே. அந்த 'இன்னது உன்னதத்திலிருந்தே வரட்டும்.'
ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினு டைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான் (ஆதி 26:34); ஏத்தின் குமாரத்திகள் கானான் தேசத்துப் பெண்களே (ஆதி. 36:2). என்றபோதிலும், தகப்பனாகிய ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்தபோது, 'நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல்' (ஆதி 28:1) என்று சொன்னதைக் கேட்டதினால், தன்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று விரும்பிய தகப்பனுடைய ஆசைக்கு விரோதமாக தான் செய்திருந்த தவற்றினை உணர்ந்தான் ஏசா; ஆனாலும், அது காலம்கடந்த உணர்வாகவே காணப்பட்டது.
தவற்றினை உணர்ந்தபோதிலும், மீண்டும் தவறான பாதையிலேயே பயணித்தான் ஏசா. கானானியர்கள் தன் தகப்பனின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்துகொண்டபோது, தவற்றிலிருந்து தன்னைத் தப்புவித்துக்கொள்ள தானாகவே ஓர் முடிவினை எடுத்தான்; என்றபோதிலும், அதுவும் தேவனுடைய பார்வையில் தகாததாகவே இருந்தது. ஆண்டவர் விரும்பாத ஓர் உறவில் பிறந்தவன் இஸ்மவேல்; ஆகார் கர்ப்பவதியாயிருந்தபோது, கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. அவன் துஷ;டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்று சொல்லியிருந்தார் (ஆதி 16:11,12). தப்பனாகிய ஆபிரகாமின் வீட்டைவிட்டு தயாயோடுகூட விரட்டப்பட்டவன் ஏசா. தகப்பனாகிய ஈசாக்கிற்கு எதிராகக் குடியிருப்பான் என்று சொல்லப்பட்டவன். ஆனால் ஏசாவோ, அதனை அறியாதவனாக, ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்கு எதிராக வாழ்ந்துகொண்டிருக்கும் இஸ்மவேலின் குமாரத்தியை விவாகம் செய்துகொண்டான். இஸ்மவேல் ஈசாக்கின் சகோதரனே; என்றபோதிலும், ஆபிரகாமின் ஆசீர்வாதத்திற்கு சுதந்தரவாளி அல்லவே. இஸ்மவேலின் குமாரத்தியை ஏசா விவாகம்பண்ணிக்கொண்டது, பூனைக்குப் பயந்து புலியினிடத்தில் மாட்டிக்கொண்ட கதையாகத்தான் வாழ்க்கையில் அமைந்தது.
ஆண்டவருக்குப் பிரியமானது இன்னது என்று அறியாமல், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமே தனது வாழ்க்கையை மாற்றியமைத்ததுக்கொள்ள முயற்சித்தான் ஏசா. இன்றும் அநேகருடைய நிலை இதுவே; நித்திய ஜீவனுக்குள் நுழையவேண்டும் என்பதை வாழ்க்கையில் பிரதானமாகக் கருதாமல், 'பெற்றுக்கொள்ளவேண்டும்' என்பதையே பிரதானமாகக் கருதுவதால், ஆசீர்வாதத்திற்காகவே தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ள விரும்புகின்றனர்; அத்தகையோரின் மனமாற்றம் தற்காலிகமானதாகவே இருக்கும். சத்தியத்தை அறியாதவரை, சரியான பாதை தெரியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக