சரீரமும் ஜீவனும்
பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி: நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான். (ஆதி 23:3,4)
கவலைப்படாதிருங்கள் என்ற வரிசையில் சரீரத்தையும், விசேஷpத்தவைகள் என்ற வரிசையில் ஜீவனையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு கிறிஸ்து (மத். 6:25). என்றாலும், சரீரத்திற்கடுத்த கவலைகளால் நிறைந்து, அவைகளை நிவிர்த்தி செய்துகொள்ளும்படியாகவே ஆண்டவரைப் பின்தொடரும் மக்களே ஏராளம். அகத்தின் அருவருப்புகளைக் குறித்து கவலைப்படாமல், சரீரத்திற்கு அடுத்தவைகளைக் குறித்து மாத்திரமே கவலைப்படும் மக்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே. (மத். 23:27)
ஆபிரகாம் தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன் (ஆதி. 12:11) என்று கூறுகின்றான்; அப்படியே, ஆபிரகாம் எகிப்திலே வந்தபோதும், எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள் (ஆதி. 12:14). மேலும், சாராளுடைய அழகைக் கண்ட கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கும் ஆள் அனுப்பி சாராளை அழைப்பித்தான் (ஆதி. 20:2). இத்தகைய அழகுள்ள ஸ்திரீயாகிய சாராள் இறந்தபின் அவளது சரீரம் 'பிரேதம்' என்றே பேசப்படுகிறது. சாராள் மரணத்தைத் தழுவினபோது, 'ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய்' (ஆதி. 23:3) என்றே வாசிக்கின்றோம். மேலும், 'இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு'
(ஆதி. 23:4) என்றே கூறுகின்றான் ஆபிரகாம். அத்துடன், ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: எங்கள் ஆண்டவனே, எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றும் (ஆதி 23:6), ஏத்தியனான எப்பெரோன் ஆபிரகாமை நோக்கி: அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் (ஆதி 23:11,15) என்றுமே சொன்னார்கள்.
சரீரம் எத்தனை அழகாயிருந்தாலும், ஜீவனில்லையேல் அது சடலமே. அப்படியிருக்க, ஜீவன் என்பது எத்தனை முக்கியமானது; நம்முடைய வாழ்க்கையிலும், நம்முடைய சரீரம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், கிறிஸ்துவாகிய சத்தியமும் ஜீவனும் நமக்குள் இல்லையென்றால், நம்முடைய சரீரமும் சடலமாகத்தான் மணவாளனின் கண்களுக்குக் காணப்படும்.
நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் (வெளி 3:1) என்று சர்தை சபைக்கு ஆண்டவர் சொல்லும் செய்தி நமக்கு பொருத்தமாகிவிடும். மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. (1பேது 3:3,4)
சாராள் மரணமடைந்துவிட்டபோதோ, சாராளுடைய உயிரற்ற சரீரத்தை தன் கண்முன் வைத்துக்கொண்டேயிருக்க விரும்பவில்லை; மாறாக, மண்ணுக்குள் புதைத்துவிடவே மனதாயிருந்தான். என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு (ஆதி 23:4) என்றும், என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண (ஆதி 23:8,9) என்றுமே சொல்லுகிறான். யாருடைய பிரேதம் என்பதை அடையாளம் காட்டுவதற்காகவே 'தன் மனைவியாகிய சாராளைக்' கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையில் அடக்கம்பண்ணினான் (ஆதி 23:19) என்று ஆவியானவர் எழுதிவைத்திருக்கின்றார்.
உயிரோடு இருந்தால் சாராள், உயிரோடு இருந்தால் மனைவி, செத்துப்போனபோதோ அவள் பிரேதமாகிவிட்டாள். கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இல்லாவிட்டால், மணவாளனின் வருகையின்போது அவரது கண்களை விட்டு நாம் அகற்றப்பட்டுவிடுவோம். ஜீவனைக் காத்துக்கொண்டால் ஜீவனுக்குள் பிரவேசிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக