தகப்பனான மேய்ப்பர்கள்
அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம். (ஆதி 33:13)
தலைவனுக்குரிய தரத்தோடு மாத்திரமல்ல, மந்தையை நடத்தும் மேய்ப்பனுக்குரிய குணத்தோடும் நாம் காணப்படவேண்டியதும் அவசியம். கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன் (1கொரி 4:15) என்கிறார் பவுல். மேலும், உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே (எபி 13:17) என்றெழுதுகிறார் எபிரெய ஆக்கியோன்.
இத்தகைய தகப்பனுக்குரிய குணத்தை மனதில் சுமந்திருந்தால் மாத்திரமே, மேய்ப்பர்கள் என்ற தரத்தோடு மந்தையை தலைவர்கள்; முன்நடத்திச் செல்லமுடியும். தலைவர்களாயிருந்தாலும், மேய்ப்பர்களாயிராதவர்களால் மந்தையை சொந்தமாகக் காண்பது என்பது இயலாதது. எனவே இயேசு கிறிஸ்துவும், 'மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்' (யோவா 10:12) என்று தெளிவாகக் கூறுகின்றார்; இவர்கள், 'மேய்ப்பர்கள் என்ற போர்வையிலிருப்பவர்களே.' கூலிக்கு அமர்த்தப்பட்ட மேய்ப்பன் ஓடிப்போய்விடக்கூடும் (யோவான் 10:12); எனினும், பவுல் சொன்னதுபோல, பெற்றெடுத்த மேய்ப்பர்களோ ஓடிப்போவது இயலாதது; அவர்கள் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுப்பவர்கள். (யோவான் 10:11)
தன்னை மாத்திரமே நினைத்துக்கொண்டிருக்கும் தலைவர்கள் உடனிருப்போரின் நிலமையைக் குறித்து கவலைப்படுவதில்லை; ஆனால், மேய்ப்பனுக்கோ, ஒரு ஆட்டைக் கூட இழந்துவிட்டால் உடலிலிருந்து உயிர் போய்விட்டது போல இருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடிக்காவிட்டால், கண் அயர்வதும் மேய்ப்பனுக்கு கடினமானது. எனவே, 'நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்' (யோவா 10:11) என்று நல்ல மேய்ப்பனாக தன்னை அறிமுகப்படுத்திய இயேசு கிறிஸ்து, உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? (லூக் 15:4-6) என்று கூறுகின்றாரே. தேவராஜ்யத்திற்கான எந்தவிதமான இழப்புகளையும் மேய்ப்பனது மனம் தாங்கிக்கொள்ளாது.
இன்றைய நாட்களில், எதிரிகளிடத்தில் ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகாவிட்டாலும், ஆடுகளை விட்டு தூரமாகவே பல மேய்ப்பர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்; ஆடுகளும், மேய்ப்பனை விட்டுத் தூரமாகவே பயணித்துக்கொண்டிருக்கின்றன. மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இiயிலான இடைவெளி, ஆடுகளை இழக்கக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடக்கூடும்; அல்லது, எதிரிகளிடத்தில் பறிகொடுத்துவிடும் சூழ்நிலைக்குள் தள்ளிவிடக்கூடும். அநேக மேய்ப்பர்கள் தகப்பனுக்குரிய ஸ்தானத்தை மறந்து தலைவர்களாகிவிட்டதினால், மந்தைகள் மேய்ப்பனற்ற நிலையில் தள்ளாடித் தடுமாறுகின்றன. தன்னுடைய மந்தையின் நிலமையை அறியாமல், மற்றவர்களது வேகத்தை ஒப்பிட்டு ஓடச்சொல்லும் மேய்ப்பர்கள் ஆடுகளை இழக்கக்கொடுத்துவிடுவர்.
ஏசாவை சந்தித்தபோது, யாக்கோபு உடனே சேர்ந்து போய்விடவில்லை. தன்னுடையவர்களின் நிலையை நன்கு அறிந்திருந்தான்; மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் (ஏசா 40:11) என்ற குணம் நம்மிலும் குடிகொள்ளட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக