திங்கள், 11 அக்டோபர், 2021

யேகோவா-யீரே (ஆதி 22:14)

 யேகோவா-யீரே  



ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. (ஆதி 22:14)

  

கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம் (ஓசி 12:5). கர்த்தர் ஆபிரகாமைக் கூப்பிட்டபோது, 'நீ மோரியா தேசத்திற்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாக பலியிடு' என்றார் (ஆதி. 22:2). அதுவரை அது 'மோரியா மலை' என்றே அழைக்கப்பட்டது; எனினும், ஆபிரகாம் அங்கு சென்று, பலிபீடத்தின் பலியாக புத்திரனைக் கிடத்தி, பின் பதிலாகக் ஆட்டுக்கடாவை தகனபலியாக பலியிட்டபோது அதற்கு 'யேகோவாயீரே' என்று பெயரிட்டதனால், அது 'கர்த்தருடைய பர்வதமாக' மாறிவிட்டது. அழைக்கப்பட்ட இடத்தில் நமது பாதங்கள் படுமென்றால், அது 'கர்த்தருடைய பர்வதமாக' மாறிவிடும். (ஏசா. 52:7)

ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்று ஆண்டவர் சொன்னபோது, ஆபிரகாம் ஆண்டவரை நோக்கி: கர்த்தராகிய (யேகோவாவாகிய) ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான் (ஆதி 15:1,2). இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் (யேகோவா) நானே என்று சொன்னபோதும், ஆபிகாம் ஆண்டவரை நோக்கி: கர்த்தராகிய 

(யேகோவாவாகிய) ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் (ஆதி 15:7,8) என்றே கூறுகின்றான். ஆபிரகாமுக்கும் ஆண்டவருக்கும் இடையில் நடைபெறும் இந்த உரையாடல்களில் 'யேகோவா' என்றே அவரை அழைக்கிறான் ஆபிரகாம். 'கர்த்தர்' என்ற பதம் எபிரெய மொழிபெயர்ப்பிலும், சில ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும், ஹிந்தி மொழிபெயர்ப்பிலும் 'யேகோவா' என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தகனபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே? என்று ஈசாக்கு ஆபிரகாமினிடத்தில் கேட்டபோது, என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் (நுடழாiஅ லுசைநா) என்றான் ஆபிரகாம் (ஆதி 22:8); என்றபோதிலும், மோரியா மலைக்குச் சென்று பலி செலுத்தி முடித்தபின், பலிக்குத் தேவையானதைச் சந்தித்த தேவனுடைய பெயர் என்ன? என்பதை அறிந்துகொள்ளும்படியாக, 'யேகோவா-யீரே' என்று சொல்லுகின்றான். என்றபோதிலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை (யாத் 6:2,3) என்று சொல்லுகின்றாரே; இதன் அர்த்தம் என்ன? அப்படியென்றால், ஆபிரகாமின் காலத்தில் 'யேகோவா' என்ற நாமம் அறியப்பட்டது எப்படி? 'யேகோவாயீரே' என்று மோரியா தேசத்திலுள்ள மலைக்கு ஆபிரகாம் பெயரிட்டது எப்படி? 

'சர்வவல்லமையுள்ள தேவன்' என்னும் காரண நாமத்தை உடன்படிக்கையை ஏற்படுத்தும்படியாக பயன்படுத்தினார் ஆண்டவர். என்றபோதிலும், 'யேகோவா' என்னும் அவரது நாமத்தின் பிரதான பணி ஆபிரகாமின் நாட்களில் பயன்படுத்தப்படவில்லை. ஆபிரகாமின் நாட்களில், அவன் யாருக்கும் அடிமையாயிருக்கவில்லை. ஆனால், ஆபிரகாமின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் எகிப்திலே அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, அவர்களின் பெருமூச்சை கேட்டு, 'சர்வவல்லமையுள்ள தேவன்' என்னும் நாமத்தினால் செய்த உடன்படிக்கையை நினைத்து (யாத் 6:5), 'யேகோவா' என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிற நாமத்தைப் பயன்படுத்தி, மோசேயின் மூலமாக எகிப்திலிருந்து தன் ஜனமான இஸ்ரவேல் மக்களை விடுவித்து கானான் தேசத்திற்குள் அழைத்துவந்தார் ஆண்டவர்.  நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரை 'சர்வவல்லவராக' மாத்திரம் அறிந்திருக்கிறோமா? 'சர்வவல்லவர்' என்ற நாமம் உடன்படிக்கையாக கானான் தேசத்தைக் கொடுத்தது (யாத். 6:4); எனினும், 'யேகோவா' என்னும் நாமமோ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, உடன்படிக்கையின் உள்ளே பிரவேசிக்கச் செய்தது.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக