ஞாயிறு, 10 அக்டோபர், 2021

உபசரிப்பின் உயர்ந்த நிலை? (ஆதி 19:2,3)

உபசரிப்பின் உயர்ந்த நிலை?


ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். (ஆதி 19:2,3)


'தேவையுள்ளவர்களைத் தேடிச் செல்லாமல், திரும்பியும் பாராமல், திருப்தியானவர்களையே திரும்பத் திரும்பப் போஷpத்துக்கொண்டிருக்கும் போர்வையினாலேயே' இன்றும் அநேகர் தங்களைத் தாங்களே போர்த்திக்கொண்டு வாழுகின்றார்கள். தங்கள் மீதான இத்தகைய போர்வையினை நீக்காதபட்சத்தில், இவர்களிலுள்ள வெளிச்சமும் வெளியுலகத்திற்கு சுவிசேஷமாக வெளிப்படாது என்பது நிச்சயம். அன்றன்றுள்ள அப்பத்தை உண்பவர்களும் வேண்டும்; அப்படியே, அந்நியரும் அந்த அப்பத்திற்கு உடந்தையாகவும் வேண்டும். அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு (எபி 13:2) என்ற வார்;த்தை, லோத்துவின் வாழ்க்கையோடு சரியாகப் பொருந்தக்கூடியது. 

'தூதர்கள்' என்று அடையாளம் கண்டுகொள்ளவிட்டாலும்' துரிதமாக உபசரித்தான் லோத்து. பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள் (மத் 25:35) என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?  எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?  எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.  அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார் (மத் 25:37-40); சத்தியத்தைக் குறித்த அறிவினால், அறியாமல் உண்டாகும் உபசரிப்பு இதுவே; எனினும், அறியாமையினால் பலர் இதற்குத் தூரமாகிவிடுகின்றனர். மறுபுறம், இத்தகைய உபசரிப்புக்கு கிடைக்காததினால், வீதியிலே பலர் பலியாகியும்விடுகின்றனர். 

சமாரியனுக்கடுத்த இயேசு கிறிஸ்துவின் போதனையினை, சரமாரியாகப் பலமுறை போதித்;தபோதிலும், போதனைகளைக் கேட்டிருந்தபோதிலும், போக்குவரவின்போது இன்னும் இன்றும் ஆசாரியனுடைய மற்றும் லேவியனுடைய குணமே அநேகரிடத்தில் மேலோங்கி நிற்பது (லூக். 10:20-34), 'கிறிஸ்தவன்' என்றுகூட அடையாளப்படுத்தக்கூடாதபடிக்கு, மேலங்கியாகி பிறரது கண்களுக்கு கிறிஸ்துவை மறைத்துவிடுகின்றது. பேருந்து நியைத்தில், ரயில் நிலையத்தில் கையேந்தி நிற்போரைக் காணும்போது, கண்டுகொள்ளாமல் கடந்துசெல்வதும், பையிலே கர்த்தர் கொடுத்த திராட்சரசமும் எண்ணெயும் (பணமோ, உணவுகளோ) தாராளமாக இருந்தும், பரிமாறவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ மனமில்லாமல் கைவிரிப்பதும், தேடிவருவோரைத் திருப்பி அனுப்புவதும், 'என்னிடம் கேட்டுவிடுவார்களோ' என்ற அச்சத்தில், எங்கோ பார்த்துக்கொண்டும், எதையோ வாசித்துக்கொண்டும் அல்லது யாருடனாவது பேசிக்கொண்டும் இருப்பதும், இன்னும் திருந்தாத மனப்போக்கிலேயே அநேகர் பிரயாணித்துக்கொண்டிருப்பதைத்தான் படம்பிடித்துக் காட்டுகின்றது. கள்ளர் கைகளில் அகப்பட்ட மனிதன் மனந்திரும்பியிருந்தானோ, இல்லையோ என்பதை அறியாவிட்டாலும், குற்றுயிராயிருந்த அவனை உபசரித்த 'சமாரியன்' மனந்திரும்புதலுக்கே உதாரணமாகிவிட்டானே. 'குற்றுயிராய்க் கிடந்தவனின்' சம்பவம் 'சமாரியனின்' சம்பவமாகவே இன்றும் அறியப்படுகின்றது.  ரோமர் 12:13, 1தீமோ. 3:2, தீத்து. 1:8 போன்ற வசனங்கள் நமது வாழ்க்கையில் இத்தகைய உபசரிப்பைப் பாடமாக்கவே போதிக்கின்றன. ஆண்டவருக்கு அள்ளிக் கொடுக்க ஆசை; ஆனால், அதனை 'அந்நியர்' என்ற விலாசத்தில் அனுப்பிவிடவோ பலருக்கு விருப்பமில்லை. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக