திங்கள், 11 அக்டோபர், 2021

கூலியாள் ! (ஆதி 20:11)

கூலியாள் !



அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். (ஆதி 20:11)


தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் (மத் 10:39) என்றார் இயேசு கிறிஸ்து. ஆபிரகாம் கேராரில் தங்கியிருந்தபோது, தன் ஜீவனைக் காத்துக்கொள்ளவேண்டும் என்பதே அவனது பிரதானமான எண்ணமாயிருந்தது; தன் ஜீவனுக்காக எதையும் இழந்துவிட ஆபிரகாம் ஆயத்தமாயிருந்தான். 'அவர்கள் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்' (ஆதி. 2:24) என்ற சத்தியத்தையும், 'அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு' (யோபு 2:6) என்ற சத்தியத்தையும் இணைத்துப் பார்ப்போமென்றால், கணவன் மனைவி என்ற உறவு ஒரே உடல் மற்றும் ஒரே உயிர் என்ற உயர்ந்த நிலையினை அடையும்படியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குப் புரியவரும். 

எனினும், சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான் (யோபு 2:4) என்ற சாத்தானின் வார்த்தைகள் வாழ்க்கையில் நுழையும் அளவிற்கு, ஆபிரகாமின் தன் ஜீவனைக் குறித்த பயம் அவனது பலத்தில் ஓட்டையினை உருவாக்கியது. அதனால், தனது சொந்தசரீரமாகிய, சொந்த பிராணனாகிய மனைவியைக் கூட 'தன் ஜீவனைக் காக்கவேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுத்துவிட்டான்.' மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்றார் இயேசு கிறிஸ்து; ஆனால், ஆபிரகாமோ, தன் ஜீவனைக் காக்கவேண்டும் என்ற போர் முனையில் தன் ஜீவனையே (சாராளையே) இழக்கவிருந்தான். பார்வோன் சாராளை அழைத்துச்சென்றபோது, எகிப்து தேசத்தில் பார்வோனின் அரண்மனையிலிருந்து சாராளை விடுவிக்கும்படியாகவோ அல்லது அபிமெலேக்கு சாராளை அழைத்துச்சென்றபோது, அபிமெலேக்கின் கையிலிருந்து சாராளைக் காப்பாற்றும்படியாகவோ ஆபிரகாம் ஒரு காரியமும் செய்யவில்லையே; 'தன் ஜீவன் காக்கப்பட்டுவிட்டால் போதும்' என்ற நிலையிலேயே அவன் வாழ்ந்துகொண்டிருந்தான். 

ஆனால், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முறை என்ன? மணவாட்டிகளை மீட்டுக்கொள்ளும்படியாக மணவாளனாகிய அவர் தன்னுடைய ஜீவனையே சிலுவையில் பலியாகக் கொடுத்தாரே. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.  கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான் (யோவா 10:12,13) என்கிறார் இயேசு கிறிஸ்து. கூடவாழவேண்டிய மணவாளனாகிய ஆபிரகாம் கூலியாள் என்ற நிலையில் காணப்பட்டதினால், சாராளுக்கு ஆபத்து நேரிட்டது.  

ஆண்டவர் அபிமெலேக்கோடு கூட சொப்பனத்தின் மூலமாக இடைபட்டபோது, ஆபிரகாம் யார்? என்பதை அபிமெலேக்கிற்குக் அடையாளம் காட்டிக்கொடுக்கின்றார். 'அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள்' என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார் (ஆதி 20:7). அவ்வாறே, தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான் 

(மத் 10:41) என்று போதித்தார் இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசி மாத்திரமல்ல, அவர் தன்னை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களின் மணவாளனும்கூட என்பதை நாம் மறந்துவிடக்கூடுமோ. இயேசு கிறிஸ்துவின் மனவாளிகள் என்பது நமது பலமான பாதுகாப்பு. சத்துருவினிடமிருந்து காப்பாற்றும்படியாக இயேசு கிறிஸ்துவைப்போல 'ஜீவனைக் கொடுக்க' நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? அல்லது சத்துருவின் கைகளில்  ஆபிரகாமைப் போல 'ஜீவனைக் கொடுத்துவிட' நாம் ஆயத்தமாயிருக்கிறோமா? கூலியாள் ஓடுவான், கூட வாழ்பவனோ ஜீவனைக் கொடுப்பான். 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக