செவ்வாய், 12 அக்டோபர், 2021

உலகை இழுக்கும் விளக்கு (ஆதி 26:28)

உலகை இழுக்கும் விளக்கு



அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம். ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம்பண்ணினோம். (ஆதி 26:28)

 

கர்த்தர் நம்மோடு இருந்தால், உன்னதம் மாத்திரமல்ல, உலகமும் நம்மை ஓர்நாள் அங்கீகரிப்பது நிச்சயம். ஆனால், கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதை பிறர் அறிந்திருந்தபோலும், அறியாத நிலையிலேயே வாழும் அநேகர் இன்றும் உண்டு. 'கிறிஸ்தவர்களோடு கிறிஸ்து இருக்கிறார்' என்பதையும், 'கிறிஸ்தவர்களைத் தொட்டால், கிறிஸ்துவுக்கு எதிரியாகிவிடுவோம்' என்பதையும் சத்துருக்கள் அறிந்திருக்கின்றபோதிலும், அநேக கிறிஸ்தவர்கள் இந்த உண்மையை இன்னும் உணராதிருக்கின்றனரே. உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான் (சக 2:8) என்ற வசனம் அறிவிலிராவிட்டால், அழுகைதான் நமது கண்களைக் குளமாக்கும் என்பது நிச்சயம். பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார் (லூக் 4:41) என்று வாசிக்கின்றோமே. அப்படியே, பிசாசு பிடித்திருந்த மனிதனும், இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னானே. (மாற் 5:7) 

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன் (ஆதி 26:3) என்று ஈசாக்குடன் தான் இருப்பதை கர்த்தர் உறுதிப்படுத்தினதுடன் 'நிச்சயமாய் கர்த்தர் உம்மோடே இருக்கிறார்' என்று அந்நியரும் அதனை ஆமோதிக்கும்படி அறியச்செய்தாரே. 

யோசுவாவை நோக்கி: நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை (யோசு 1:5) என்றும், நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (யோசு 1:9) என்று யோசுவாவோடு தான் இருப்பதை உறுதிப்படுத்தினதோடு, ஜனங்களும் அதனை ஆமோதிக்கும்படிச் செய்தாரே. நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக (யோசு 1:17) என்று ஜனங்கள் யோசுவாவைப் பார்த்துக் கூறினார்களே. 

மேலும், பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ (ஆதி 41:38) என்று யோசேப்பைக் குறித்துச் சொன்னானே. அப்படியே, தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்து விடப்பட்டபோது, ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா? உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன் (தானி 5:14) என்றானே. 'தேவர்கள் ஆவி' என்று ராஜா தனக்கிருந்த அறிவினால் சொன்னதை 'உன்னதமான தேவன்' என்று தானியேல் திருத்தமாகக் கூறுகினானே (தானி 5:18). உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள். சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள் (ஏசா 60:3,4) என்ற வசனம் நமது வாழ்க்கையில் நிறைவேறட்டும். 

ஒளியாகிய கிறிஸ்து நம்மில் இருந்தால், விளக்கின் வெளிச்சம் நமக்கு மாத்திரமல்ல, உலகிற்கும் உரியது என்பதை உணர்ந்தவர்கள்; ஒளியினிடத்திற்கு உலகை இழுப்பதற்கே தனது உடலையும் உயிரையும் ஊற்றிவிடுவார்கள்.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக