நீதிமானுக்காகவே பேசும் நாவு
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? (ஆதி 18:23)
சோதோமின் அழிவு அறிவிக்கப்பட்டபோது, சோதோமிலிருக்கும் துன்மார்க்கர்களைக் குறித்து ஆபிரகாம் கவலைப்படவில்லை; மாறாக, நீதிமான்களுக்காகவே ஆண்டவருக்கு முன் நின்றுகொண்டிருந்தான். பிறரது அழிவு நமதருகே சொல்லப்படும்போது, நமது மனநிலையில் உண்டாகும் மாற்றம் என்ன? அறிவிக்கப்பட்டும், அறிவுக்கு எட்டாததைப்போவே நடந்துகொள்கிறோமா? அல்லது, மற்றவர்களுடைய அழிவினைக் கேள்வியுறுகிறபோதிலும், நீதிமான்களைத் தப்புவிக்கும்படியாகவே பேசிக்கொண்டிருக்கிறோமா? நீதிமான்கள் தப்புவதுதான் நிச்சயமான செய்தியாயிற்றே! 'நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்' (லூக் 5:32) என்றல்லவோ இயேசு சொன்னார்; மேலும், 'துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம்' என்றும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகின்றாரே (எசே 18:23). 'மனந்திரும்பாதபட்சத்தில் அவர்களை மரணத்தை நம்மால் தடுத்து நிறுத்த இயலாது' (சங். 7:12); என்றாலும், மனந்திரும்புதலை அறிவித்து மரணத்தைத் தடுத்து நிறுத்த நம்மால் கூடுமே. நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டு பிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; (நீங்கள்) காண்பீர்களானால் அதற்கு (நான்) மன்னிப்புத் தருவேன் என்கிறாரே. (எரே 5:1)
கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் (யாத் 32:9,10) என்று சொன்னபோது, மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் (யாத் 32:11-13). 'ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும்' (ஆதி. 18:17) என்று ஆபிரகாமினிடத்திலும் சொல்லப்பட்டது, ஆனால், அழிவோரைக் குறித்து அல்ல, காப்பாற்றப்படவேண்டிய நீதிமான்களைக் குறித்தே கர்த்தரிடத்தில் பேசிக்கொண்டிருந்தான் ஆபிரகாம். 'உன்னை பெரிய ஜாதியாக்குவேன்' (யாத். 32:10) என்று மோசேயினிடத்தில் சொல்லப்பட்டது; ஆனால், மோசேயோ, அழிக்கப்படவிருப்பவர்களுக்காக கர்த்தரிடத்தில் பேசிக்கொண்டிருந்தான்.
யோனாவை நோக்கி: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது (யோனா 1:2, சநக. ஆதி. 18:21) என்று சொன்னபோது, தர்ஷீசுக்குப் போய்விட்டான். மீண்டும் நினிவேக்கு கர்த்தர் அனுப்பியபோது, யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான் (யோனா 3:4). ஒருநாள் பிரசங்கத்திலேயே நினிவே மனந்திரும்பிவிட்டது. எனவே, 'செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்' (யோனா 3:10). ஆனால், யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டான் (யோனா 4:1). நம்மைக் காக்கிறோமா? அல்லது ஜனங்களைக் காக்கிறோமா? நினிவேயும் பெரிய நகரமே (யோனா 4:11). மீதியாவர்களுக்காக வேண்டுவோம் (ஏசா. 37:4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக