ஆயத்தங்கள் அவருடையதே
அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள். (ஆதி 24:28)
எஜமான் இட்ட கட்டளையினைக் கேட்டு ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண்தேட புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டவரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்கினவனாகவே தனது வேலையைத் தொடங்கினான். வேண்டிக்கொண்டவைகள் நிறைவேறும் வேளை வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தான். உலக முறைமையின்படி ஆபிரகாமுக்கு தான் ஊழியக்காரனாக இருந்தாலும், ஆபிரகாமுக்கும் தனக்கும் எஜமான் உன்னதத்தில் ஒருவரே என்பதையும், அவரது சமுகத்திலும் பார்வையிலும்; இருவரும் சமமே என்பதையும் உணர்ந்தவன் அவன்.
துரவிலிருந்து ஒரு பெண் ஏறிவருவதைக் கண்டதும், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றபோது, ரெபேக்காளோ, குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள் (ஆதி 24:17,18); இதனைக் கண்டதும், அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்தான் ஆபிரகாமின் ஊழியக்காரன். அதற்குப் பின்னரே (ஆதி 24:22), 'நீ யாருடைய மகள்?' என்று கேட்டான். 'நாகோருக்கு மில்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள்' என்று ரெபேக்காள் சொன்னதும் (ஆதி. 24:23,24), ஆபிரகாமின் ஊழியக்காரன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான் (ஆதி 24:26,27). 'இராத்தங்க இடம் உண்டா?' (ஆதி. 24:23) என்று ஆபிரகாமின் ஊழியக்காரன் ரெபேக்காளினிடத்தில் கேட்டபோதிலும், ரெபேக்காளுடன் இணைந்து உடனே அவன் புறப்பட்டுச் சென்றுவிடவில்லை; அப்படியே, ரெபேக்காளும் உடனே அழைத்துச் சென்றுவிடவில்லை. உச்சிதமானவைகளை ரெபேக்காளுக்குக் கொடுத்துவிட்டு, அவனோ, துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான் (ஆதி. 24:30). நான் தண்ணீர் ஊற்றினதற்குப் பதிலாக ஒருவர் இதனை பரிசாகத் தந்தார் என்ற எண்ணத்தோடு மாத்திரம் ரெபேக்காள் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும்? ஒருவேளை குடத்தைப் போட்டுவிட்டுச் சென்றிருப்பாளென்றால், குடம் மட்டும்தான் ஆபிரகாமின் ஊழியக்காரனுக்கு மிஞ்சியிருக்கும்.
ஆனால், அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள் (ஆதி 24:28); தண்ணீர் மொள்ள துரவண்டைக்கு வந்த ரெபேக்காள், சந்தோஷமான செய்தி கிடைத்ததும் தண்ணீர் எடுத்துக்கொண்டு குடத்தோடு வீட்டிற்குத் திரும்பியிருப்பாளா என்பது சந்தேகமே. சமாரிய ஸ்திரீ, இயேசுவை சந்தித்தபோது, 'தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி' (யோவா 4:28) என்று வாசிக்கின்றோமே புருஷனை அறியாத கன்னியாயிருந்த ரெபேக்காளையும் (ஆதி. 24:16) ஆண்டவர் ஆயத்தப்படுத்தினார். ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது இருக்கிறவன் புருஷன் அல்ல (யோவா 4:18) என்ற பாவியான நிலையில் இருந்த ஸ்திரீயையும் இயேசு கிறிஸ்துவின் சந்திப்பு ஆயத்தப்படுத்தினது.
ஊருக்குப் புறம்பே இருந்த தண்ணீர் துரவண்டையில் அவன் நின்றுகொண்டிருந்ததால் (ஆதி. 24:11), ரெபேக்காளின் சகோதரனாகிய லாபான் ஆபிரகாமின் ஊழியக்காரனை நோக்கி, 'கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் (ஆதி 24:31) என்று கூறுகின்றான். ஊருக்குப் புறம்பே இருந்த ஆபிரகாமின் ஊழியக்காரனை ஊருக்கு உள்ளே அழைக்கிறான் லாபான். இந்நிகழ்வினை, ஆபிரகாமின் ஊழியக்காரன் பெண் தேடி ஊருக்குள் நுழைவதற்கு முன்னமே, பெண்ணை ஊருக்கு வெளியே தண்ணீர் துரவண்டைக்கு ஆண்டவர் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் என்று புரிந்துகொள்ளுதல் நமக்கு ஆச்சரியத்தையே கொடுக்கும். ஊழியத்தின் பாதையிலும், ஊருக்குள் நுழைவதற்கு முன் இப்படிப்பட்ட ரெபேக்காளைப் போன்ற மனிதர்களை ஆண்டவர் ஊருக்கு வெளியே நம்மைச் சந்திக்கச் செய்யக்கூடும்; அவர்களைத் தொடர்ந்து உள்ளே வாருங்கள் எங்கள் வீடு ஆயத்தம் என்ற வரவேற்பு கிடைக்கும்; இவை அனைத்தும் ஆண்டவரின் ஆயத்தங்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக