பாக்கியமும், பதிலும்
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். (ஆதி 18:9)
மறைவிடம் என்பது ஆண்டவருக்கு மறைவானது அல்ல; ஒளிப்பிடத்திலிருந்தாலும், அவரது விழிகளுக்கோ நாம் வெளிப்படையானவர்களே. ஆண்டவருக்காக நாம் செய்யும் காரியங்கள் மனிதர்களால் மறைக்கப்பட்டாலும், கர்த்தரால் மறக்கப்படுவதில்லை; பலனை நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவந்து சேர்க்கும் பெலனுடையவைகள் அவைகள். ஆபிரகாம் ஆண்டவரை கூடாரத்திற்கு வெளியே சந்தித்தபோது, சாராளோ கூடாரத்திற்கு உள்ளேயே இருந்தாள்; என்றபோதிலும், ஆசீர்வாதம் கூடாரத்திற்கு உள்ளே இருந்த சாராளுக்குச் உரியதானது.
ஆண்டவரையும், இரண்டு தூதர்களையும் ஆபிரகாம் சந்தித்தபோது, ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான் (ஆதி. 18:6,7). மூன்று பேரை உபசரிப்பதற்கு, சாராள் மற்றும் வேலைக்காரன் ஆகிய இரண்டு பேர் உதவி செய்கிறார்கள்; இந்த இரண்டு பேருக்கும் இன்னும் அநேகர் உதவி செய்திருக்கக்கூடும். 'தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்' (சங். 78:25) என்ற சூழ்நிலையினை நாம் அறிந்திருந்தபோதிலும், 'மனுஷனின் அப்பத்தை தூதர்கள் சாப்பிட்டார்கள்' என்ற சுகமான நிலையினை ஆபிரகாமின் உபசரிப்பு அனுபவிக்கச் செய்ததே.
'பசியாயிருந்தேன்' 'தாகமாயிருந்தேன்' 'அந்நியனாயிருந்தேன்' 'வஸ்திரமில்லாதிருந்தேன்' 'வியாதியாயிருந்தேன்' (மத். 25:35,36) என்ற நிலையில் ஆண்டவரை பார்க்க நாம் தவறிவிடுவோமென்றால், நம்முடைய அப்பத்தை அவருக்குக் கொடுக்கும் பாக்கியத்தை நாம் இழந்துவிடக்கூடும். சாஸ்திரிகள் இயேசு கிறிஸ்துவை ஏரோதுவின் அரண்மனையிலேயே தேடிக்கொண்டிருந்ததுபோல, நாமும் தேடிக்கொண்டிருப்போமென்றால், வழியில் மரத்தடியில் நிற்கும் அவரை காணக்கூடாதபடி மரத்துப்போனவைகளாகவே நமது கண்கள் காணப்படும். யோனாவிலும் பெரியவர், சாலொமோனிலும் பெரியவர் 'எங்கே இருக்கிறார்?' என்பதை நாம் அறிந்தால் மாத்திரமே இச்சத்தியத்தின் சந்திப்பு நம்முடைய வாழ்க்கையில் சாத்தியமாகும். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு (மத். 10:42). அப்படியே, கூடாரத்தின் உள்ளே ஆண்டவருக்காகச் சமைத்தது, சாராளின் கூடாரத்துக்கு ஆசீர்வாதமாக மாறியது. அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். (ஆதி 18:10)
நாம் அவரைத் தேடும்போது, அவர் நம்மைத் தேடுகின்றார்; 'உன் மனைவி சாராள் எங்கே?' என்று கேட்டு சாராளை ஆசீர்வதித்தார். ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. முதல் கூடாரத்தில் மறைந்திருந்தாள், இரண்டாவது கூடாரத்தில் நகைத்துக்கொண்டிருந்தாள், மூன்றாவது கூடாரமோ அடைபட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்தாள். ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள் (ஆதி 18:11,12). இந்த மூன்று வாசல்களையும் தாண்டி உள்ளே பிரவேசித்து சாராளை ஆசீர்வதித்தார் ஆண்டவர். ஒருவேளை, நாமும் ஆண்டவருக்கு எல்லாவற்றையும் செய்துகொடுத்துவிட்டு, ஆனால், நம்முடைய வாழ்க்கையில் இதைச் செய்ய அவரால் கூடுமா? என கேள்விக்குறியோடு உள்ளத்தில் நகைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உன் மனைவி சாராய் எங்கே? என்று கேட்டு சாராளை ஆசீர்வதித்த ஆண்டவர் மறைவாயிருந்தாலும் நம்மை தேடிவந்து ஆசீர்வதிக்கப் போதுமானவர். அவருடைய பார்வையை விட்டு ஒருபோதும் நாம் தூரமாவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக