புதன், 13 அக்டோபர், 2021

கோபம், சாபம், சமூகம் (ஆதி 35:1)

 கோபம், சாபம், சமூகம்



தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.(ஆதி 35:1)


ஆஸ்திகள் திரளாய் இருந்தாலும், ஆபத்து நேரத்தில் காக்கப்படவேண்டியது ஆத்துமாவே. ஆஸ்தியைக் காக்க ஆத்துமாவை இழந்துபோனவர்களும், ஆஸ்தியோடே துசியாக அடித்துச்செல்லப்பட்டுவிட்டவர்களும் அநேகர். சுக்கோத்திலே யாக்கோபு சுகமாய் தங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பாசமாய் வளர்த்த மகள் தீனாளைப் பறிகொடுக்கும் நிலை உருவானது. யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து, மிகவும் கோபங்கொண்டார்கள் (ஆதி 34:7). அதுமாத்திரமல்ல, பட்டணத்தை அழித்துவிடவும் ஆயத்தமாகிவிட்டார்கள். 

எதிரியின் பெலத்தையும், பெருக்கத்தையும் பார்த்து சிமியோனும், லேவியும் பின்வாங்கிவிடவில்லை. 'தங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போல நடத்திவிட்டார்களே' (ஆதி. 34:31) என்ற வேட்கையில் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள். பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டு, பட்டணத்தைக் கொள்ளையிட்டு, ஆடுமாடுகளையும்,  கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும், அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைப்பிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். அத்துடன், ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் (ஆதி 34:26-29). நம்முடைய வாழ்க்கையிலோ, எதிரியின் பெலம் நமது கண்ணில் படும்போது, சில நேரங்களில் அது நம்மை பின்வாங்கச் செய்துவிடுகின்றதே. 

எனினும், தனது குமாரர்கள் செய்த இக்காரியத்தை, யாக்கோபினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பகையை நினைத்து நினைத்து பயப்பட்டுக்கொண்டிருப்பதே யாக்கோபின் பழக்கமாயிருந்தது. லாபானின் கைகளுக்குத் தப்பி, ஏசாவின் கைகளுக்குத் தப்பி, இப்பொழுதோ இவர்களின் கைகளில் எல்லாவற்றையும் இழந்துபோய்விடும் நிலை உண்டாகிவிடுமோ என்று யாக்கோபு பயந்திருக்கக்கூடும். எனவே, யாக்கோபு தன் குமாரர்களாகிய சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றும், கூறுகின்றான் (ஆதி 34:30). யாக்கோபின் இந்த வார்த்தைகள், அவன் தொடர்ந்து சுக்கோத்திலேயே இருந்துவிட தீர்மானித்திருந்தான் என்பதையே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலையிலேயே, தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போ என்றார் (ஆதி 35:1). 

எனினும், எதிரிகளை நினைத்து யாக்கோபு பயந்தது மாத்திரமல்ல, தன்னுடைய குமாரரையே சபிக்கும்படியாகவும் அது அவனைத் தள்ளிற்றே. யாக்கோபின் கோபம் குமாரர்கள் மேல் திரும்பிற்றே. சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்கள் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன் (ஆதி 49:5-7) என்றல்லவோ கூறினான். 

எனினும், யாக்கோபு பிரயாணப்பட்டபோது, அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள் (ஆதி. 35:5). நம்முடைய வாழ்க்கையிலும் பிரயாணத்தைத் தொடங்கினால், பயங்கள் நம்மை விட்டுப் பிரிந்துபோய்விடும். பெத்தேலுக்கு யாக்கோபு வந்தபோது, அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான் (ஆதி 35:5-7). சகோதரனால் உண்டாகும் ஆபத்தோ, சத்துருவினால் உண்டாகும் ஆபத்தோ, நாம் வந்துசேரவேண்டிய இடம் ஆண்டவருடைய சமூகமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக