குணமா? பூரண சற்குணமா?
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். (ஆதி 19:2,3)
அறிந்தவர்களை மட்டுமே வீட்டினுள் அழைத்து உபசரித்துவிட்டு, அறியாதோரை வீதியிலேயே விட்டுவிடுவது, நீதிமான்களின் குணமல்ல; அது அந்நியர்களுக்கும் ஆபத்தாகவே முடியும். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷpத்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் (மத் 5:46-48) என்கிறாரே இயேசு கிறிஸ்து. உபசரிப்பது 'குணம்', அந்நியரையும், சத்துருக்களையும் உபசரிப்பதோ 'பூரண சற்குணம்.' பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொண்டால் மாத்திரமே இச்சத்தியம் சாத்தியம் (கொலோ. 3:14); இல்லையெனில், சகோதரர்களைச் சார்ந்ததாகவே சரிந்து கிடக்கும். 'உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு' (மத். 19:21) என்றபோது, அந்த வாலிபனுக்குள் 'பூரண சற்குணம்' இல்லையே. சிலருடைய வீட்டை சகோதரர்களே ஆக்கிரமித்துக்கொண்டதால் அந்நியருக்கு அங்கே இராத்தங்கக் கூட இடமில்லை.
கொர்நேலியு தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். எனவே, உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது (அப் 10:4) என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. சகோதரர் வரை மட்டுமல்ல, தேவசந்நிதி வரை எட்டட்டும் நமது உபசரிப்பு.
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் (மத் 5:44,45). உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார் (நீதி 25:21,22). அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக (லூக் 14:12-13) என்றும் இயேசு போதித்தாரே.
அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார் இயேசு (லூக் 14:14). நெருங்கின வட்டத்தைத் தாண்ட இயலாமல், உறவினாலேயே வேலியமைத்து, அந்நியரை தங்கள் வாழ்க்கையில் உள்ளே விடாத மக்கள் இன்றும் உண்டே. சத்தியத்தைச் சார்ந்து அல்ல சகோதரர்களைச் சார்ந்தே அவர்களது பேருந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நம்முடைய வீடு நாம் நேசிப்பவர்களுக்காகவும், நம்மை நேசிப்பவர்களுக்காகவும் மாத்திரம் திறந்திருந்து, அந்நியருக்கு அடைபட்டிருக்குமென்றால் லோத்துவின் வாழ்க்கை நமக்குப் பாடமாகவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக