பொன்னும், பெண்ணும்
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்; அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல், கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபேக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான். (ஆதி 22:20-22)
'இந்தக் காரியங்கள் நடந்தபின்பு' என்ற தொடக்கம், கடந்த கால நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டே நிகழ்காலம் கட்டப்படுகின்றது என்பதனையே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. தளர்ச்சியின்றி நாம் முன்னேறும்போது, வளர்ச்சிக்கு நேராகவே அவர் நம்மை வழிநடத்துகின்றார். ஆண்டவரால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்ற காரியங்கள் வாழ்க்கையில் நடைபெறாமல், நாம் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்ற காரியங்கள் மாத்திரமே நடைபெறவேண்டும் என்ற விருப்பம் ஆண்டவருக்கு விரோதமானது.
முதலாவதாக, சோதோமில் இருந்த லோத்து எதிரிகளால் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டதை ஆபிரகாம் கேள்விப்பட்டபோது, அவன் எதிரிகளைத் தொடர்ந்து, அவர்கள் மேல் விழுந்து, சகல பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். சத்துருக்களை ஆபிரகாமின் கையில் ஒப்புக்கொடுத்தார் கர்த்தர். சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்று சொன்னபோது, ஆபிராமை ஜசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் என்று சொன்னான் (ஆதி. 14:12-23). எனினும், சந்ததி இல்லையே என்ற பயம் ஆபிரகாமை ஆட்கொண்டிருந்தது.
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்று சொன்னபோது, ஆபிராம் ஆண்டவரை நோக்கி: நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே என்றான் (ஆதி 15:1,2). அப்பொழுது அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார் (ஆதி 15:4,5). பயமின்றி போராடி பிறருடைய ஆத்துமாக்களைக் காப்பாற்றும்போது, நம்முடைய வாழ்க்கையில் சில காரியங்களைச் செய்ய கர்த்தர் வாக்கு கொடுக்கின்றார்.
இரண்டாவதாக, ஈசாக்கு பிறந்தபோது, இஸ்மவேலை ஆபிரகாம் இழக்கவேண்டியதாயிருந்தது. இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது; என்றாலும், கீழ்ப்படிந்தான் ஆபிரகாம் (ஆதி. 21:11,12). மேலும், ஆபிரகாமின் துரவுகளை அபிமெலேக்கின் வேலைக்காரர்கள் கைவசப்படுத்திக்கொண்டபோது, இந்தக் காரியத்தையும் அபிமெலேக்கிற்கு ஆபிரகாம் அறிவிக்கவில்லை ஆதி. 21:26). இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். (ஆதி 22:1,2) ஆண்டவர் முன்வைத்த சோதனையிலும் ஆபிரகாம் வெற்றிபெற்றான். மனிதர்களால் உண்டாகும் போராட்டங்களை, சோதனைகளை நாம் சந்தித்து அவைகளில் வெற்றிபெறும்போது, நம்மை பொன்னாக்கும்படியாக, அவரே நம்மை சோதிக்க ஆயத்தமாகின்றார்.
மூன்றாவதாக, ஈசாக்கை பலியிடவும் ஆபிரகாம் ஆயத்தமானான். இந்த காரியங்கள் நடந்தபின்பு, ரெபேக்காளைப் பற்றிய அறிவிப்பு ஆபிரகாமுக்கு வந்தது (ஆதி 22:20-22). நமக்குக் கொடுக்கப்பட்டதை பலிபீடத்தில் வைத்துவிட நாம் ஆயத்தமாயிருக்கும்போது, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தினை அவரே நமக்காக ஆயத்தம் செய்கிறார். அப்படியே, ஆபிரகாமின் குமாரனான ஈசாக்கிற்கு மனைவியாகவிருக்கும் ரெபேக்காளை, அப்பொழுதுதே ஒரு மனிதனைக் கொண்டு ஆண்டவர் அறிவித்துவிட்டார். பொன்னாக மாறியதும், பெண் தேடி வந்தது. (நீதி. 12:14, யாக். 1:12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக