பிரியம் தரும் பிணை
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள்பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. (ஆதி 29:20)
பிரியமானவைகள் கண்களுக்கு முன் இருக்கும்போது, அவ்விடத்தை விட்டுப் பிரிவதற்கோ மனிதர்களுக்கு மனமிருப்பதில்லை. உணவிற்காகவும், உறைவிடத்திற்காகவும் மாமனாகிய லாபானிடத்தில் யாக்கோபு ஒட்டிக்கொண்டிருந்தபோதிலும், பிரியமானவளாக யாக்கோபு அவனது கண்களுக்குத் தென்பட்டதும், அங்கிருந்து அவன் பிரிந்து செல்லாததற்கு ஓர் காரணமே. கிணற்றண்டையில் ராகேலை கண்டபோது, அவளை முத்தஞ்செய்தான் யாக்கோபு; இதுவே, அவள் மீதான பாசத்தின் தொடக்கமாயிருந்திருக்கக்கூடும். இந்த முத்தமே, 'அவனது மொத்த சம்பளமும் ராகேல்தான்' என்பதை முதலிலேயே நிர்ணயித்துவிட்டது என்றால் அது மிகையல்ல. எனவே, 'சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்?' என்று கேட்டபோது, 'ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்' (ஆதி. 29:18) என்றான் 'நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா?' (ஆதி. 29:15) என்று லாபான் கேட்பதினால், 'சும்மா வேலை செய்யவும் யாக்கோபு ஆயத்தமாயிருந்தான்' என்பது நாம் அறிந்துகொள்ளவேண்டியது. ராகேலுக்காக லாபானின் வீட்டில் இருந்தாலே போதும் என்று அவன் நினைத்திருக்கக்கூடும். யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தபோது, அவள்பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது (ஆதி 29:20).
இதே மனநிலையினையே மீண்டும், யாக்கோபை மடக்குவதற்கு உபயோகப்படுத்துகின்றான் மாமனாகிய லாபான். ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் (ஆதி 29:25) என்று யாக்கோபு கேட்டபோது, லாபான் யாக்கோபை நோக்கி, இவளுடைய ஏழு நாளை நிறைவேற்றும்; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான் (ஆதி. 29:27). யாக்கோபினிடத்தில் லாபான் பேசும் விதத்தின் வித்தியாசத்தை நாமும் விளங்கிக்கொள்வது அவசியமானது. 'ஏழு நாளை நிறைவேற்றும்' என்று லாபான் சொல்லும்போது, ஒருவேளை யாக்கோபு 'ஏழு நாள்தானே' என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காக, 'ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய்' என்று திரும்பக் கூறுகின்றான். அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான் (ஆதி 29:28) என்றே யாக்கோபின் மனநிலையினையும் வேதம் வர்ணிக்கின்றது. எந்த மனநிலையோடு சத்துருவினிடத்தில் நாம் காணப்படுகின்றோமோ, அந்த மனநிலையிலேயே அவன் நம்மை சிக்கவைத்துவிடுவான். பிரியமானதைத் தன் கையில் வைத்துக்கொண்டு, தன்னிடத்திலிருந்து நம்மை பிரிந்துசெல்ல அனுமதிக்கமாட்டான். பிரியமானவைகளுக்காக நாம் பிணைக்கைதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது; வாழ்க்கையையே வேலிக்குள் அடைத்துவைத்துவிடக்கூடாது. விரும்பாதவைகளை வாங்கிக்கொண்டால்தான், விரும்பினவைகள் கிடைக்கும் என்ற விதிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது.
நியாயப்படி நமக்குக் கிடைக்கவேண்டியவைகள் கிடைக்காமற்போகும்போது அல்லது மற்றொன்று தரப்படும்போது நம்முடைய நிலை என்ன? ராகேலுக்குப் பதிலாக லேயாள் கொடுக்கப்பட்டபோது, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நினைத்து யாக்கோபு லாபானின் வீட்டைவிட்டுச் சென்றுவிடவில்லை; மாறாக, தான் விரும்பினது கிடைக்கும்வரை லாபானின் வீட்டிலேயே இருந்தான். ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான் (ஆதி 29:30) என்ற யாக்கோபின் செயல், பாசம் என்ற குழிக்குள் இருந்த அவனது குணத்தையே காட்டுகின்றது. ஏற்கனவே ஏழு வருஷம் ராகேலுக்காக வேலை செய்தான்; எனினும் கிடைத்ததோ லேயாள். மீண்டும் ஏழு வருஷம் வேலை செய்தபோது ராகேல் கிடைத்தாள்; என்றபோதிலும், ராகேலுக்காக 'பின்னும் ஏழு வருஷம்' யாக்கோபு வேலை செய்தான்; மொத்தத்தில் அது இருபத்தோரு வருட உழைப்பு. யாக்கோபு ராகேலோடு பிணைக்கப்பட்டிருந்தான்; ஆனால், பிரியத்தினால் பிணைக்கப்பட்டிருந்தால், பரலோக மணவாளனுக்காக செய்யும் பணியும் நமக்கு இப்படியே தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக