புதன், 13 அக்டோபர், 2021

ஆலயமும், அலங்காரமும் (ஆதி 35:2)

 ஆலயமும், அலங்காரமும்



அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். (ஆதி 35:2)


நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) என்று எழுதுகின்றார் பவுல். சத்துருவின் வழிகளில் நாம் நடந்தாலோ, விழிகளால் சத்துருவின் வழிகளை நாம்; பார்த்துக்கொண்டேயிருந்தாலோ, கழிவுகள் நமது கால்களில் ஒட்டிக்கொள்ளக்கூடும்.  நேர்மையான நமது வாழ்க்கையில், கோணலான குணத்தை அது விதைத்துவிடும். யாக்கோபுடன் பயணித்த மனிதர்களின் வாழ்வில் நடந்தது இதுவே. 

சுக்கோத்தில் யாக்கோபு தங்கியிருந்தபோது, ஆண்டவரை அறியாத சீகேம் மனிதர்களின் பழக்கவழக்கங்கள், வழிபாடுகள் யாக்கோபின் மனிதர்களையும் பற்றிக்கொண்டது. அவர்களுடைய ஆடைகளில், ஆபரணங்களில், காதணிகளில் என அனைத்திலும் அது பிரதிபலித்தது. நேசித்த மனைவியாகிய ராகேல் தன் தகப்பனாகிய லாபானின் தெய்வங்களைத் திருடிக்கொண்டுவந்திருந்தபோது (ஆதி. 31:32), லாபான் யாக்கோபின் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், வேறு எந்த சுரூபங்களையும் கண்டுபிடிக்கவில்லை 

(ஆதி. 31:34,35); அப்படியென்றால், யாக்கோபின் மனிதர்களிடத்தில் காணப்பட்ட இந்த அந்நிய தெய்வங்கள் எங்கிருந்து வந்தன? வழிகளில் விழிகளில் பட்டவைகளையெல்லாம் யாக்கோபின் மனிதர்கள் வீட்டுக்குள் கொண்டுவந்ததினாலேயே. மேலும், 'உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு' என்று யாக்கோபு கூறும் வார்த்தைகள், அவன் அதனை அறிந்திருந்ததையே சுட்டிக்காட்டுகின்றது.  

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்று யாக்கோபு சொன்னபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும் கொடுத்ததோடு, தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான் (ஆதி. 35:3,4). அந்நிய தெய்வங்களைப் புதைத்தது சரி; எனினும், காதணிகளையும் கழற்றி புதைத்தது ஏன்?

காதணிகளை அணிந்துகொள்வது தவறல்லவே; விசுவாசிகளின் தகப்பனான ஆபிரகாம், தன் மகனாகிய ஈசாக்கிற்குப் பெண் பார்க்கும்படியாக தன்னுடைய ஊழியக்காரனை அனுப்பியபோது, சகலவிதமான உச்சிதமான பொருட்களைக் கொடுத்து அனுப்பியதோடு (ஆதி. 24:10), காதுகளில் அணிய காதணியையும், கைகளில் அணிய கடகங்களையும் (ஆதி. 24:30) கொடுத்து அனுப்பினானே. மேலும், மேலும், மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கை கொண்டுவந்து செலுத்துங்கள் (யாத். 35:4,5) என்று சொன்னபோது, மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான் (யாத் 35:22) என்றும் வாசிக்கின்றோமே. 

இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையில், காதணிகள் கன்றுக்குட்டியானது. எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் அந்தப் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள் (யாத். 32:3,4). ஆனால், யாக்கோபின் மனிதர்களோ, அந்நிய தெய்வங்களுக்கடுத்தவைகளை வழிகளிலே வாங்கி அவைகளை காதணிகளாக அணிந்திருந்திருக்கக்கூடும் (உபா. 7:25; நியா.8:26) எனவே, கர்த்தருக்கு அருவருப்பான அவைகள் கழற்றப்பட்டு கர்வாலி மரத்தடியிலே புதைக்கப்பட்டன. ஆலயமான ஜனங்களுக்குள் அந்நிய தெய்வங்கள் வந்ததால், அலங்காரமாக அவைகளின் ஆபரணங்களும் வந்துவிட்டது. நம்முடைய வாழ்க்கையிலும், உள்ளத்தில் அந்நிய தெய்வமிருந்தால், உடலிலும் அவைகளின் அலங்காரமே தென்படும். புதைக்கவேண்டியவைகளோடு நாம் புறப்பட்டுச் சென்றுவிடக்கூடாது.

இன்றும் இப்படிப்பட்ட நிலை காணப்படுகின்றதே. கைகளிலும், காதுகளில் என்ன அணிகிறோம் என்று அறியாமலேயே, அந்தகாரத்தின் ஆளுகைக்குள் சிக்கிக்கொள்ளும் மக்கள் உண்டே.  சத்துருவின் முகத்தைக் காட்டும் வஸ்திரங்களும், ஆபரணங்களும், சிகை அலங்காரங்களும் நாகரீகம் என்ற பெயரில் ஜனங்களுக்குள் நுழைந்துவிட்டதே. சரீரமாகிய ஆலயத்தை சத்துருவின் ஆபரணங்களால் அலங்கரிக்காதபடி எச்சரிக்கையாயிருப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக