திங்கள், 11 அக்டோபர், 2021

பீறலை உண்டாக்கும் பிணைப்பு (ஆதி 21:9,10)

 பீறலை உண்டாக்கும் பிணைப்பு  



பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். (ஆதி 21:9,10)


மனநிலையில் மாற்றம் உண்டாகாமல், தேவைகளுக்காக மாத்திரமே சார்ந்திருப்போர், எந்நேரமும் பிறரை சரித்துவிடக்கூடும். சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான் (ஆதி 16:2). எனினும், ஆபிரகாம் ஆகாருக்குப் பெற்ற குமாரனைக் குறித்த இருவரது பார்வையும் வித்தியாசமானதாகவே காணப்பட்டது. ஆபிரகாம் இஸ்மவேலை 'தன் மகனாகப் பார்த்தான்' தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது (ஆதி 21:11) என்றே வாசிக்கின்றோம். ஆனால், சாராளோ இஸ்மவேலை 'அடிமைப்பெண்ணின் மகளாகப் பார்த்தாள்.' எனவே ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் (ஆதி. 21:12) என்று தனது ஆதங்கத்தை வார்த்தைகளில் வெளிகாட்டுகின்றாள். எனினும், ஆண்டவரோ, அடிமைப்பெண்ணின் மகனும் 'உன் வித்தாயிருக்கிறபடியால்' (ஆதி. 21::13) என்று சுட்டிக்காட்டகின்றார். இஸ்மவேல், முள்ளுள்ள இடங்களில் விழுந்த ஆபிரகாமின் வித்தாகவே காணப்படுகின்றான். கர்த்தர் எத்தனையாய் ஆபிரகாமின் வித்தாகிய இஸ்மவேலைக் காத்துவந்தாலும், எகிப்து என்னும் முள் ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனான இஸ்மவேலை எத்தனையாய் நெருக்கினது என்பதை இஸ்மவேலின் வாழ்க்கையிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியுமே. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது (மத் 13:7) என்று வாசிக்கின்றோமே. ஆகார் என்ற நிலத்தின் ஆபிரகாமின் வித்து முளைத்தாலும், ஆகாரின் வாழ்க்கையில் எகிப்து தேசத்தின் முட்களும் அவனை நெருக்கும்படியாக கூடவே வளர்ந்துகொண்டுதானிருந்தன. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது (மத் 13:8) என்றார் இயேசு கிறிஸ்து. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி 26:12) என்ற வசனம் மனைவியாகிய சாராள் என்னும் நல்ல நிலத்தில் விழுந்த ஆபிரகாமின் வித்தைத் தொடரும் பலனைத்தான் குறிக்கின்றதோ! 

ஆபிரகாமின் இந்த நிலையை இன்னும் புரிந்துகொள்ளவேண்டுமெனில், இயேசு கிறிஸ்துவின் போதனை ஒன்றை நினைவுக்குக் கொண்டுவருவது சரியானது. ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார் (மத் 9:16,17) இயேசு கிறிஸ்து. கோடி வஸ்திரமான ஆபிரகாமை எகிப்து என்னும் பழைய வஸ்திரத்துடன் இணைக்கவும், புது திராட்சரசமான ஆபிரகாமை எகிப்து என்னும் பழந்துருத்தியில் வார்த்துவைக்கவும் சாராள் முற்பட்டதால்; ஆகாரின் வாழ்க்கையில் அது பீறலை உண்டுபண்ணியது. இன்றைய நாட்களிலும், இப்படிப்பட்ட நிலையில் இணைக்கப்பட்டு, பீறலை அதிமாக்கிக்கொண்ட குடும்பங்கள் உண்டே. கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் ஆவிக்குரியவராகவும், மற்றொருவரோ ஆண்டவரை அறியாதவராகவும் இணைக்கப்படும் குடும்பங்களில் பீறலுக்கான போராட்டங்கள் பின்தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டே.  மாம்சம் ஆவிக்கு 

விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. (கலா 5:17) என்ற வசனத்தின்படி, வௌ;வேறு திசைகளை நோக்கி நிற்கும் இவர்களது பயணங்கள் பேருந்தை நிறுத்திவிடுவதற்கும் பெலனுள்ளவைகள்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக