உபசரிப்பின் ரகசியம்
கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். (ஆதி 18:4,5)
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு (எபி. 13:2) என்று நடந்ததை மனதிற்கொண்டு நமக்கும் ஞாபகமூட்டுகின்றார் எபிரெய ஆக்கியோன். மம்ரேயின் சமபூமியில் மூன்று புருஷர்களை ஆபிரகாம் சந்தித்தபோது, உபசரிப்பின் சிந்தை ஆபிரகாமின் உள்ளத்தில் உருவெடுத்தது. பகலின் உஷ்ணமான வேளையில் ஆண்டவரைச் சந்தித்ததும், அவரிடமிருந்து எதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அல்ல, அவருக்கு எதைக் கொடுக்கலாம் என்றே எண்ணினான் ஆபிரகாம். ஆண்டவரைச் சந்திக்கும்போது, அவரது விருப்பங்களையும் மற்றும் தேவைகளையும் குறித்து பல வேளைகளில் நாம் சிந்திக்கிறதில்லை; மாறாக, நம்முடைய தேவைகளையே அவரிடத்தில் முன்நிறுத்திக்கொண்டிருக்கின்றோம்; விளைவு, அவரை வெறுங்கையாகவே அனுப்பிவிடுகிறோம். ஆண்டவரைச் சந்திக்கும்போது, அவருடைய தேவைகளே நமது கண்களுக்கு முன் நிற்கட்டும்.
இயேசு சீஷர்களை நோக்கி, 'பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்' (லூக் 22:27) என்று உபசரிக்கும் நிலையில் தான் இருப்பதையே உணர்த்துகின்றார். நம்மை முந்தி திருப்தியடையச் செய்கிறவர் அவர்; என்றாலும், 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற் 7:27) என்ற சத்தியத்தையே மனதில் கொண்டவர்களாக, அவரை திருப்திப்படுத்தும் காரியங்களைச் செய்ய நாம் மறந்துவிடக்கூடாது. இயேசு காட்டிக்கொடுக்கப்படும் வேளை வந்தபோது, சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்; தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். (யோவா 13:3-5)
கால்களை அவர்களே கழுவிக்கொள்ளும்படியாக தண்ணீர்கொண்டுவந்து கொடுத்தான் ஆபிரகாம்; இயேசுவோ, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார் (யோவா 13:4,5). 'தண்ணீர் கொண்டுவந்து சீஷர்களுடைய கால்களைக் தாமே கழுவினார் இயேசு.' ஆபிரகாம் கால்களைச் கழுவச்சொல்லிவிட்டு போஜனம் கொடுத்தான்; ஆனால் இயேசுவோ, தான் 'போஜனம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, போஜனத்தை விட்டெழுந்து கால்களைக் கழுவினார்.' மேலும், 'அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்' (மத் 20:28) என்று, சரீரத்தைக் கழுவுவதோடு மாத்திரம் தன் பணிவிடையை நிறுத்திக்கொள்ளாமல், இரத்தத்தினால் ஆத்துமாவையும் கழுவும் பணிவிடையையும் தான் செய்யவிருப்பதை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துகின்றார்.
ஆபிரகாமின் உபசரிப்பு, ஆண்டவரை சற்று தரித்திருக்கச் செய்தது; ஆனால், சோதோமின் அழிவைத் தடுத்து நிறுத்தவில்லை; அனால், இயேசு கிறிஸ்துவோ தனது மாம்சத்தையும் இரத்தத்தையும் கொடுத்து அழிவிலிருந்து ஜனங்களை பாதுகாத்தார். இந்த உபசரிப்பை சுவிசேஷமாக அறிவிப்பது நமது பொறுப்பல்லவோ. வருகையிலே வெறுங்கையனாக அவரைச் சந்திக்கும் நிலை நமக்கு உண்டாகிவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக