விருப்பமும் வீழ்ச்சியும்
பின்பு லோத்து சோவாரில் குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். (ஆதி 19:30)
நமக்கானவைகள் என நினைக்கும் அனைத்தையும் நமது விருப்பத்தின்படி நாமே தெரிந்துகொள்ளுவோமென்றால், அதில் தேவனுடைய தலையீட்டைக் காணுவது இயலாதது மாத்திரமல்ல, தேவையற்ற பிரச்சனைகளையும், பயங்களையும் அத்துடன் சத்துருவின் சக்திகளை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குள்ளாகவும் நாம் தள்ளப்பட்டுவிடுவோம். 'உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்றும், முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்றும் கிறிஸ்து போதித்தாரே. அப்படியே, 'நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக். 1:17) என்று யாக்கோபு எழுதுகின்றாரே. தேவனிடத்திலிருந்து வருகின்ற நன்மையானவைகளைப் புறக்கணித்துவிட்டு, கர்த்தருடைய சுதந்தரத்தில் பங்கடையாமல், புறம்பான இடங்களிலேயே இன்னும் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். லோத்துவும், இப்படியே தனது வாழ்க்கையை புறம்பான இடங்களில் தள்ளிக்கொண்டவனாகவே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தான்.
தேவதூதர்கள் லோத்துவைச் சந்தித்தபோது, 'இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ' (ஆதி 19:12) என்று மட்டுமே கூறினார்கள்; அப்படியே லோத்துவும், 'தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்று மட்டுமே சொன்னான் (ஆதி. 19:14). கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று மட்டுமே சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள் (ஆதி. 19:15); என்றபோதிலும், எங்கே போகவேண்டும் என்று தூதர்கள் லோத்துவுக்கு அப்போது சொல்லவில்லை. அழைப்பினைப் பெற்ற ஆபிரகாமை விட்டுப் பிரிந்து வந்துவிட்டேன்; கர்த்தருடைய தோட்டத்தைப் போல இருக்கிற சோதோம் கந்தகத்திற்கும், அனுபவித்தவைகளெல்லாம் அக்கினிக்கும் இரையாகப்போகின்றன; சோதோமின் சுகம் இனி எங்கே கிடைக்கும்? சோதோமைப் போன்ற பசுமையான பட்டணம் எங்கே இருக்கும்? என்ற நினைவு அவனை தாமதமாக்கியிருக்கக்கூடும்.
இளையகுமாரன் விட்டுவந்த வீட்டிற்கு தகப்பனைத் தேடி திரும்பச் சென்றான் (லூக். 15:18); அசுத்த ஆவியும் கூட விட்டுவந்த இடத்தைத் தேடிச் செல்கிறது (லூக். 11:24); எனினும், அழைக்கப்பட்டவர்களோடு பயணித்துக்கொண்டிருந்த மனிதர்கள், ஏனோ மீண்டும் அழைப்பின் வீட்டை நோக்கி வர மறப்பதும் மறுப்பதும் விகற்பமானதே. இளையகுமாரனின் ஆஸ்தி அனைத்தும் அழிந்துபோனதைப்போலத்தான், லோத்துவின் ஆஸ்திகள் அனைத்தும் அழிவுக்குள்ளானது; எனினும், அவன் ஆபிரகாமைத் தேடி வரவில்லை; சத்துருவினிடத்திலிருந்தும், சோதோமின் அழிவிலிருந்தும், காப்பாற்றுவதற்கு மட்டுமே ஆபிரகாம் பயன்பட்டான்; ஆனால், அழைப்பின் வீட்டை நோக்கி லோத்து நகரவேயில்லை. இன்றும் வீடுதிரும்ப மனதில்லாமல், வீதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம்.
'அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார் (ஆதி. 19:16,17). 'வெளியே போ' என்ற எச்சரிப்பைத் தொடர்ந்து. 'மலைக்குப் போ' என்ற எச்சரிப்பு இறுதியாகப் பிறந்தது; அதனையும் உதறியதாலேயே உபத்திரவம் உருவானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக