முகத்திரை
பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். (ஆதி 31:1,2)
யாக்கோபின் நிமித்தம் லாபானுடைய வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்துக்கொண்டிருந்தபோது, லாபானுடைய குமாரர் ஒன்றும் சொல்லவில்லை; அவைகளை நன்றாக அனுபவித்தார்கள். எனினும், ஆசீர்வாதம் யாக்கோபின் பக்கமாகச் சரியத் தொடங்கினபொதோ, அது லாபானுடைய குமாரர்களுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது. யாக்கோபு செய்யும் வேலைக்கு ஈடாக லாபான் கொடுத்த சம்பளத்தைத்தான் யாக்கோபு தன்னிடத்தில் வைத்திருந்தான். லாபானுக்கு உண்டானயிருந்தவைகள் எதையும் யாக்கோபு எடுத்துக்கொள்ளவில்லை. நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது (ஆதி 30:30) என்று கேட்கும் நிலையிலேதான் யாக்கோபு காணப்பட்டான். இன்றும் லாபானைப் போன்ற மனிதர்கள் உண்டு; அவர்கள், தங்களுடைய தேவைகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் மற்றவர்களைப் பயன்படுத்திக்கொண்டு; மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும், குடும்பத்தைக் குறித்தும், தேவைகளைக் குறித்தும் கவலைப்படாதவர்கள். பெருக்கமான ஆசீர்வாதத்தை யாக்கோபின் மூலமாகப் லாபான் பெற்றுக்கொண்டாலும் (ஆதி. 30:30), யாக்கோபு மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானதை (ஆதி 30:43) லாபானுடைய குமாரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களுக்கு ஈடாக அல்லது தங்களைக் காட்டிலும் மேலாக யாக்கோபின் வசத்தில் ஆசீர்வாதங்கள் சேர்ந்திருப்பதைக் கண்ட லாபானது குமாரர்களின் முகம் வேறுபட்டது. மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படும்போது, நம்முடைய முகம் வேறுபடக்கூடாது.
என் சம்பளமான இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் (ஆதி 30:33) என்று யாக்கோபு சொன்னான்; அப்படியே, லாபானின் வீட்டை விட்டு யாக்கோபு புறப்பட்டுச் சென்றபோது, இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று யாக்கோபைப் பார்த்துக் கேட்டான் லாபான் (ஆதி 31:30). ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான் (ஆதி 31:32); அப்படியென்றால், லாபானுடைய பொருட்கள் எதையும் எடுத்துவிடாதபடி எத்தனை கவனமாய் இருந்திருப்பான் யாக்கோபு. லாபானுடைய ஆசீர்வாதத்தை அல்ல, யாக்கோபுக்குக் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ஆசீர்வாதத்தில் ஒரு பங்கையே லாபான் அனுபவித்துக்கொண்டிருந்தான் என்பதே உண்மை.
இன்றும் எஜமான்களைக் காட்டிலும், வேலைக்காரர்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் மதிக்கப்படும்போது, கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் நிறைந்து வாழும்போது, சில எஜமான்களின் மனம் அதனைப் பொறுத்துக்கொள்வதில்லை. என்னிடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு இத்தனை ஆசீர்வாதங்கள் எங்கிருந்து வந்தன? என்னுடையதை நிச்சயம் அவன் திருடியிருக்கவேண்டும் என்ற சந்தேகப் பார்வையினாலேயே, தங்களுடைய முகபாவனையை அவர்களிடத்தில் வேறுபடுத்திக் காண்பிக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். அந்த மனிதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை மறந்து, ஆசீர்வாதத்திற்கு ஆதாரமானவனை தங்களிடத்திலிருந்து தூரமாக்கிவிடுகிறார்கள். இவர்கள் வாங்கிக்கொள்ள மட்டும் கரங்களை நீட்டுபவர்கள்; கொடுக்கவோ கரங்களை முடக்கிக்கொண்டு, முகங்கோணுபவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக