முதல் அடி
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். (ஆதி 26:3)
ஆண்டவர் காட்டும் இடமே, ஆசீர்வாதங்களை நமது வாழ்க்கையில் கூட்டும். 'இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு' என்று சொல்லும் தேவன், 'இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்' என்று வாக்குப்பண்ணுகிறார். அழைக்கப்பட்ட தேசத்தில் நாம் குடியிருந்தால், அனைத்து தேசங்களையும் அவர் நம்முடைய ஆளுகைக்குள் கொண்டுவருவது நிச்சயம். ஆபிரகாமை ஆண்டவர் அழைத்தபோது, 'கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ' (ஆதி 12:1) என்றே கட்டளை கொடுத்தார்; அது கானான் தேசமே (ஆதி. 12:5). மேலும், கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான் (ஆதி 12:7).
இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொன்னபோதிலும், அதனைத் தொடர்ந்து, நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்கிறார் ஆண்டவர் (ஆதி 12:2,3). அழைக்கப்பட்ட தேசத்தில் ஆசீர்வதிக்கப்படுவது மாத்திரமல்ல, அந்த ஆசீர்வாதம் பூமியின் எல்லையெங்கும் பரவிச்செல்லுவதையே ஆண்டவர் இங்கு குறிப்பிடுகின்றார். ஆனால், இன்றைய நாட்களில், சொந்த தேசமோ அல்லது எந்த தேசமோ, அழைக்கப்பட்ட தேசத்தில் இருந்துகொண்டே அடுத்த தேசத்திற்கு ஆசீர்வாதத்தைப் பரப்பவேண்டிய ஜனங்கள், பல்வேறு தேசங்களுக்குச் சென்று அங்கேயே குடியேறிவிடுகின்றனர். கானானில் பஞ்சம் உண்டானதைப் போல, அழைக்கப்பட்ட தேசத்திலேயே வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆபிரகாமுக்கு எகிப்திலும், ஈசாக்கிற்குக் கேராரிலும் உணவு கிடைத்ததைப்போல, அடுத்த தேசத்தில் காணப்படும் சுகமான வாழ்க்கைத் தரங்கள் அநேகரை அழைக்கப்பட்ட இடத்திலிருந்து அகன்றுவாழச் செய்துவிடுகின்றது. மேலும், கர்த்தர் கொடுத்த தேசத்தினைச் சுதந்தரித்து அதிலேயே சுகமாயிருக்க விரும்புகின்ற அநேகர், அடுத்த தேசத்தையும் சுதந்தரிக்கவேண்டும் என்பதையோ மறந்துவிடுகின்றார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைக்குள் மாத்திரமே வாழும் மக்கள், 'பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்' என்ற வாக்குத்தத்தத்தின் சொல்லில் பொதிந்திருக்கும் பரந்த எல்லையினையோ மறந்துவிடுகின்றனர்.
இயேசு தனது சீஷர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத் 28:18-20) என்று சொன்னாரே. அத்துடன், ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் (மத் 24:14) என்றும் அறிவித்திருக்கின்றாரே.
அப்படியே, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது (மத் 5:14) என்று நமது வெளிச்சம் பரவிச்செல்லவேண்டிய எல்லையைச் சுட்டிக்காட்டியிருக்கின்றாரே. மரக்காலால் மூடிவைக்காமல், வீட்டில் உள்ளவர்களுக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருப்பதுடன், 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத் 5:16) என்று நமது பிரகாசத்தின் எல்லை விரிவாகட்டும். அழைக்கப்பட்ட தேசத்தை நோக்கி முதல் அடி எடுத்துவைத்தால் மாத்திரமே, 'தேசங்கள்' என்ற மறு அடி சாத்தியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக